சந்திரபாபு இறந்தப்போ பிறந்தேன்!

‘குக்கூ’, ‘பிச்சைக்காரன்’ படத்தில் சிரிப்பு ரெளடி கேரக்டரில் வித்தியாசமாக நடித்து நமக்கு கிச்சு கிச்சு மூட்டிய டுப்ளிகேட் சந்திரபாபுவைச் சந்தித்தேன். 

‘‘என்னுடைய நிஜப் பெயர் யோகேஸ்வரன். நாலாவது வரைதான் படிச்சிருக்கேன். அதற்கு மேல் படிப்பு வராமல் ஸ்டீல் பட்டறைக்கு வேலைக்குப் போனேன். நான் பார்க்க அப்படியே பழைய நடிகர் சந்திரபாபுவைப் போல இருக்கேன்னு பல பேர் சொன்னாங்க. டி.வி-யில் சந்திரபாபு நடிச்ச படங்களைப் பார்த்து அவரைப்போலவே ஆடவும் பாடவும் பழகினேன். அப்படியே ஊர் ஊராப் போய் மேடை நிகழ்ச்சிகளும் நடத்திக்கொண்டிருந்தேன். அடுத்து சினிமாவில் குரூப் டான்ஸராக சேர வாய்ப்பு வந்தது. ராபர்ட் மாஸ்டரிடம் போய்ச் சேர்ந்தேன். தமிழ்ப் படங்கள் தவிர்த்து சில தெலுங்குப் படங்களிலும் ஆடியிருக்கேன். லேட்டஸ்டா ராபர்ட் மாஸ்டர் கோரியோகிராஃபியில் ‘எம்.ஜி.ஆர்.’ என்ற படத்தில் ‘சங்கி மங்கி சங்கி மங்கியா’ங்கிற பாட்டுக்கு நடுவில் வரும் ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ ரீமிக்ஸுக்கு நான் ஆடியிருக்கேன். இது தவிர வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளுக்கும் போறேன். துபாய்க்கு மட்டும் இதுவரை 20 முறைக்கு மேல போயிட்டு வந்துட்டேன்’’ என்று அறிமுகம் கொடுத்த யோகேஸ்வரன் என்ற ஈஸ்வர் தொடர்ந்தார்.

‘‘நான் நடிச்ச ‘குக்கூ’ படத்தைப் பார்த்த இயக்குநர் சசி சார் என்னுடைய நடிப்பு பிடிச்சுப்போய் அவர் ஆபீஸுக்கு வரச்சொன்னார். உங்களுக்கு சின்னதா ஒரு போலீஸ் கேரக்டர் வெச்சிருக்கேன்னு சொல்லி ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தார். நான் நடிச்சதைப் பார்த்து மிரண்டு போனவர், உனக்கு வேற ரோல் தரேன்னு ஸ்பெஷலாக் கொடுத்ததுதான் அந்த வில்லன் குரூப்பில் காமெடி கேரக்டர். இப்போ படம் ரிலீஸாகி என் கேரக்டருக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். படத்தில் வண்ணாரப்பேட்டை ஏரியா பாஷை பேசியது ஹை லைட்டா இருக்குனு எல்லோரும் சொல்றாங்க. படம் முடிஞ்சு வெளியில் வரும்போது என்னைச் சுத்தி செல்ஃபி எடுக்க ஒரு கூட்டமே கூடிடுச்சு.’’

‘‘சந்திரபாபு மாதிரி இருக்கிறது உங்களுக்கு ப்ளஸ்ஸா மைனஸா?’’

‘‘நிச்சயமா எனக்கு ப்ளஸ்தான். ஏன்னா அதனால்தானே இத்தனை வாய்ப்புகள் வந்திருக்கு. இன்னொரு முக்கியமான விஷயம். எந்த வருஷத்தில் சந்திரபாபு இறந்து போனாரோ அதே வருஷத்தில்தான் நான் பிறந்தேன். மறக்கமுடியாத சம்பவம்னா, நாகேஷ் சார், எஸ்.எஸ்.சந்திரன் சார், சச்சு அம்மா எல்லோரும் என்னைப் பாராட்டியிருக்காங்க. குறிப்பா மனோரமா ஆச்சி என் கன்னத்தைப் பிடிச்சுக் கிள்ளி ‘கண்ணா நீ பார்க்க அப்படியே பாபு மாதிரியே இருக்கேடா செல்லம்’னு சொன்னாங்க. ‘பிச்சைக்காரன்’ ஹிட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வருது. கே.எஸ்.ரவிக்குமார் அசிஸ்டென்ட் இயக்கும் ‘கொம்பு’, பரத்துடன் ஒரு படம், ‘காதல்’ சுகுமாரோடு ‘சும்மாவே ஆடுவேன்’னு ஒரு படம்... இப்படி நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டிருக்கு. எப்படியாவது தனுஷ் சார்கூட சேர்ந்து ஒரு படம் நடிக்கணும். அதுதான் இப்போதைக்கு என்னுடைய ஆசை’’ என்று முடித்தார் ஈஸ்வர்.

-ஜுல்பி, படம்: மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick