தமிழ்ப் படத்துக்கு அமெரிக்க விருது!

சிறந்த புது இயக்குநர்களைக் கண்டறிந்து கெளரவிக்க, அமெரிக்காவின் ‘வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன்’ அமைப்பு வழங்கும் விருதுதான், ‘ரெமி’. உலகப் புகழ்பெற்ற இந்த விருது, கடந்த 49 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஆங்-லீ எனப் பல பிரபலமான இயக்குநர்களும் தங்களது முதல் படைப்பிற்கு ‘ரெமி’ விருது வென்றவர்கள்தான். இந்த நிலையில், ‘கனவு வாரியம்’ என்ற தனது தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இரண்டு ரெமி விருதுகளைப் பெற்று அசத்தியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த அருண் சிதம்பரம்.

‘‘அப்பா ‘ஆணழகன்’ சிதம்பரம், பிரபலமான ஜிம் மாஸ்டர். எம்.ஜி.ஆர் உள்பட பலருக்கு உடற்பயிற்சி ஆலோசகரா இருந்திருக்கார். எனக்குச் சின்ன வயசுல இருந்தே விஷூவல் கம்யூனிகேசன் படிக்கணும், பத்திரிகையில் நிருபரா வேலை பார்க்கணும்னு ஆசை. ஆனா, அப்பா அதுக்கு சம்மதிக்கலை. அவரோட ஆசைக்காக இன்ஜினீயரிங் படிச்சுட்டு அமெரிக்கா போயிட்டேன். சினிமா ஆர்வம் உள்ளுக்குள்ள இருந்ததால், விநியோகஸ்தரா இருந்தேன். ‘வில்லு’, ‘ஏகன்’,  ‘பீமா’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சிவாஜி’, ‘துப்பாக்கி’னு பல படங்களை அமெரிக்காவில விநியோகம் பண்ணியிருக்கேன். இந்த அனுபவம் எனக்குள்ள இருந்த சினிமா ஆசையை இன்னும் அதிகமாக்கிடுச்சு. நமக்கு நல்ல ரசனை இருக்கு. நான் ரசிக்கிற மாதிரி ஒரு படத்தை நாமே எடுப்போமேனு தோணுச்சு. ஒரு நல்ல ஒன்லைன் கிடைச்சதும், அதுக்காக மூணு வருடங்கள் உழைச்சுத் திரைக்கதை எழுதினேன். அதுதான், ‘கனவு வாரியம்’ திரைப்படம். இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க சில நடிகர்கள்கிட்ட பேசினேன். அவங்க தயங்கியதால் நானே நடிச்சு, தயாரிச்சு இயக்கிட்டேன்!’’ என்று அறிமுகம் கொடுத்தார் அருண் சிதம்பரம்.

‘‘முதன்முதலா ஒரு படம் பண்றோம், நம்ம நாட்டோட பிரச்னையைப் பேசுற படமா அது இருக்கணும்னு ஆசை. அதனாலதான், நாம அடிக்கடி சந்திக்கிற ‘கரன்ட் பிரச்னை’யைத் தொட்டிருக்கேன். நம்ம பிரதமர் மோடி சொல்ற ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்மார்ட் வில்லேஜ்’ போன்ற சில திட்டங்கள்தான் படத்தோட திரைக்கதை. ஆனா, நேரடியா கருத்து சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. படம் பார்க்க வர்ற எல்லோருமே அவங்கவங்க குழந்தைங்களோட வந்துதான் படம் பார்க்கணும்னு யோசிச்சு, ஏகப்பட்ட காமெடிக் காட்சிகளை எழுதினேன். ஏன்னா, ராவான கதைகளை மக்கள் ஏத்துக்காம போறதுக்குக் காரணமே, அதில் காமெடி கம்மியா இருக்கிறதனாலதான்!’’ என்றவர், கதைக்கு வந்தார்.

‘’வருடக்கணக்கில் தண்ணியையே பார்க்காத ஓர் ஊர்ல, உங்க முயற்சியால தண்ணீர் வந்துச்சுனு வைங்க... ஊர் உங்களைத் தூக்கிவெச்சு கொண்டாடும்ல? அதே மாதிரி, மின்சாரமே இல்லாத கிராமத்துல இருக்கிற ஹீரோ, மின்சாரப் பிரச்னையைத் தீர்க்கிறதுக்காக பண்ற காமெடியான முயற்சிகளும், அதுக்கு அவன் வாங்குற ‘பல்பு’களும்தான் படம். ஆனா, கடைசியில அவன் ஜெயிக்கணும். அப்படி ஜெயிக்கிறதுக்குமே, அவன் நம்ம ஊர்ல இருக்கிற முக்கியமான பிரச்னையையே எடுத்துக்கிறான். அது என்னங்கிறது சஸ்பென்ஸ். விஷூவலுக்கும் கவனம் செலுத்தியிருக்கேன். ரெண்டு ‘ரெமி’ விருதுல என் படத்துல வர்ற ‘கல்லா... மண்ணா’ங்கிற பாட்டுக்கு ஒரு விருது. இந்த ஒரு பாட்டுக்காக மூணு மாசம் ஆராய்ச்சி செஞ்சேன். ஏன்னா, இந்தப் பாட்டுக்காக 51 வகையான கிராமிய விளையாட்டுகளைப் படமாக்கியிருக்கேன்!’’ என்றவர்,
‘‘இன்னைக்கு இருக்கிற அரசியல்வாதிகள் பல பேர் ‘தடையில்லா மின்சாரம்’னு வாக்குறுதி கொடுக்குறாங்க. நம்ம தமிழ்நாட்டுல மின்சார வசதி சுத்தமாவே இல்லாத எத்தனையோ கிராமங்கள் இருக்கு. அதெல்லாம், சென்னையில இருக்கிற மக்களுக்கே தெரியாது. அதைச் சொல்லணும்னுதான் படம் எடுத்தேன். படத்துக்கு ‘ரெமி’ தவிர, மத்திய அரசு நடத்திய ‘தேசிய அறிவியல் திரைப்பட விழா’வுல சிறப்பு விருதும் கிடைச்சிருக்கு. இன்னும் சில ஃபிலிம் ஃபெஸ்டிவெல் அவார்ட்ஸ் வாங்கியிருக்கு. ஆனா, அத்தனை பாராட்டுகளைவிட, அமெரிக்காவில் படம் பார்த்த ஒரு சின்னப்பையன் ‘இந்தப் படத்தைப் பார்த்ததும். எனக்கும் ஏதாவது அறிவியல் சோதனைகளைச் செஞ்சு பார்க்கணும்’னு சொன்னதுதான், எனக்கு நிறைவா இருக்கு!’’ என்கிறார் அருண் சிதம்பரம்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick