அந்தக் குழந்தையே நாம்தான்!

‘நெவடா’ பாலைவனம்... அமெரிக்காவின் ஒட்டுமொத்த மணற்பரப்பையும் அள்ளிக் கொட்டி விரவியது போலக் கிடக்கும் திகில் பிரதேசம்! ஒவ்வொரு ஆண்டும் பர்னிங் ஃபெஸ்டிவல் இந்த ஏரியாவில் அதிகப் பிரசித்தம். இதுபற்றி டைம்பாஸில் ஏற்கெனவே எழுதி இருக்கிறோம். ஒரு வாரம் நீடிக்கும் இந்தத் திருவிழாவில் 10,000-த்துக்கும் மேலானவர்கள் நாடெங்கிலும்  வந்து கலந்துகொள்வார்கள். ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், வித்தியாச விரும்பிகள் கலந்துகொண்டு விதவிதமான படைப்புகளைச் செய்து மற்றவர்களை அசத்துவார்கள். கலைத்தாயின் ஊற்றிடமாக நிரம்பி வழியும் நெவடா பாலைவனம், இந்த ஆண்டு நடந்த ‘பர்னிங் ஃபெஸ்டிவல்’ சற்று வித்தியாசமான படைப்புகளால் அதிகம் உலகக் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக உக்ரைன் நாட்டின் சிற்பியான அலெக்ஸாண்டர் மிலோவ்வின் படைப்பு. 59 அடி நீளம் 18 அகலம், 24 அடி உயரம் கொண்ட வித்தியாசமான சிலைதான் அது (சிலையா என்று படத்தைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்). இந்தப் படைப்பின் தலைப்பே ‘லவ்’ தான்.

உலோகங்களைக் கொண்டு சிற்பமாக இரண்டு உருவங்களை சில்-அவுட்டாக வடிவமைத்தவர் அதன் உள்ளே இரண்டு குழந்தைகளின் உருவங்களை அழகாக வைத்திருக்கிறார். வெளியே தனித்தனித் தீவாக இருக்கும் ஆண்-பெண் இனம் மனதளவில் நெருக்கமாகத் துடிக்கும் குழந்தமை கொண்டவர்கள் என்பதை விளக்குவதுதான் இதன் தீம். இதில் அதிநுட்பமாகத் தனித்தனியாக எதிரெதிர் திசையில் அமர்ந்திருக்கும் ஆண், பெண் உருவங்களைக் கூண்டு போல வடிவமைத்திருக்கிறார். சூரியன் மறையும்போது அந்த இரண்டு குழந்தை உருவங்கள் மட்டும் கரிய நிறத்தில் இன்னமும் நெருங்கிச் செல்வதைப்போல உணர்வைத் தரும் விதத்தில் அழகாக வடிவமைத்திருக்கிறார். ‘முழு இருட்டானதும் அந்த உலோகக் குழந்தை உருவத்தின் மீது பூசப்பட்ட ரேடியம் பளிச் நிறத்தைத் தர, மனிதனின் இருண்மையின்போதுதான் குழந்தைமை, அன்பு, காதல் போன்ற உணர்வுகள் அவசியம் தேவை என்ற கான்செஃப்ட்டின் படி இதை வடிவமைத்தேன்’ என்கிறார்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick