‘ஆடி’ப் போயிட்டாங்க!

மேத்யூ பிரின்டன். லண்டனைச் சேர்ந்த இந்த 35 வயது பிச்சைக்காரர் ஆடி கார் வைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உலகம் முழுவதும் மேத்யூ  இப்போ பயங்கர பாப்புலர். ‘மருதமலை’ படத்தில் வடிவேலு, போண்டா மணியை ஆச்சரியமாகப் பார்ப்பதைப்போல ஒரு பிச்சைக்காரரிடம் ஆடி சொகுசு ஸ்போர்ட்ஸ்காரா? என லண்டன் மக்கள் மேத்யூவைப் பார்க்கிறார்கள். லண்டனின் நியூகுவே பகுதி ப்ளாட்ஃபார்மில் தான் மேத்யூ தங்கியிருக்கிறார். சமீபத்தில் மேத்யூ பிரின்டன் என்ற ஃபேஸ்புக் ஐ.டியில் இருந்து மேத்யூ ஆடி காருடன் நிற்கும் போட்டோ   வெளிவந்தது. இதுவரை அவருக்குப் பிச்சை போட்டவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து வயிறு எரிய, கும்பல் கும்பலாய் போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுத்ததோடு உடனே கைதுசெய்து உள்ளே தள்ளுங்க என்று  சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். 

இதுபற்றி பத்திரிகையாளர்கள் மேத்யூவிடம் கேட்டபோது ‘ஆரம்பத்தில் என்கிட்டே ஏகப்பட்ட பணம் இருந்துச்சு. அதைத் தேவையில்லாமல் செலவு செஞ்சேன். அதனால் இப்போ பிச்சை எடுக்கிறேன். என்னைப்பற்றி மக்கள் சொல்வது தப்பு. அவங்க நினைக்கிற மாதிரி இந்த கார் பிச்சை எடுத்த காசுல வாங்கினது இல்லை. திருடிக்கொண்டு வந்த காரும் இல்லை. உண்மையைச் சொன்னா, கொஞ்ச நாளைக்கு முன்னே என் பாட்டி இந்த காரை எனக்குக் கொடுத்தாங்க. அப்போ நான் அதுக்குப் பக்கத்துல   நின்னுக்கிட்டிருந்தேன். எனக்கே தெரியாம யாரோ அதை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டு என்னை பிரச்னையில மாட்டி விட்டுட்டாங்க. எனக்கு ஃபேஸ்புக்ல அக்கவுன்ட்டே கிடையாது,   எனக்கு இருந்த நல்ல பெயரைக் கெடுக்க யாரோ திட்டம் போட்டு இதைச் செஞ்சிருக்காங்க’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இதற்கு நடுவில் ஒருவர் கல்லை எடுத்து அந்த கார் கண்ணாடியை அடிச்சு நொறுக்கி ஆத்திரத்தைத் தீர்த்திருக்கார். பிச்சை போடுற என்கிட்டே ஆடி கார் இல்லை பிச்சை எடுக்கிற உனக்கு ஆடியா என்ற கோபம் அவருக்கு. 

ஒருத்தன் வளர்ந்தா பொறுக்காதே!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick