ஓப்பன் பண்ணினா ஓவர் தொல்லை!

ஃபேஸ்புக் லாக் இன் பண்ணினா, சில விஷயங்களைப் பார்க்காம வெளியே வர முடியாது பாஸ். அதெல்லாம் என்ன?

26 வயதுடைய சதாம் பொழுது போக்கா ரம்மி சர்க்கிள் விளையாடி ஏழாயிரம் ஜெயித்திருக்கிறார். நீங்களும் விளையாடுங்க சதாம் மாதிரி சம்பாரிங்கனு நம்மளையும் கூப்பிடுவாங்க. இனி ரம்மி விளையாட கூப்பிட்டா எங்க மம்மிகிட்ட சொல்லிடுவேன்.

சி.சி.டி.வி-யில் சிக்கிய பேய் கோவையில் எடுத்த அதிர்ச்சி வீடியோனு சுமாரான கிராஃபிக்ஸில் ஒரு போஸ்ட் வரும். வீடியோ லிங்க் கீழே இருக்கும். திறந்து பார்த்தா ‘ஈவில் டெட்’ மாதிரி பேய் படத்துல இருந்து சின்ன சீன் ப்ளே ஆகும். அலாஸ்காவில் மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு வீடியோவும் இந்த வகையறாதான். 

சிமென்ட் சாக்கு மேல அரை கிலோ தக்காளி, கால் கிலோ பீன்ஸ்களை வெச்சு காய்கறிக் கடை போட்டிருக்கும் பாட்டியின் போட்டோவைப் போட்டு 80 வயதில் பிச்சை எடுக்காமல் உழைத்துச் சாப்பிடும் இந்தப் பாட்டிக்கு ஒரு லைக் போடுங்கனு லைக் வாங்குற ஒரு குரூப் இருக்கு. ஏன்... 80 வயசானா பிச்சைதான் எடுக்கணுமா? அடப் போங்க பாஸ்.

உங்களுடைய கேரக்டருக்கு தமிழ் சினிமாவில் எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார். ரஜினி, கமல், விஜய் அஜித்?  நீங்க சாதாரணமா ரெண்டு பீர் குடிச்சா எப்படி இருப்பீங்க? அதுவே டக்கீலா குடிச்சா எப்படி இருப்பீங்க? கடைசியில மட்டையாகிட்டா யார் வீட்ல கொண்டுபோய் விடுவாங்கனு  நமக்கு எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல பல ஆப்ஸ்.

உங்கள் கண் பார்வை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கணுமா? இங்கே டெஸ்ட் பண்ணுங்கனு ஃபேஸ்புக்கிலேயே மெடிக்கல் செக்-அப்பும் நடத்துறாங்க. கருப்புக் கட்டத்தில் மறைந்து இருக்கும் 768 நம்பரைக் கண்டுபிடிக்கணுமாம். அதே மாதிரி ஜிஃப் ஃபைலில் 1056 நம்பர் வரும்போது அதைச் சரியா நிறுத்தி விளையாடுவதும் இதில் அடங்கும். கண்ணை செக் பண்ண இனிமே ஹாஸ்பிடல் போக வேணாம். நாங்க இருக்கோம்னு சொல்றாங்க. உத்துப்பார்த்து கண்ணு வலிக்குதுய்யா.

அதிர்ச்சியான செய்தி கமென்ட்டில் ஆமென் என டைப் செய்தால் ஏசுநாதர் தெரிவார். இதை லைக் செய்து, ஷேர் செய்தால் பத்தே நிமிடத்தில் நல்ல செய்தி தேடி வரும். இந்தப் படத்தை அருகில் வைத்துப் பார்த்தால் கீழே படுத்திருக்கும் உருவம் வளையத்துக்குள் செல்லும். இதுக்குனு தனியா ஒரு குரூப் இருக்கு. மோடி மஸ்தான் வித்தையெல்லாம் காட்டுறாங்கப்பா.

போன் தண்ணியில விழுந்துடுச்சா, அரிசிப் பானையில அரைமணி நேரம் முக்கி வெச்சுக் காப்பாத்துவது எப்படி, யூ டியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி, ரீசார்ஜ் செய்யாமல் இலவசமா இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி?னு ஆங்காங்கே ஃப்ரீயா கோச்சிங் க்ளாசும் நடத்துறாங்க.

எல்லாத்தையும் விட இந்த கமென்ட் ஏரியாவுக்குனு தவறாம ஒரு குரூப் வருமே கவனிச்சிருக்கீங்களா? ‘100 சதவிகிதம் உண்மை; எந்தவித முதலீடும் இல்லை, ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் தினமும் 500 முதல் 5,000 வரை சம்பாதிக்கலாம். ப்ளே ஸ்டோரில் போய் இந்த ஆப்பை டவுன்லோட் பண்ணுங்க’னு வர்றவங்க தொல்லைதான் தாங்க முடியலை பாஸ்!

இதெல்லாம் சாம்பிள்தான், மீதி இன்னொரு நாளைக்கு!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick