ஒரு லிஃப்டுக்கு ஒன்றரை வருடங்கள்!

லக சினிமாவின் சைக்கோத்தனமான குணாதிசயங்கள் கொண்ட வெற்றிகரமான இயக்குநர்கள் இவர்கள். சும்மா ஒரு தகவலுக்காக...

5. குவான்டின் டொரண்டினோ: 

தனது சினிமாவின் ஒன்லைனில் ஆரம்பித்து எண்ட் கார்டு வரை தானே எழுதிவிடும் வல்லமை கொண்டவர். ஓர் அரக்கனைப்போன்ற பெர்ஃபெக்‌ஷனிஸ்ட். தான் நினைத்த காட்சியைத் திரையில் கொண்டு வர வேண்டி தடாலடியாய் நடந்துகொள்வார். பன்ச் வாங்கி நடித்தவர்கள்தான் அதிகம். அதனாலேயே அடித்தாலும் அடிப்பாரோ என்ற பயத்தில் நடித்துவிடுவார்களாம் நடிகர்கள். ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ படத்தில் ஆரம்பித்து ‘தி ஹேட்ஃபுல் எய்ட்’ படம் வரை தக்காளிச் சட்னிகளைத் தெறிக்க விடுவார். படத்தின் வசனங்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்ல வேண்டும். உதவி இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுவிட்ட பிறகுதான் ஷூட்டிங்கிற்குச் செல்வார். ஏன் இவ்வளவு மூர்க்கத்தனமான வன்முறை சினிமாவை எடுக்கிறார் மனிதர் என்று சற்று பின்னோக்கிப் பார்த்தால்... சின்ன வயதில் ஸ்கூலை கட் அடித்துவிட்டு ரத்தம் தெறிக்கும் சாமுராய், ஸ்பாகெட்டி வகை ஆக்‌ஷன் படங்களைத் தியேட்டரில் போய்ப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தவராம். அப்போ சரி!

4. டேவிட் லின்ச்:

படம் பார்க்கும் ஆட்களை அதிர்சியில் உறையவைத்து அனுப்பிவைக்கும் சர்ரியலிஸ்டிக் படங்களை எடுப்பதில் கில்லாடி இவர். இவரும் வினோதமான மனிதர்தான். திடீர் திடீர் என காணாமல் போய்த் திரும்பி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 70 வயதிலும் நிறையப் பயணங்கள் நிறைய சினிமாக்கள் என வலம் வருகிறார். ‘இன்லேண்ட் எம்பையர்’, ‘ப்ளூ வெல்வெட்’, எரேசர் ஹெட்’, ‘தி எலிபென்ட் மேன்’ போன்ற படங்களின் மேக்கிங்கின் போது தன் படக்குழுவை ஒருவழி பண்ணி விட்டாராம். ஆனால் படக்குழுவினருக்கு நல்ல விஷயம், அதிகம் திட்டாமல் தானே களத்தில் இறங்கிவிடுவாராம். உதாரணத்திற்கு மொத்த ஷூட்டிங்கும் முடிந்தபிறகு குறிப்பிட்ட ஒரு காட்சியில் தரையில் போடப்பட்டிருக்கும் மொசைக் திருப்தி தரவில்லை எனச் சொல்லி அவரே அவற்றைப் பெயர்த்து எடுத்துவிட்டு புதிதாய் வேறு வண்ணத்தில் மொசைக் பதித்து ஷூட்டிங்கைத் தொடர்வாராம். தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை ஊதித்தள்ளுவது இன்னொரு பழக்கம்!

3. ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலா:

‘காட்ஃபாதர்’ டைப் படங்களால் உலகத்திற்கு நன்கு அறிமுகமானவர். ‘காட்ஃபாதர்’ படத்தின் ஷூட்டிங் பிலிப்பைன்ஸில் நடைபெற்றபோது முக்கியமான நடிகர் மார்ட்டின் ஷீனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாம். டாக்டர் ஒருவர் வந்து பார்த்து ஒரு வாரம் கண்டிப்பாக நடிகருக்கு ஓய்வு தேவை என்று சொல்லி இருக்கிறார். கப்போலா என்ன செய்தார் தெரியுமா? அதுதான் என் படத்துக்கு வேண்டும். காய்ச்சலோடு நடித்தால் காட்சி படு யதார்த்தமாக இருக்கும் என்று சொல்லி ஷூட்டிங்கை ஒரு வாரத்துக்குத் தொடர்ந்தாராம். விருதுகள் குவிந்தது வேறு கதை!

2. ஸ்டான்லி குப்ரிக்: 

அஜித் குமாரைப் போலவே இருக்கும் இயக்குநர். ‘எ க்ளாக் ஒர்க் ஆரஞ்ச்’ , ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’, ‘தி ஷைனிங்’, ‘ஐஸ் ஒயிடு ஷட்’ போன்ற படங்களின் இயக்குநர். உலகிலேயே அதிக டேக் எடுத்துக்கொள்ளும் இயக்குநர் இவர். ஒரு படத்தில் இடம் பெறும் லிஃப்ட் காட்சி ஒன்றுக்காக ஒன்றரை வருடங்கள் எடுத்துக்கொண்டவர். 127 டேக்குகள்தான் இவருடைய அதிகபட்ச ரெக்கார்டு. இதனாலேயே இவர் படத்தில் நடிப்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார்களாம். ஆனால் ஜாக் நிக்கல்ஸன் போன்றவர்கள் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுவார்கள்!

1. ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக்: 

இந்த சைக்கோ லிஸ்ட்டில் மிகப்பெரிய டெரர் டைரக்டர் ‘சைக்கோ’ படத்தை இயக்கிய இவர்தான். இவர் படத்தில் நடிக்கும் நாயகிகளிடம் அளவுக்கதிகமான பிரியத்தை வைத்திருப்பார். அவர்களின் காதலர்களைக்கூட நெருங்கவிட மாட்டார். ஒரு கட்டத்தில் லவ்வோ லவ்வு என லவ்வ ஆரம்பித்து விடுவார். வெரா மிலஸ், டிப்பி ஹெட்ரன் போன்ற நடிகைகள் பதிலுக்கு இவரைக் காதலித்த சம்பவங்களும் நடந்தன. ‘வெர்டிகோ’ படத்தில் மிலஸ் நடிக்கும்போது வேறொருவருடன் இணைந்து கர்ப்பமானதால் கடுப்பான ஆல்ஃப்ரெட், மிலஸைப் படத்திலிருந்தே தூக்கிவிட்டாராம். ‘பேர்ட்ஸ்’ படத்தில் நடித்த டிப்பி ஹெட்ரன் தன் காதலை ஏற்க மறுத்ததால் நிஜமாகவே பறைவைகளால் தாக்கவைத்து காட்சிப்படுத்தினாராம். படத்தில் அவர் முகத்தில் காகங்களால் ஏற்பட்ட காயங்கள் அக்மார்க் நிஜமானவை என்கிறார்கள்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick