“மக்கள் ஆசைப்பட்டா, முதல்வர் ஆகத் தயார்!”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘தாரை தப்பட்டை’யில் ஆட்டம் போட்ட காயத்ரி ரகுராம் இப்போது அரசியலிலும் பிஸி! பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்த கையோடு, பிரசாரப் பாடல் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருந்தவரைச் சந்தித்தேன். ‘‘போன வருடம் அரசியல்ல அடியெடுத்து வெச்சேன். இந்த வருடம் விருப்ப மனு கொடுத்திருக்கேன். அதனால, ‘தேர்தல்ல நிற்கிறதுக்குதான் கட்சியில சேர்ந்தீங்களோ?’னு கேட்டுடாதீங்க. என் நோக்கமே வேற!’’ என்றபடி அமர்ந்தார் காயத்ரி ரகுராம்.

‘‘மோடி ஜி-க்கு நான் பரம ரசிகை. நல்ல பிரதமர். நல்ல தலைவர். நிறைய நல்ல விஷயங்களைச் செய்றார். அவர் ஆட்சியில நிறைய நல்லதும் நடக்குது. தவிர, பா.ஜ.க-வில் பெண்களுக்கு நிறைய முக்கியத்துவமும் கொடுக்கிறாங்க. இந்தக் கட்சியில இருந்தா மட்டும்தான், நாம நினைக்கிற நல்ல அரசியலை முன்னெடுக்கலாம். இவ்வளவு சிறப்புகள் இருக்கிறதனாலதான் பா.ஜ.க-வில் சேர்ந்தேன். இப்போ தேர்தல்ல போட்டியிட மனு கொடுத்திருக்கேன். சீட்டு கிடைச்சா, எக்ஸ்ட்ரா எனர்ஜியோட நல்லது பண்ணலாம்ல?’’

‘‘நடிகை, நடன இயக்குநர், அரசியல்வாதி... எல்லா ஏரியாவையும் தொட்டுக்கிட்டே வர்றீங்களே?”

‘‘லைஃப் ஒரே மாதிரியா இருந்தா போர் அடிச்சுடாது? அதனால, அப்பப்போ நம்மளை நாமே மாத்திக்கிட்டு களமிறங்கணும். வெவ்வேறு திசையில போய்க்கிட்டு இருந்தாலும், போற நோக்கம் ஒண்ணுதான். அது, மக்களுக்கு நல்லது பண்ணணும்! சினிமாவுல டான்ஸ் மாஸ்டரா நின்னா, 100 பேருக்கு வேலை கொடுக்கலாம். அரசியல்ல ஜெயிச்சா, ஆயிரம் மக்களுக்கு நல்லது பண்ணலாம்!’’

‘‘அரசியல்ல இறங்குனீங்க சரி... கத்துக்கிட்டீங்களா?”

‘‘ம்ம்... எல்லா அரசியல்வாதிகளோட செயல்பாடுகளையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். எல்லோருமே முதல்வர் ஆகிடணும்னு நினைக்கிறாங்க. அவங்க நம்பிக்கை அபாரமா இருக்கு. முக்கியமா, மக்கள்கிட்ட நல்ல பேரு வாங்கிடணும்னு விதவிதமா யோசிக்கிற அவங்க மூளை இருக்கே... ப்பா! ஆனா, மக்களை ரசிக்க வைக்க நாங்க சினிமாவுல என்னவெல்லாம் செய்றோமோ, அதே மாதிரி இவங்க பாலிடிக்ஸ்ல பண்றாங்க. ஸோ... இன்னும் நிறையக் கத்துக்கலாம்!’’

‘‘எல்லோரும் தங்கள் மனுவோட, தலைவருக்கும் ஒரு விருப்ப மனு சேர்த்துக் கொடுக்கிறீங்களே, ஏன்?”

‘‘ஏங்க... தமிழிசை அக்கா எவ்ளோ நல்லவங்க, எவ்ளோ அன்பான தலைவர், அவங்களுக்காக விருப்ப மனு கொடுத்து, நான் கொடுத்த விருப்ப மனுவுல அவங்க போட்டியிட்டு ஜெயிச்சா, சந்தோஷம்தானே? தவிர, அவங்க டாக்டரா இருந்தவங்க. நிறையப் பேரோட பேசிப்பேசி, மக்களோட குறைகள் என்னன்னனு நிறைய தெரிஞ்சு வெச்சிருப்பாங்க.’’

‘‘மயிலாப்பூர் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?”

‘‘அந்த ஏரியா மக்களோட கலாசாரம்தான் என்னோட கலாசாரமும்! அந்த ஏரியாவே அவ்ளோ அழகா இருக்கும். அதை இன்னும் அழகாக்கணும்னு எனக்கு ஆசை. அந்தத் தொகுதி மக்களோட நேரடியான பழக்கம் இல்லைனாலும், காயத்ரி ரகுராம்னா எல்லோருக்கும் தெரியும். அதனால, எனக்கு சீட்டு கிடைச்சு, அந்தத் தொகுதியில நின்னா, கண்டிப்பா வெற்றி பெறுவேன்!’’

‘‘மக்கள்கிட்ட நீங்க எந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்கிறதா நினைக்கிறீங்க?”

‘‘விதிப்படி நடக்கிறதுதான் நடக்கும்னு நம்புறவ நான். கடவுள் நமக்குக் கொடுத்ததை வெச்சுக்கணும். கம்மியா இருக்கே? இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்குமேனு யோசிக்கக் கூடாது. 100 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டரா இருந்திருக்கேன். சில படங்கள்ல ஹீரோயினா நடிச்சிருக்கேன். ‘தாரை தப்பட்டை’யில ஒரு பாட்டுக்கு ஆடினாலும், பாலா சார் எதிர்பார்த்த பெர்ஃபார்மன்ஸைக் கொடுத்திருக்கேன். ஆனா, மக்கள் என்னை மறந்துடலை. அதிகமா திரையில பார்க்கலையே தவிர, காயத்ரி ரகுராம்ங்கிற அடையாளம் அவங்க மனசுல என்னைக்குமே இருக்கு. எனக்கு இது போதும்! ஏன்னா, சினிமா, அரசியலுக்கு நான் பணத்துக்காக வரலை!’’

‘‘படம் இயக்குறதா இருந்தீங்க... அது என்னாச்சு?”

‘‘எடுத்தோம், கவுத்தோம்னு எதையும் பண்ணிடக் கூடாதுல்ல? டைரக்‌ஷன் ரொம்பநாள் ஆசை. அதுக்குதான், அமெரிக்காவுல போய் டைரக்‌ஷன் கத்துக்கிட்டு வந்தேன். இப்போ தேர்தல் வேலைகள் நிறைய இருக்கிறதனால, வேறெதையும் யோசிக்கலை. ஆனா, அடுத்த ஸ்டெப் இயக்குநர்தான். அதுக்கான எல்லா வேலைகளும் நடந்துக்கிட்டு இருக்கு!’’

‘‘அரசியல்ல உங்க ரோல் மாடல்ஸ்?”

‘‘நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி... இப்படிப் பெரிய லிஸ்ட்டு இருக்கே?’’

‘‘ஆளாளுக்கு முதல்வர் ஆகணும்னு ஆசைப்படுறாங்க. உங்களுக்கு எப்படி?”

‘‘என்னை முதல்வர் ஆக்கணும்னு மக்கள் ஆசைப்பட்டா, எனக்கும் ஓகேதான்!’’

- கே.ஜி.மணிகண்டன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick