இதுவும் ‘சதுரங்க வேட்டை’தான்!

ல்லோரும் கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவைத் திட்டித் தீர்த்துவரும் வேளையில் இந்தியாவின் பெரிய சீட்டிங் பார்ட்டிகள் இருவரைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

கெளதம் குண்டு! ‘சதுரங்க வேட்டை’ ஸ்டைலில் நாடெங்கிலும் 12 மாநிலங்களில் ‘ரோஸ் வேலி குரூப்’ மூலம் சிட்பண்ட்ஸ் நடத்தி பட்டை நாமம் சாத்தியவர் இவர். சீட்டுக்காசில் பல சட்ட விரோதத் தொழில்கள் செய்து அவர் சம்பாதித்த பணத்தை வைத்து ஓர் அரசாங்கத்தையே நடத்திவிடலாம் என்று சொல்கிறார்கள். ஒரு தனி நபர் 150 கார்கள், 378 பேங்க் அக்கவுன்ட்கள், 700 ஏக்கர் நிலம் என மிக ராஜபோகமாக வாழ்ந்துள்ளார். அப்பாவி மக்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றி இவர் சம்பாதித்த பணம் எல்லாம்தான் மேலே சொன்ன அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக மாறி உள்ளன. எம்.எல்.எம் போல நிதி நிறுவனம் நடத்தி பிசினஸ் செய்தவர். வைர ஏற்றுமதி உட்பட பல தொழில்களைப் பதிவு செய்யாமல். இவர் ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஸ்பான்ஸர்களில் ஒருவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இவர் லவட்டியது 15,000 கோடி பாஸ்!

நட்வர்லாலைத் தெரியுமா? பேச்சுப்புலி. தாஜ்மஹாலையே விற்றுக் காசாக்கியவர். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ‘கான்மேன்’ இவர். வக்கீலுக்குப் படித்தவரான இவர் பேசிக் காரியம் சாதிப்பதில் கில்லாடி. இந்தியாவின் புராதனச் சின்னங்களான தாஜ்மஹாலை மூன்று முறையும், ரெட் போர்ட்டை இரண்டு முறையும்,  ராஷ்டிரபதி பவன் மற்றும் இந்திய பார்லிமென்ட்டினை 545 உறுப்பினர்களோடு சேர்த்து ஒரு முறையும் விற்றுள்ளார். பல தொழில் நிறுவனங்களை லாவகமாக ஏமாற்றியுள்ளார். டாடா, பிர்லா, அம்பானி எனப் பலரும் இதில் அடக்கம். சமூக ஆர்வலர் போல் நாடகமிட்டு பெரிய அளவிலான தொகையை இவர்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கடை முதலாளி போன்று நடித்து போலியான காசோலை மூலம் அவற்றை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றிருக்கிறார். பிறந்தது பீகார் என்றாலும் எட்டு மாநில காவல் துறை இவரை 100-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகத் தேடியது. பிடிபட்டால் 113 வருட சிறைத்தண்டனை அளிக்கவும் அரசு காத்திருந்தது. பல முறை அவரைக் கைதும் செய்தது. ஆனால் வெவ்வேறான சிறைகளில் இருந்து எட்டு முறை தப்பிச் சென்றுள்ளார். ஒரு முறை கான்பூர் சிறையிலிருந்து சப்-இன்ஸ்பெக்டரின் ஆடையை அணிந்துகொண்டு எஸ்கேப் ஆனார். மெஸ்மரிஸம் செய்து அங்கிருந்த பாதுகாவலர்களுக்கு பணப்பையைக் கொடுத்துவிட்டு அவசரமில்லாமல் டாக்ஸியில் ஏறித் தப்பிச் சென்றுள்ளார். 1996-ம் ஆண்டு இவர் ஒன்பதாவது முறையாகக் கைது செய்யப்பட்டு தப்பித்தபோது அவர் வயது 84. ‘Greatest conman of India’ என்று இப்போதும் அவரை உலகமே கொண்டாடுகிறது!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick