அடுத்தவர் பார்ப்பதற்கு அல்ல அந்தரங்கம்!

ராளமான திரைப்பட விழாக்களில் திரையிடல், சிறந்த அறிமுக இயக்குனர்களுக்குக் கொடுக்கப்படும் ‘கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது’, ஸ்பெயினில் நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடலுக்குத் தேர்வாகியிருக்கும் படம் என பலத்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறது ‘லென்ஸ்’ என்ற தமிழ்த் திரைப்படம். அதன் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனிடம் பேசினேன்.

“நடிகர் ஆகணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். 2006-ல் ரிலீஸான ‘இன்பா’ படத்தில் இருந்து, வரப்போற ‘ஓட்டத்தூதுவன்’ வரை சில படங்கள்ல நடிச்சிருக்கேன். குறிப்பிட்டுச் சொல்லணும்னா, சந்தோஷ் சிவன் சார் இயக்குன ‘உருமி’, அஜித் நடிச்ச ‘என்னை அறிந்தால்’ படத்துல அவரோட நண்பன் கேரக்டர் ஆகியவற்றைச் சொல்லலாம். நிறைய குறும்படங்களும் நடிச்சிருக்கேன்!’’ என்று ஆரம்பிக்கிறார், ஜெயப்பிரகாஷ்.

“ எம்.சி.ஏ படிச்சு அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். நடிப்புல எனக்கு ஆர்வம். அங்கேயே நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். இந்தியாவுக்குத் திரும்பி, நண்பர்கள் மூலமா நிறைய சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்குனேன். அப்பப்போ வாய்ப்புகள் கிடைச்சது, ஆனா பெரிய அளவுல சான்ஸ் கிடைக்கலை. சரி, நாமளே வாய்ப்பை உருவாக்கிக்குவோம்னு எடுத்ததுதான் ‘லென்ஸ்’ படம். ஆனா, இந்தக் கதைக்கு மூணு வருடங்கள் உழைச்சிருக்கேன். நிறைய படங்கள் பார்த்தேன். திரைக்கதைகளை வாசிச்சேன். படத்துல வேலை பார்த்த ஒளிப்பதி வாளர் எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், என்னோட நண்பர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சியில் படம் நல்லபடியா வந்திருக்கு. நிறைய பேர் பாராட்டுறாங்க. சீக்கிரமே தியேட்டர்ல ரிலீஸ் பண்ணனும். அப்போதான், முழுமையான சந்தோஷம் கிடைக்கும்!’’ என்றவர், ‘லென்ஸ்’ உருவான விதத்தைச் சொன்னார்.

“அமெரிக்காவுல இருக்கிற என்னோட ஆக்டிங் டீச்சர்கிட்ட ஒருநாள் ‘ஸ்கைப்’ மூலமா பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு ஐடியா வந்தது. ‘சார், இப்போ நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன். நீங்க என்ன பண்ணுவீங்க?’னு ஸ்கைப்-லேயே அவர்கிட்ட கேட்டேன். கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டார். அப்புறம்தான், ‘இப்படி ஒரு லைன் எனக்குத் தோணுது. இதைப் படமா பண்ணலாமா?’னு கேட்டேன். ‘சூப்பர் கான்செஃப்ட்!’னு பாராட்டுனார். அதை இன்னும் கொஞ்சம் டெவலப் ஆக்கி, ‘லென்ஸு’க்குத் திரைக்கதை எழுதுனேன். கொஞ்சம் சீரியஸான கதைதான். இப்பெல்லாம் மத்தவங்களோட அந்தரங்கத்தை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டோம். நிறைய எம்.எம்.எஸ் ஸ்கேன்டல்ஸ் வருது. நமக்கே தெரியாம நம் அந்தரங்கத்தைப் படமெடுத்து மிரட்டுறாங்க, ஷேர் பண்ணி சந்தோஷப்பட்டுக்கிறாங்க. உண்மையோ பொய்யோ, நல்லதோ கெட்டதோ, தேவையோ, தேவையில்லையோ, நமக்கு வர்றதை நாம மத்தவங்களுக்கும் ஷேர் பண்றோம். அப்படி நாம ஷேர் பண்ற ஒரு விஷயம் யாரோ ஒருத்தரோட வாழ்க்கையை நாசமாக்குதுனா, அது நமக்குத் தெரியப்போறதில்லை. ஆனா, அது நடந்துக்கிட்டுதான் இருக்கு. அந்த உண்மையை உங்களுக்கு ‘லென்ஸ்’ மூலமா புரியவைக்கிறேன்!’’ என்று ட்விஸ்ட் கொடுத்துத் தொடர்ந்தார்.

‘’லென்ஸ். இதுதான் கதைக்களம். கண்ணுல இருக்கிற லென்ஸால பார்க்கலாம். பார்க்கணும்னு நினைக்கிற ‘குறிப்பிட்ட’ விஷயத்தை கேமராவுல இருக்கிற லென்ஸ் உங்களுக்குக் கொடுக்கும். நிறைய வசனங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழ்ப் படம்ங்கிற ஃபீல் கண்டிப்பா இருக்கும். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன்னு பலபேர் பாராட்டுனாங்க. ‘கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது’ வாங்குறப்போ இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ், வஸந்த், ரோகிணி என்று பலரும் பாராட்டுனாங்க. ஆனா, இதை ஃபிலிம் பெஸ்டிவெலுக்காக மட்டும் எடுக்கலை. ஒரு நல்ல கதையை எந்த சமரசமும் இல்லாம பண்ணியிருக்கேன். படம் பார்த்தவங்க ‘நல்லா இருக்கு’, ‘வன்முறையா இருக்கு’, ‘மூணுநாள் தூங்கமுடியலை’, ‘ஆக்சுவலி, என் ஃலைப்ல ஒருத்தருக்கு இப்படி நடந்திருக்கு’னு விதவிதமான கமெண்ட்ஸ் சொன்னாங்க. ஆனா, இந்தப் படம் தியேட்டர்ல ரிலீஸாகும்போதுதான், ரசிகர்களோட உண்மையான வரவேற்பை நான் தெரிஞ்சுக்க முடியும்!’’ என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick