“நான் சாதிக்கு எதிரானவன்!”

ழுத்தாளராக இருந்து நடிகராக மாறி, பல படங்களில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் வேல ராமமூர்த்தியுடன் பேசியதில்...

‘‘நடிப்பு ஆர்வம் ஏற்கெனவே இருந்ததா?’’

“நடிகனாகணும்னு நான் நினைச்சதே இல்லை. இயக்குநர் விக்ரம் சுகுமாரன், ‘என்கிட்டே ஒரு கதை இருக்கு, உங்களுக்கு செட்டாகும். நடிக்கிறீங்களா?’னு கேட்டார். எழுத்தாளரா இருக்கோம், இப்படியே இருந்துட்டுப் போவோமே எதுக்கு நடிச்சு ரிஸ்க் எடுக்கணும்னு தோனுச்சு. ரெண்டு மாசம் விடாம என்னைத் துரத்திக் கதை சொன்னார். பிடிச்சிருந்துச்சு, அந்த கேரக்டரை என்னால பண்ண முடியும்னு தோணுச்சு. சரின்னு ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நடிச்சேன். இப்போ ‘சேதுபதி’யில் வில்லன் வரை வந்து நிற்குது. இன்னொரு விஷயம் நான் இதுவரை நடிச்ச அஞ்சு படங்களும் சூப்பர் ஹிட். ஒரு எழுத்தாளனா இருக்கிறதுல அட்வான்டேஜ் என்னன்னா, இயக்குநர்கள் என்கிட்டே என்ன எதிர்பார்க்கிறாங்கனு தெளிவாப் புரிஞ்சுக்க முடியுது. அதை அப்படியே வெளியில கொண்டு வந்திடுறேன் அவ்வளவுதான். நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக நாடகங்களை இயக்கி நடிச்சு தமிழ்நாடு முழுக்கக் கொண்டுபோய் சேர்த்திருக்கேன். அந்த அனுபவம் இப்போ சினிமாவில் கை கொடுக்குது.’’

‘‘எழுத்தாளரா இருக்கிறதுக்கும் நடிகரா இருக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?’’

“எழுதும்போது இலக்கியங்கள் படிக்கிற ஆர்வம் உள்ள ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் மட்டும்தான் போய்ச் சேரும். ஆனா சினிமா அப்படி இல்லை. நம்மை எல்லோர் வீட்டுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்குது. இப்போ முன்ன மாதிரி சாதாரணமாத் தெருவுல நடந்து போக முடியலை. வழக்கமா டீ குடிக்கிற கடைக்குக்கூடப் போகமுடியலை. ஒரே அன்புத்தொல்லையா இருக்குப்பா!’’

‘‘நீங்க ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த படங்களில் மட்டும் தொடர்ந்து நடிக்கிறது மாதிரி ஒரு பிம்பம் இருக்கே?’’

‘பாயும்புலி’, ‘ரஜினி முருகன்’, ‘சேதுபதி’ படங்கள்ல நான் அப்படி நடிக்கலையே. ‘சேதுபதி’யில மதுரை டான் கேரக்டர்லதானே நடிச்சேன். அது வேற ஒண்ணும் இல்லை. என்னுடைய உடல்வாகு அப்படி இருக்கிறதால அந்த மாதிரி ஊர்ப் பெரியவர் கேரக்டருக்கு கூப்பிடுறாங்க. மற்றபடி நான் கடவுள், சாதி, மதத்துக்கு எதிரானவன்.’’

‘‘ ‘குற்றப்பரம்பரை’ பாரதிராஜா இயக்க இருந்தார். இப்போ பாலா இயக்குறார். என்ன ஆச்சு?’’

‘‘இல்லை. நானும் பாலாவும் சேர்ந்து பண்றோம். பாலா இயக்குகிறார்.’’

‘‘அடுத்து என்ன படங்கள் பண்றீங்க?’’

‘‘ ‘குற்றப்பரம்பரை’யில், கதை, வசனம் எழுதுவதோடு நடிக்கவும் செய்றேன். ‘கொம்புத்தேனு’னு ஒரு படம். ஒரு ஊரில் இருக்கும் சமத்துவபுரத்தில் பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்றாங்க. அங்கே இருக்கும் ஒரு பெரியவர் ரோல் எனக்கு. இது ராமநாதபுரம் சம்பந்தப்பட்ட கதை. அந்தப் பகுதியில் இருக்கும் சித்தர்கோட்டைங்கிற ஊர்ல ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. பொதுவா என்கிட்ட வர்ற எல்லாப் படங்களையும் நான் ஏத்துக்கிறது இல்லை. செலக்ட் பண்ணி நடிக்கிறேன்.’’

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick