அசத்தல் திருநங்கைகள்!

ம்மில் முக்கால்வாசிப் பேர் ‘மேட்ரிக்ஸ்’ படம் பார்த்திருக்கிறோம். கொசகொச கான்செஃப்ட்டில் ஹிட்டடித்த அந்த சினிமாவின் இயக்குநர்கள் வாச்சோஸ்கி சகோதரர்கள் (லேரி வாச்சோஸ்கி-ஆன்டி வாச்சோஸ்கி) இப்போது வாச்சோஸ்கி சகோதரிகளாக மாறிவிட்டார்கள்.
 

நான்கு வருடங்களுக்கு முன்பே லேரி வாச்சோஸ்கி, (தற்போது அவர் பெயர் லானா) தான் ஒரு திருநங்கை என ஒரே நாளில் எல்லா அடையாளங்களையும் மாற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார். மீடியாக்களும் பெரிதாய் அதைக் கண்டுகொள்ள வில்லை. ஏனென்றால் ஆன்டி வாச்சோஸ்கி ஹாலிவுட்டில் பிஸியாக இருந்தார். ‘க்ளவுட் அட்லஸ்’, ‘ஜூபிடர் அசென்டிங்’ என அவர் படங்களும் ஹிட்டடித்தன. கடந்த உலக மகளிர் தினத்தன்று தானும் தன் உடன்பிறப்பின் வழியில் திருநங்கையாகத் தன்னை அறிவித்துக்கொண்டார். 48 வயதான ஆன்டி வாச்சோஸ்கி தற்போது தன் பெயரை லில்லி வாச்சோஸ்கி என மாற்றிக்கொண்டதோடு பெண்ணின் தோற்றத்தில் ஆடைகள் அணிகிறார்.

‘பெரும் பாரத்தை இறக்கி வைத்த உணர்வில் இருக்கிறேன். லேரியைப் போல என்னால் உடனடியாக சொல்ல முடியாததற்குக் காரணம் மூன்றாம் பாலினத்தை இந்த உலகம் பார்க்கும் பார்வைதான். ஆனால், உண்மையை மறைக்கவும் முடியாது. உண்மையாக இருப்பதற்காக சில கடினமான முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால், நான் கொடுத்து வைத்தவள். என்னைப் புரிந்துகொண்ட பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சகோதரி கிடைத்திருக்கிறார்கள். உலகமெங்கும் இருக்கும் திருநங்கைகளின் முன்னுதாரணமாய் நான் திகழ்வேன். நானும் லானாவும் விரைவில் படம் இயக்க இருக்கிறோம்’ என்று சொல்கிறார் லில்லி.

லானாவும் லில்லியும் இப்போது பெண்களுக்கான அடையாளங்களோடு திருநங்கைகளாக கம்பீரமாக வளைய வருவதால், கடந்த வாரம் வைரலில் இடம் பிடித்தார்கள். விரைவில் இவர்கள் வாழ்க்கையை சினிமாவாக எடுத்து ஆஸ்கருக்கு அனுப்ப போட்டி எழும் என ஆரூடம் சொல்கிறது ஹாலிவுட் பட்சி!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick