இப்படித்தான் இருக்குமா ‘24’?

சூர்யாவின் ‘24’ கதை எப்படி இருக்கும்? இப்படித்தான் பாஸ் இருக்கும்.

முதலில் ‘24’ என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம். டீசரில் ஐ ஹேவ் கம் ஃபார் மை வாட்ச் என்று சொல்வதிலேயே இது டைம் தொடர்பான படம் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம், அதுதான் பாஸ் ‘24’ டைட்டில்.

கதைக்கு வருவோம். அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என்று மொத்தம். மூன்று சூர்யா. அப்பா ஆத்ரேயா மிகப்பெரிய விஞ்ஞானி. சின்ன வயதில் இருந்தே இவருக்கு ஆத்திரம் அதிகமாக வரும். ஏன் ஹோம் வொர்க்  செய்யவில்லை என்று திட்டிய சயின்ஸ் வாத்தியாரை கல்லால் அடித்து மண்டையைப் பிளக்கும் அளவுக்கு ஆத்ரேயாவுக்கு ஆத்திரம் வரும். வீட்டின் ஸ்டோர் ரூம் பகுதியில் தேவையில்லாமல் இருக்கும் தகர டப்பா, டால்டா டின், மோட்டாரில் கழட்டிய செம்புக் கம்பி, ஸ்க்ரூ எனப் பலவிதமான பொருட்களையும் பயன்படுத்தி புதுவிதக் கருவிகளைக் கண்டுபிடித்து அசத்துகிறார். தொடர்ச்சியாக ஆராய்ச்சியில் ஈடுபடுபவர் ஒருகட்டத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாறிவிடுகிறார்.

பல நாட்கள் போராடி டைம் மெஷின் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அந்த டைம் மெஷின் ஃபார்முலாவை ஒரு கேஷியோ வாட்ச்சுக்குள் வைத்து ஸ்டோர் ரூம் பகுதியில் பத்திரப்படுத்துகிறார். கட்டுசோறும் கருவாட்டுக் குழம்பும் செய்து கொடுத்து மனைவி நித்யா மேனன் 2079-ம் ஆண்டுக்கு அவரை அனுப்பி வைக்கிறார். வந்த ஒரேநாளில் கொண்டுவந்த சாப்பாடு காலியாக, பயங்கர பசியோடு ஹோட்டலைத் தேடி அலைகிறார். வழியில் ஒருவரிடம் விசாரிக்க ‘நாங்கள் மாத்திரைகளைத்தான் சாப்பிடுகிறோம். ஒரு சிலர்தான் இங்கே இன்னும் உணவு சாப்பிடுகிறார்கள்’ என்று சொல்ல ஒரு வழியாக குக்கிராமம் ஒன்றில் அரதப்பழசான ஒரு ஹோட்டலைக் கண்டுபிடிக்கிறார். இங்கு பழமை மாறாமல் பீட்சா, பர்கர், ஸ்ப்ரிங் ரோல் போன்றவை கிடைக்கும் என்று போர்ட் வைத்திருக்கிறார்கள்.

இதுக்கு மேல் இங்கே தாக்குப்பிடிக்க முடியாது என்று முடிவெடுத்து மீண்டும் 2016-ம் ஆண்டுக்கு வருகிறார். வரும் வழியில் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போக, ராஜஸ்தானில் ‘பிகே’ அமீர் தரை இறங்கிய இடத்தில் லேண்ட் ஆகிறது டைம் மெஷின். அதை அங்கேயே விட்டுவிட்டு பொடிநடையாக சென்னையை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். (ஏழாம் அறிவில் தமிழ்நாட்டில் இருந்து சீனாவுக்கே சென்றவர் இதோ பக்கத்தில் இருக்கும் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வர மாட்டாரா?) 

இதற்கு நடுவில் பொங்கலுக்கு வெள்ளையடிக்க நினைக்கும் நித்யா மேனன் வேஸ்ட் ரூமில் இருக்கும் பழைய பொருட்களைப் பேரீச்சைப் பழத்துக்குப் போடுகிறார். அதில் ஃபார்முலா வாட்ச்சும் சேர்ந்து போய்விடுகிறது. வீட்டுக்கு வந்து வாட்ச்சைத் தேடும் ஆத்ரேயா நித்யாவிடம் விசாரிக்க, எடைக்குப் போட்ட விஷயம் தெரிய வருகிறது. ‘ஒருவன் தெருவில் இறங்கி நடந்தா அவனுக்கு எல்லாமே கிடைக்கும்’ என்று ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யா பேசிய வசனம் அவருக்கே நடக்காமல் போகிறது. பேரீச்சைப்பழக்காரனை எங்கு தேடியும் காணவில்லை.

இரும்புக்கடையில் சேகரித்த பொருட்களைப் பிரிக்கும்போது ஃபார்முலா வாட்ச் கடைக்காரரின் கண்ணில் படுகிறது. பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தெரிய அதை அரிய பொருள் என்று சொல்லி ஈ-பேயில் விற்பனைக்கு வைக்கிறார் இரும்புக் கடைக்காரர். கோடீஸ்வர வில்லன் கிரிஷ் கர்னாட் அதை வாங்குகிறார். கிரிஷ் கர்னாட்டிடம் வாட்ச் இருப்பதை அறிந்த ஆத்ரேயா அவரிடம் போய் ‘இது என்னுடைய வாட்ச். நான் ஒரு சயின்டிஸ்ட். அந்த வாட்ச்சில் டைம் மெஷினை உருவாக்கும் ரகசியம் இருக்கிறது’ என்று தன் வாயாலேயே வாக்குமூலம் கொடுத்து வில்லன் கர்னாட்டிடம் மாட்டிக்கொள்கிறார். ‘தருகிறேன்... எனக்கு ஒரு டைம் மெஷின் உருவாக்கிக் கொடுத்தால் தருகிறேன்’ என்று கர்னாட் செக் வைக்கிறார். ஆத்ரேயா மறுக்க, அவரைப் பிடித்து இருட்டு அறையில் கேபிள் டி.வி வொயர்களை வைத்துக்கட்டி கரன்ட் ஷாக் கொடுக்கப்படுகிறது. அந்த அதிர்ச்சியில் கோமாவிற்கு செல்பவர் 20 வருஷமாக அப்படியே இருக்கிறார்.

இந்த 20 வருட இடைவெளியில் ஆத்ரேயாவின் இரண்டு பையன்களும் வளர்ந்து விடுகிறார்கள். தமிழ் சினிமா வழக்கப்படி இரட்டையர்களாய் இருந்தால் ஒருவர் வில்லன்தானே. காணாமல் போன அப்பாவின் மேல் சரியான கடுப்பில் இருக்கிறார் தம்பி சூர்யா. அண்ணன் சூர்யா வீட்டுக்கு அடங்கிய நல்ல பிள்ளையாக இருக்கிறார். அவ்வப்போது சமந்தாவுடன் சமத்தா டூயட் எல்லாம் பாடி ஜாலியாக இருக்கிறார். அம்மா, அப்பாவின் கதையை 20 வருடங்களுக்குப் பின் சொல்ல இருவரும் அதிர்ச்சியாகிறார்கள். நாயின் உடலில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தி அப்பாவின் பழைய கோட்டினை எடுத்து நீட்ட கோட்டை மோப்பம் பிடித்த நாய் கே.கே நகர் பங்களாவில் போய் நிற்கிறது. அதை வீட்டில் இருந்தபடியே ஜி.பி.எஸ் ட்ராக்கிங் சிஸ்டம் மூலம் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். ‘ஒரே கருவில் உதித்தோம் சில நிமிட இடைவெளியில் ஜனித்தோம்’ என்று சண்டைக்குப் போகும் வழியில் பாட்டும் பாடுகிறார்கள். இறுதியில் வில்லன்களை அழித்தார்களா? ஆத்ரேயாவை மீட்டார்களா? என்பது பரபர க்ளைமாக்ஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick