முதல்வரே வில்லன்!

ஞ்சாப் என்றாலே கோதுமைக் களஞ்சியம் என்றும், ரொட்டி-தால் மற்றும் டர்பன்களும், மஞ்சள் பூ கடுகு வயல்களும் நம் மனக்கண்ணில் வந்து போகும். ஆனால் இனி ‘உட்டா பஞ்சாப்’ சினிமாதான் கண்முன் வரும் என பாலிவுட் பேசுகிறது. அபிஷேக் சௌபே என்ற இளம் இயக்குநரின் கைவண்ணத்தில் விரைவில் வெளிவரப்போகும் சினிமா. ‘தேத் இஸ்க்கியா’ படத்தின் கதை, திரைக்கதை, எழுதி கவனம் ஈர்த்த இளம் தலைமுறை இயக்குநரின் முதல் சினிமா! கரீனா கபூர், ஷாஹித் கபூர், அலியா பட் என ஸ்டார் அட்ராக்‌ஷன் உள்ள படம். ‘பாண்டம்’ சினிமாத் தயாரிப்பு நிறுவனத்தின் இந்தப் படம் இதுவரை பஞ்சாப்பைக்  காட்டாத கோணத்தில் காட்டி இருப்பதோடு முன்னாள் ஜோடியான கரீனா- ஷாகித் கபூரையும் காட்டி இருக்கிறது. படம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. கரீனாவும் ஷாகித்தும் தனித்தனி பகுதிகளில் நடித்திருக்கிறார்கள். பஞ்சாப்பின் சூப்பர் ஸ்டார் நடிகர் தில்ஜித் இதில் ஒரு பகுதியில் நடித்திருக்கிறார்.

கதை என்னவென்றால் இன்று பஞ்சாப் மாநிலத்தின் 70 சதவிகித இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். நம்மில் பலருக்கு சரியான புரிதலே இல்லாத ‘காலிஸ்தான்’ என்னும் தனிநாடு கோரும் சீக்கியர்களின் பின்னணியைப் படம் பேசுகிறது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் தனி நாடு கோரிக்கையாக இந்தத் தீவிரவாதம் தெரிந்தாலும் ‘நார்கோடெரரிஸம்’ எனப்படும் போதை மருந்து சந்தைதான் இந்தத் தனிநாடு கோரிக்கையை ஒரு வியாபாரமாகச் செய்கிறது பாகிஸ்தான் என்கிறது இந்தப் படம். ஆளும் அகாலிதள அரசையும் இந்தப் படம் தோலுரித்துக் காட்டி இருக்கிறதாம். அதோடு முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் போன்ற வயதானவரை வில்லனாக நடிக்கவைத்து டெரர் கூட்டி இருக்கிறார்களாம்.

மீடியா அதிகம் கண்டுகொள்ளப்படாத பஞ்சாப்பின் இன்றைய போதைச் சந்தையையும் அதன் கரங்கள் பாகிஸ்தான் வரை நீளும் நெட்வொர்க்கையும் இப்படம் விறுவிறு ஆக்‌ஷன் த்ரில்லராகக் காட்டி இருக்கிறதாம்.

‘இந்தப் படம் வந்தால் நிச்சயம் பஞ்சாப் குறித்த நம் பார்வையே மாறும். சென்ஸாரில் சில காட்சிகள் நீக்கப்படலாம். ஆனாலும் படம் பேசும் கருத்துகளை யாராலும் நீக்க முடியாது. நகம் கடித்துக் காத்திருக்கிறோம்’ என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான விக்ரமாதித்யா மன்டானே.

நாங்களும் காத்துக்கிட்டு இருக்கோம்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick