நான் சின்னத்திரை கோவை சரளா!

விஜய் டி.வி-யின் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் விதவிதமான கெட்டப்களில் கலந்துகொண்டு அசத்துபவர், ஜார்ஜ் விஜய் நெல்சன். நடிகராகவும் சில படங்களில் தலைகாட்டியிருக்கும் நெல்சன், தீவிரமான சமூகசேவகரும்கூட! ஸோ... கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியஸ் எனக் கலந்துகட்டி பேசுகிறார், ஜார்ஜ் விஜய் நெல்சன்.

‘‘படிச்சதே சமூகவியல்தான் பிரதர். விஜய், சூர்யா எல்லாம் காலேஜ்ல என்னோட சீனியர்கள். மணிரத்னம், சுஹாசினி, ரேவதி, ரோகிணினு பல பேர் சேர்ந்து நடத்துற பான்யான் தொண்டு நிறுவனத்துக்காகத் தன்னார்வலரா வேலை பார்க்கும்போதுதான், நாமளும் இந்த மாதிரி ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. ‘ட்ரீம் மேக்கர்ஸ்’னு ஓர் அமைப்பை ஆரம்பிச்சு, ஈவென்ட் மேனேஜ்மென்ட், சிறப்பு நிகழ்ச்சிகளோட சேர்த்து, சமூகசேவையும் செய்ய ஆரம்பிச்சேன். சினிமாவுல எனக்கான கதவைத் திறந்துவிட்டது சுஹாசினி மேடம். ‘கடல்’ படத்தில் நடிச்சேன். சின்னத்திரையில நடிகர் ஜெயச்சந்திரனும், ‘அது இது எது’ இயக்குநர் தாம்ஸனும் எனக்கு ஓப்பனிங் கொடுத்தாங்க’’ சுருக்கமான வரலாற்றுடன் ஆரம்பித்தார் ஜார்ஜ்.

‘‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மானு பேசி, லட்சுமி ராமகிருஷ்ணனை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டீங்களே பாஸ்?”

‘‘அய்யய்யோ... அப்படியெல்லாம் நடக்கும்னு நாங்க கனவுலகூட நினைக்கலைங்க. உலகமே பார்த்த எபிஸோட் அது! நம்ம தனுஷ் சாருக்கு, அந்த எபிஸோட் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம். இயக்குநர் பாலாஜி மோகன், அந்த எபிஸோடைப் பார்த்துதான், எனக்கு வாய்ப்பே கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்ல தனுஷ் என்னை எப்படிக் கூப்பிட்டார்னு நினைக்கிறீங்க... ‘வாய்யா... ஒத்தரோசா!’னுதான். தவிர, எனக்காக ‘மாரி’ படத்துல பட்டாசு போடுற சீனை ஸ்பெஷலாவே உருவாக்கினாங்க! மத்தபடி, அவங்களைப் புண்படுத்துறது எங்க நோக்கம் இல்லை. ஆனா, இப்போ பல பேர் பலவிதமா பயன்படுத்துறாங்க. அதுதான் அவங்களை ரொம்ப பாதிக்குதுனு நினைக்கிறேன். நடிகையா மட்டுமில்லாம, லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம், சிறந்த சமூக சேவகி.’’

‘‘தி.மு.க அந்த வசனத்தை வெச்சுதான் பிரசாரத்தை ஆரம்பிச்சிருக்காங்க. வார்த்தைக்கே இந்த மதிப்புனா, நீங்களே பிரசாரத்துக்குப் போனா..?”

‘‘ஒருவேளை, இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு ‘இது நல்ல ஐடியாவா இருக்கே’னு அவங்க கூட்டிக்கிட்டுப் போனா, ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!’னு அவங்ககிட்டேயே சொல்லிட்டு ஓடிருவோம்.’’

‘‘நிறைய கெட்டப் போடுறீங்க. ‘சின்னத்திரையின் கமலஹாசன்’னு பேரு வாங்கணும்னு ஆசையோ?”

‘‘அதுக்குத் தகுதியான ஒரே ஆள், என் நண்பர் ஜெயச்சந்திரன்தான். நடிக்கும்போது பாருங்களேன்... அவரோட கண் இமைகூட நடிக்கும். மத்தபடி, நான் லேடீஸ் கெட்டப்தான் அதிகமா போட்டிருக்கேன். அதனால, ‘சின்னத்திரையின் கோவைசரளா’ பட்டத்தை நான் மனப்பூர்வமா ஏத்துக்கிறேன். கோத்துவிட்டதுக்காக, ஜெயச்சந்திரன் மன்னிப்பாராக.’’

‘‘காமெடியனாக இருந்துகொண்டு சமூகசேவைனா, காமெடியாதானே பார்ப்பாங்க?’’

‘‘அருமையா கேட்டீங்க. நான் பண்ற நல்ல விஷயத்தைப் பார்த்து, என்னை மாதிரி ஆயிரம் பேர் உருவாகணும்னுதான் ஈவென்ட் மேனேஜ்மென்ட் பண்ணிக்கிட்டே, சமூகசேவையில கவனம் செலுத்தினேன். இப்போ எல்லோரும் என்னை நடிகராவே பார்க்கிறாங்க. இந்த பிம்பத்தை உடைக்கிறதுக்காகவே இன்னும் நிறைய உதவிகள் பண்ணணும்.’’

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick