“ஐயய்யோ, அது ஊறுகா இல்லை!”

லகெங்கும் பாப் பாடல்கள் பெருகி வரும்போது, நம் ஊரில் மட்டும் எப்போதாவாது தனிப்பாடல்களாக வெளிவரும். இல்லை பாப், ராப், ஜாஸ் என எல்லாம் கலந்து ஆல்பம் வெளியாகும். ஆனால், முதல்முறையாக தமிழில் முழுக்க முழுக்க ராக் இசையில் ஒரு ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆல்பத்தில் பாடல்களைப் பாடிய பரத் ஷங்கரிடம் பேசியதில்...

‘‘நான், ஜே.சி, பாடகர் ப்ரதீப் குமார், தபஸ் நரேஷ் எல்லோரும் ரூம் மேட்ஸ். நிறைய இடங்கள்ல லைவ் பேண்ட் வாசிப்போம். சரி, நாம ஏன் ஒரு ஆல்பம் ரிலீஸ் பண்ணக் கூடாதுனு யோசிச்சப்போ வந்ததுதான் இந்த ஐடியா. நான் பாடல்கள் எழுதி, ஒன்பது பாடல்களையும் பாடினேன். ‘ஆகாயம் தீப்பிடிச்சா’ மெட்ராஸ்), ‘பூ அவிழும் பொழுதில்’ (எனக்குள் ஒருவன்) பாடல்கள் பாடின ப்ரதீப் குமார் எல்லாப் பாட்டுக்கும் பேஸ் வாசிச்சார். தபஸ், ட்ரம்ஸும்... ஜே.சி, கிட்டாரும்... வாசிச்சான். யாரும் எல்லாப் பாடல்களும் ராக் இசையில் வரணும்னு நினைச்சு ஆரம்பிக்கலை. ஆனால், எல்லாம் முடிச்சுட்டுப் பார்த்தால், தமிழில் முதல்முறையா ஒரு ஆல்பம் முழுக்க ராக் இசை பயன்படுத்தினது நாங்கதான்னு வரலாறு சொல்லுச்சு. அதையே எங்க தளத்துலேயும் போட்டுட்டோம். இப்போ இசை அமைப்பதைப் போல் தனித்தனியா இசை அமைச்சுட்டு, பிறகு பாட ஆரம்பிக்கலை. இசைக் கச்சேரி மாதிரிதான் ஒன்பது பாடல்களையும் பதிவு செய்தோம்.’’

‘‘ஆல்பத்தின் விலைக்கு நீங்கள் வைத்திருக்கும் விளம்பரமே வித்தியாசமே இருக்கே?’’

‘‘நாங்க நாலு பேரு யாருன்னே உங்களுக்குத் தெரியாது. அப்படி இருக்கிறப்போ, 100 ரூபாய் கொடுங்கனு சொல்றது எந்த விதத்துல நியாயம்னு தெரியலை. அதே மாதிரி இதை இலவசமாகவும் கொடுக்க முடியாது. அதனால்தான் எங்களுக்குனு ஓர் இணையதளம் ஆரம்பிச்சோம். அங்கே ஒன்பது பாடல்களையும் நீங்க இலவசமாகவே கேட்கலாம். பாடல் பிடித்து இருந்தால், உங்களுக்கு விருப்பமான தொகையைச் செலுத்தி, பாடலை டவுன்லோடு செய்துகொள்ளலாம். இப்போ வரைக்கும் பலர், இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறதுக்காக 100 ரூபாய்க்கு அதிகமாகக்கூட கட்டி இருக்காங்க.’’

‘‘ ‘ஊறுகா’னு ஆல்பத்தின் தலைப்பே ஹாட்டா இருக்கே பாஸ்?’’

‘‘அய்யோ, அது ஊறுகா இல்லீங்க. ’ஊருக்காக’ அப்படிங்கறதை சுருக்கி ஊர்கானு வெச்சோம். நாங்க நாலு பேரும் எப்பவும் பைக் எடுத்திட்டு, எங்காவது ஒரு கிராமத்துக்குப் போயிட்டு, அங்கே இருக்கிற மக்கள் முன்னாடி அந்த நேரத்துக்கு தோணுவதைப் பாடுவோம். இப்போ அடுத்ததா கோவை, மதுரை மாதிரி ஊர்களுக்குப் போய் பாடலாம்னு இருக்கோம். டைட்டில் படிக்கிற எல்லோரும் ஊறுகான்னு படிச்சு அதை வைரல் ஆக்கிட்டாங்க. ’ஊர்கா’வின் லோகோகூட எங்களைப் பாதித்த விஷயங்களை மையப்படுத்தி வரைந்த ஓவியம்தான்.’’

‘‘அடுத்து என்ன பண்ணப்போறீங்க?’’

‘‘இன்னும் 40 பாடல்கள் ரெடியா இருக்கு பாஸ்.’’

ஊர்காவாவே இருந்தாலும் பாடல்கள் ஊறுகாதான்!

பாடல்களை இலவசமாகக் கேட்க...

http://oorka.bandcamp.com/

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick