கூட்டம் கூட்டமாக் கொடி பிடிச்சு வர்றாங்க!

தேர்தல் நெருங்க நெருங்க இந்த அரசியல்வாதிகள் பண்ற அட்ராசிட்டி தாங்க முடியலை. ஒவ்வொருத்தரும் தீயா வேலை செய்றாங்க, அதில் முக்கியமானது வீடியோ விளம்பரம். முன்னே பின்னே கேமராவையே பார்க்காதவங்களைக் கூட்டி வந்து எடுத்த விளம்பரங்கள் இவை.

‘சொன்னீங்களே செஞ்சீங்களா?’ கேப்ஷனோடு வரும் தி.மு.க. விளம்பரம் இது. அடிபம்புக்கு அடியில் ஒரு வயசான பெண் இருக்க, அங்கே ஒரு சின்னப் பொண்ணு வந்து ‘இங்க என்ன ஆத்தா பண்றே’னு பேச்சுக் கொடுக்குது. ‘தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்குறேன்னு சொன்னாங்களே... அதான் வருதானு பார்க்கிறேன்’னு பைப்பையே உற்று உற்றுப் பார்க்கிறார் அவர். கட் பண்ணினா, அஞ்சு வருஷத்துக்கு முன்னே மக்களின் முதல்வர் பேசிய பழைய வீடியோ ஓடுது. அதில் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் குடிநீர் இலவசம்னு சொல்றார். உங்க பெர்ஃபார்மன்ஸ் போதலை. நான் இதில் நடிச்சவங்களைச் சொன்னேன்.

இதுவும் தி.மு.க. விளம்பரம்தான். அடகுக் கடையில் நல்லாத் தமிழ்ப் பேசக்கூடிய ஒரு சேட்டு. அவர்கிட்ட ஒருவர் கடன் வாங்க வர, ‘ஆமா... முன்னாடியெல்லாம் மாசக் கடைசியிலதான் வருவீங்க. இப்போ என்ன இவ்வளவு சீக்கிரம்?’னு கேட்கிறார். ‘கரன்ட் பில் கண்ணைக் கட்டுது, பால் விலை பல்லைக் காட்டுது’னு ‘ஹரி’ பட ஹீரோ மாதிரி ரைமிங்கா அவர் அடிச்சு விடுறார். உடனே வாய்ஸ் ஓவரில் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று பொய் வாக்குறுதி அளித்ததுதான் அ.தி.மு.க. அரசின் சாதனை என்கிறார் ஒருவர். அந்த சேட்டைப் பார்த்தா, எனக்கு சிப்பு சிப்பா வருது. அந்த கேரக்டருக்கு வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு?

தே.மு.தி.க. சார்பா ஒரு வீடியோ விட்டிருக்காங்க. ஒரு பழைய பில்டிங்கில் ரெண்டு பேர் பெயின்ட் அடிக்கிறாங்க. பில்டிங் ஓனர் அங்கே வர, ரெண்டு பேரும் ரெண்டு நாள் லீவ் கேட்கிறாங்க. ஓனர் எதுக்குனு கேட்க, ஓட்டுப்போட ஊருக்குப் போகணும்னு சொல்றாங்க. இதுவரைக்கும் இந்த விளம்பரம் நல்லாத்தான் போச்சு. அப்போ ‘நல்லாட்சி கொடுக்க கேப்டன் ஒருத்தராலதான் முடியும். என் ஓட்டு அவருக்குத்தான்’னு ஒருத்தர் ஃபினிஷிங் கொடுத்தார் பாருங்க. விழுந்து விழுந்து சிரிச்சேன். அவர் வாங்கின காசுக்கு மேல நடிச்சிருந்தார்.

இதுவும் தே.மு.தி.க. விளம்பரம்தான். ரெண்டு சின்னப் பசங்க பேசிக்கிறாங்க, ‘டேய் ரகு என்னடா பண்ற?’ ‘நான் சப்வே சர்ஃப் கேம் விளையாடுறேண்டா.’ ‘சரி எங்க அம்மா சொன்னாங்க. நீ ஸ்கூலுக்குப் போறதே இல்லியாமே ஏன்டா?’ ‘எங்க ஸ்கூலுக்கு வாத்தியாரே வர்றது இல்லைடா’ இந்த இடத்தில் ஒரு வாய்ஸ் ஓவர். ‘நாடெங்கும் சமமான கல்வி கிடைக்கட்டும். கேப்டன் ஆட்சி மலரட்டும்’னு கோபி நாயர் மாதிரி ஒருத்தர் பேசுறார். ஸ்கூல் பசங்களையும் விட்டு வைக்க மாட்டேங்கிறீங்களேப்பா...

விவசாயி ஒருவர் வயல்காட்டில் நிற்க, டாடா சுமோவில் வெள்ளையும் சொள்ளையுமா தடிதடியா சிலர் வந்து இறங்குறாங்க. அங்கே இருக்கும் நெல் மூட்டைக்கு ஆயிரம் ரூபாய்னு அவங்களே ரேட் ஃபிக்ஸ் பண்றாங்க. அப்போ அந்த விவசாயி நெட்டில் சர்ச் பண்ணி ‘இன்னைக்கு ஒரு மூட்டை 1,090 ரூபாய். யாரப்பு ஏமாத்தப் பார்க்கிறீங்க. என்கிட்டே ஃப்ரீ வைஃபை இருக்கு’னு சொல்றார். கேப்டனோடு ஒன்றிணைவோம், வென்றெடுப்போம். இப்படி ஒரு விளம்பரம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்