“அ.தி.மு.க ஒன்றும் வலிமையான கட்சி அல்ல!”

டுமலை சாதி ஆணவப் படுகொலை, மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்த் தனித்துப் போட்டி... என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே! அவரைச் சந்தித்தேன்.

‘‘உடுமலைப்பேட்டை சாதியப் படுகொலை காட்டுமிராண்டித்தனமான செயல். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காட்டுமிராண்டித்தனமான சிந்தனைகள் இன்னும் தொடர்வது வேதனை அளிக்கிறது. கெளசல்யா என்ற அந்தப் பெண், சங்கர் என்பவருடைய சாதி, பின்புலம் அனைத்தையும் தெரிந்துதான் வாழ்க்கைத் துணையாக ஏற்றிருக்கிறார். சங்கரும், அந்தப் பெண்ணை ஏமாற்றவில்லை. பொய் சொல்லி தன்னுடைய சாதியை மறைக்கவில்லை. முழுக்கக் காதலால் இணைந்த இந்த ஜோடியைத்தான் பெண்ணின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் தங்களுடைய வறட்டுக் கெளரவத்துக்காக, இந்தக் கொடூரமான படுகொலையைச் செய்திருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமே பொறுப்பல்ல... இந்தச் சமூகமும், சமூகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சிப்பவர்களும்தான். இளவரசன், கோகுல்ராஜ், சங்கரின் படுகொலைகள்தான் கண்ணுக்குத் தெரிந்தவை. இன்னும் வெளிச்சத்துக்கு வராத கொலைகள் எத்தனையோ? கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் அதிகமான சாதியப் படுகொலைகள் நடந்தேறியிருக்கின்றன. ஆட்சியில் இருப்பவர்கள் இதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் கண்டிக்கவில்லை. இது இன்னும் ரணமாக இருக்கிறது’’ குரல் உடைந்து பேசுகிறார், தொல்.திருமாவளவன்.

‘‘எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் மெளனமாகக் இருக்கக் காரணம். வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற பயம்தானே?”

‘‘வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் அல்ல... பரமக்குடியில் அரச பயங்கரவாதம் அரங்கேறி ஏழு தலித்துகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கண்டனத்தைப் பதிவு செய்யும் மகத்தான வாய்ப்பு தி.மு.க உள்பட பெரிய கட்சிகளுக்குக் கிடைத்தது. ஆனால், குரல் கொடுக்கவில்லை. மேலவளவு படுகொலை நடந்தபோது யாரும் குரல் கொடுக்கவில்லை. சமூகத்தில் மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் தலித்துகளின் நிலைமை இதுதான். தலித்துகளுக்காக யாருமே வாய் திறக்காததுதான், சமூக எதார்த்தமும்கூட!’’

‘‘சங்கரின் படுகொலைக்கு ராமதாஸ் கருத்து தெரிவிக்க மறுக்கிறார். அன்புமணி கண்டிக்கிறார். இது என்ன மாதிரியான அரசியல்?”

‘‘நிருபர்களின் கேள்விக்கு ராமதாஸ் ஆற்றிய எதிர்வினை உலகுக்கே தெரியும். அதுதான் அவருடைய உண்மையான முகம்! ‘தலித் வெறுப்பு’தான், அவருடைய வளர்ச்சிக்கு, அரசியல் மேம்பாட்டுக்கு, அரசியல் வெற்றிகளுக்கு அடிப்படையாகக் கையாளுகிற உத்தி. அதனால்தான் ஈவு, இரக்கம் இல்லாமல், மனிதாபிமானம் இல்லாமல் நடத்தப்பட்டிருக்கும் ஒரு கொடூரக் கொலையைக் கண்டிப்பதற்குக்கூட அவருக்கு மனமில்லை! ஒரு தலைவர் என்றால், மக்களிடம் ஒற்றுமையைப் போதிக்க வேண்டும். அவரையே அறியாமல், ஊடகத்துக்கு முன்பாக தன்னுடைய உண்மை முகத்தை தன்னியல்பாகக் காட்டிச்சென்றுவிட்டார் ராமதாஸ். இவரைப் போன்றவர்கள் எல்லாம் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு அரசியலில் ஈடுபடுவது வேதனை. அதே சமயம், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் கண்டித்திருப்பது, அப்பாவின் மெளனத்திற்கு எதிராக வந்த விமர்சனக் கணைகளைச் சமாளிப்பதற்காக மட்டுமே!’’

‘‘தலைவர்களைவிட, அவர்களின் வாரிசுகள் பரபரப்பாக இயங்குகிறார்கள். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?”

‘‘மன்னராட்சியின் எச்சங்கள்தான், அரசியல்வாதிகளின் தலைவர்கள் அடுத்த அதிகாரமாக வளர்வது. ஆனால், இதை ஜனநாயகம், மக்களாட்சி, மகத்துவமான காலம் என நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பிரதமர், முதல்வர்களை மன்னர்களாகவும், அவர்களின் வாரிசுகளைத் தளபதியாகவும் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக, மன்னராட்சி மனநிலை மக்களிடத்திலேயே இன்னும் மாறவில்லை. மக்களாட்சியின் முக்கியத்துவம் வலிமை பெறவில்லை. அது வலிமை பெறும்போதுதான், இவர்களின் முக்கியத்துவம் தெரியும்.’’

‘‘ம.ந.கூ-யில் விஜயகாந்த் இணைவதற்கும், விஜயகாந்த் தலைமையில் ம.ந.கூ இணைவதற்கும் என்ன வித்தியாசம்?”

‘‘அண்ணன் - தம்பி வித்தியாசம்தான்! மக்கள் நலக் கூட்டணி முன்னாலேயே பிறந்தது. விஜயகாந்த் இப்போதுதான் தனித்துப் போட்டியென அறிவித்திருக்கிறார். ஆக, இனிக் கூட்டணியை உருவாக்கி வலுப்பெறுவதற்குப் பதிலாக, ஏற்கெனவே மக்களிடம் நல்ல கூட்டணியாகப் பெயர் பெற்றுவிட்ட எங்களது மக்கள் நலக் கூட்டணியில் அவர் இணைந்துகொள்வதில் எந்த விதமான கெளரவக் குறைச்சலும் இருக்கப்போவதில்லை. தவிர, மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தால், விஜயகாந்தின் தகுதி, மகிமை, மகத்துவம் எந்த வகையிலும் குறைந்துவிடாது. நான்கு கட்சிகளின் முடிவாகத்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லையே தவிர, ‘மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காது!’ என்று சொல்லவில்லை. எனவே, விஜயகாந்த் வந்தால், தே.மு.தி.க-வின் கருத்துகளைக் கட்டாயம் பரிசீலனை செய்வோம். தவிர, அது ஐந்தாவது கட்சியாக எங்களோடு இடம் பெறாமல், முதல் இடத்தில் இடம் பெறும்! அதனால்தான், அவரை மக்கள் நலக் கூட்டணியில் இணையச் சொல்கிறோம். அதே சமயம், அவர் தலைமையில் நாங்கள் இணைந்தால், ‘தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், பா.ம.க’ ஆகிய ஐந்து கட்சிகளோடு கூட்டு சேரக் கூடாது என்ற எங்களது கொள்கை, இதில் ஏதாவது ஒரு கட்சி தே.மு.தி.க தலைமையை ஏற்றுக்கொண்டு வரும்போது உடைபடலாம். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், நாங்கள் வெளியேற வேண்டிய சூழல் வரும். அப்படிப்பட்ட சூழலில், நாங்கள் வெளியேறினால், எங்களுடைய நன்மதிப்பு பாதிக்கப்படும்!’’

‘‘அ.தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது உங்களுடைய நோக்கம். ஆனால், இது அ.தி.மு.க-வுக்குத்தான் சாதகமாக முடியும் என்கிறார்களே?”

‘‘இது ‘அ.தி.மு.க வலிமையான கட்சி. அசைக்க முடியாத கட்சி’ என்ற மனநிலையால் வருவது. அ.தி.மு.க-வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நின்றால்தான், வீழ்த்த முடியும் என்ற பிம்பத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், உண்மை அது அல்ல! கடந்த காலங்களில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளோடும் வலியச்சென்று கூட்டணி வைத்துக்கொண்ட பா.ம.க விலகி நிற்கிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட விஜயகாந்த் தனித்துப்போட்டி என்கிறார். நாங்களும் தனித்து நிற்கிறோம். ஆக, அ.தி.மு.க-வுக்கு வலிமை இருப்பதாக நான் உணரவில்லை. பொதுமக்களின் மனநிலையும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராகத்தான் இருக்கிறது. காங்கிரஸை அகற்றும்போது, தி.மு.க சிறிய சிறிய கட்சிளோடு சேர்ந்துதான் ஆட்சியைப் பிடித்தது. அதேபோன்ற சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஒரு கூட்டணிதான் வர வேண்டும் என்பது மக்களின் பொதுவான மனநிலையாக மாறியிருக்கிறது. எனவே, பலமுனைப் போட்டிகளில் நடக்கும் இந்தத் தேர்தலில் நாங்கள் முன்வைக்கும் ‘கூட்டணி ஆட்சிமுறை’தான் உருவாகும் என்று நம்புகிறோம்!’’

‘‘உங்கள் கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்று நம்புகிறீர்களா?”

‘‘மறுபடியும் அவருக்கு அழைப்பு விடுத்ததற்குக் காரணம், நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பதால் அல்ல! அவருடைய அணியில் இணைவதற்கு எங்களுக்கு இருக்கும் பாதகங்களைச் சொல்வதற்குத்தான். நாங்கள் எங்களை மிகைப்படுத்திப் பார்க்கவும் இல்லை. அவரைக் குறைத்து மதிப்பிடவும் இல்லை. ஏற்கெனவே சொன்னதுதான். சாதி, மதவாத, ஊழல் நிறைந்த கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொள்வதில்லை என்பது எங்கள் கொள்கை. அது மாறிவிடக் கூடாது. ஆகவே, நண்பர் விஜயகாந்த் எங்களுடைய கூட்டணியில் இணைய வேண்டும்!’’

 

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick