நண்பிடா!

‘டைட்டானிக்’ படத்தின் காவியக் காதலர்களான கேட் வின்ஸ்லெட்டும் லியோனர்டோ டி காப்ரியோவும் நெருங்கிய நண்பர்களாம். அவர்களின் டூயட் டிப்ஸ் இங்கே...
 

  ‘டைட்டானிக்’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகப் போகின்றன. 1997-ம் ஆண்டு, படம் வெளியாகும்போது, கேட் வின்ஸ்லெட் என்னும் 21 வயது நடிகையைப் பற்றி டிகாப்ரியோ சொன்னது, ‘திரையில் எங்கள் கெமிஸ்ட்ரி தானகவே அமைந்தது. ஆனால், காதல் காட்சிகளின்போதெல்லாம், இருவரும் சிரித்துக்கொண்டேதான் இருந்தோம்’.

2004-ம் ஆண்டு ‘தி ஏவியேட்டர்’ படத்தின் விளம்பரத்துக்காகத் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார் டி காப்ரியோ. படத்தில் கேட் நடிக்கக்கூட இல்லை. ஆனால், என்ன நினைத்தாரோ, சட்டென ‘டைட்டானிக்’ படம் பற்றியும், கேட் தனக்கு எப்படிப்பட்ட ஒரு தோழி என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்.

இருவரும் தத்தம் படங்களில் பிஸியாகி விட்டாலும், 2008-ம் ஆண்டு ‘ரெவல்யூஸ்னரி ரோட்’ படம் மூலம் மீண்டும் இணைந்தனர். இந்தப் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட், படத்தின் இயக்குநர் சாம் மெண்டிஸ் தான் அந்தக் காலகட்டத்தில் கேட்டின் கணவர். சாமிற்கு கேட்-டிகாப்ரியோ உறவு பற்றி நன்கு தெரியும் என்பதால்தான், படம் அவ்வளவு சிறப்பாக வந்தது என கேட் பேட்டியளித்தார்.

‘ரெவல்யூஸ்னரி ரோட்’ படத்திற்காக கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த நடிகை விருது வென்றார் கேட். சிறந்த நடிகருக்கான பட்டியலில் டி காப்ரியோவின் பெயர் இருந்தாலும், அவர் வெற்றி பெறவில்லை.

ஆஸ்கர் விருதுகளில் இருவரின் பெயரும் ஒரே சமயத்தில் பரிந்துரை செய்யப்பட்டது 2005-ம் ஆண்டில்தான். ‘ஈடர்னல் சன்சைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்’ படத்திற்காக கேட்டும், ‘தி ஏவியேட்டர்’ படத்துக்காக டி காப்ரியோவும் சிறந்த நடிகர், நடிகையின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்தனர். என்ன ராசியோ, அந்த ஆண்டு இருவருமே விருது பெறவில்லை.

2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கேட் மூன்றாவது முறையாக நெட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணின் தோழனாக கேட்டை மேடை ஏற்றியதே டி காப்ரியோ தான்.

இந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில், சிறந்த நடிகருக்கான பட்டம் வென்றார் டி காப்ரியோ. பரிந்துரைப் பட்டியல் வெளியானதில் இருந்தே, டி காப்ரியோதான் இந்த முறை ஆஸ்கர் வெல்வார் என பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார் கேட். தான் நடித்த ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ படத்தின் நாயகன் மைக்கல் ஃபாஸ்பெண்டரும் சிறந்த நடிகருக்கான விருதுப் பட்டியலில் இருந்தார். இருந்தும், கேட்டின் ஆதரவுக்கரம் டிகாப்ரியோ பக்கம்தான் இருந்தது.

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick