இது எங்களோட ‘கபாலி’!

‘கபாலி’ டிரெய்லருக்காக எல்லோரும் ஆர்வமாய்க் காத்துக்கொண்டிருக்க, கோவையில் இருக்கும் பிக் விக் என்ற அனிமேஷன் ஸ்டுடியோ ‘கபாலி’ டிரெய்லரை ரொம்ப அசால்ட்டா ரிலீஸ் பண்ணியிருக்காங்க. இது ஒரிஜினல் ‘கபாலி’ படத்தின் டிரெய்லர் இல்லை. இவங்களே உருவாக்கின ஃபேன் மேட் டிரெய்லர். பிக் விக் அனிமேஷன் ஸ்டுடியோவுக்கு போன் போட்டேன்.

தீபக் ஸ்ரீஹரி லைனில் வந்தார். ‘‘நானும் விஷ்ணு ராம் என்பவரும் சேர்ந்துதான் இந்த ஸ்டுடியோவை ஆரம்பிச்சோம். எங்களைத் தவிர திவாகர், விக்ரம், கலை அரசு, மோகன் குமார், வினோத், கோபிகா பிரியா, ஹர்வின் செபாஸ்டின், வீரய்யா, முஜிபர், சுஜா தீபக், நிலா விக்ரம், அரவிந்த்குமார்னு இன்னும் 12 பேர் இங்கே இருக்காங்க. இதில் அரவிந்த் லண்டனில் அனிமேஷன் படித்தவர். கடந்த இரண்டு வருஷமா இந்த ஸ்டுடியோவை நடத்துறோம். நாங்க எல்லோருமே ரஜினி ரசிகர்கள். இன்னும் சொல்லப்போனா, வெறியர்கள். அவருக்காக சிலர் கட் அவுட் வைப்பாங்க, சிலர் பாலாபிஷேகம் பண்ணுவாங்க, நாமளும் ஏதாவது வித்தியாசமா பண்ணணும்னு தோணுச்சு. டக்குனு இந்த ‘கபாலி’ டிரெய்லர் ஐடியா வர வேலையில் இறங்கிட்டோம். ‘கபாலி’ இப்படி இருக்கும் அப்படி இருக்கும்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கற்பனை இருக்கும். அதுக்கு ஏத்த மாதிரி டிரெய்லர் உருவாக்கத் திட்டமிட்டோம். ஒரு முழுப் படத்துக்குத் தேவையான அளவு உழைப்பைப் போட்டு ஒரு மாசம் ராத்திரிப் பகலா தூங்காம டிரெய்லரை உருவாக்கினோம். அதுக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கு’’ என்றார் தீபக்.

இன்னொரு பார்ட்னர் விஷ்ணு ராம் தொடர்ந்தார். ‘‘ஒரு கேரக்டரை 3 டி-யில் உருவாக்க அந்த கேரக்டரின் 360 டிகிரி ஆங்கிள் புகைப்படங்கள் தேவை. ஆனால் எங்களுக்கு ரஜினி சாரின் இரண்டு மூன்று ஸ்டில்ஸ்தான் கிடைச்சுது. அதை வெச்சே டிரெய்லர் ரெடி பண்ணிட்டோம். சினிமா பிரபலங்களில் பிரேம்ஜி சார்தான் முதலில் இந்த டிரெய்லரைப் பார்த்தார். அப்படியே அவருடைய ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ண, அடுத்து வெங்கட் பிரபு சார், வைபவ் சார் எல்லாரும் ட்விட்டரில் ஷேர் பண்ணினாங்க. ‘கபாலி’ படத்தின் ஒளிப்பதிவாளர் பார்த்துட்டுப் பாராட்டியிருந்தார். அப்படியே ரஜினி சாரும் பார்த்துட்டாருனா இன்னும் சந்தோஷமா இருக்கும். ‘கபாலி’ டிரெய்லர் மாதிரியே காக்காவை மையமா வெச்சும் ஒரு வீடியோவும் பண்ணியிருந்தோம். அதுவும் சூப்பர் ஹிட். இதனால் 3-டி அனிமேஷன் வாய்ப்புகள் இப்போ நிறைய வருது. அப்படியே கேம்ஸ்களுக்கு கேரக்டர் டிசைனும் பண்ணிக்கொடுக்கிறோம்.  எங்க டீமின் ஒரே கனவு வால்ட் டிஸ்னி மாதிரி தரமான இந்தியப்படம் எடுக்கணும். அதுக்கான வேலைகளில் அடுத்து இறங்கப்போறோம்’’ என்று சிரிக்கிறார் விஷ்ணு.

https://www.youtube.com/watch?v=yFFqIAmxZWQ

https://www.youtube.com/watch?v=PVOGotXAWlU

-ஜுல்ஃபி, படங்கள் : பிரபாகரன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick