குறியீடுடா!

‘கபாலி’ டீஸர் வந்ததில் இருந்து ரஞ்சித் ‘அதைக் குறியீடா சொல்ல வர்றார், இதைக் குறியீடா சொல்ல வர்றார்’ என சிலர் நடுமண்டையில் நங்கூரத்தை இறக்கினார்கள். அதிலும் சிலர் ‘ஏதோ குறியீடு சொல்ல வர்றாப்டி’ என்பதையே குறியீடாகக் கண்டுபிடித்து கடுப்பைக் கிளப்பினார்கள். அதனால், என் பங்குக்கு நானும் சில குறியீடுகளைக் கண்டுபிடித்து நங்கூரம் இறக்கியவர்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன்...

 டீஸரின் முதல் காட்சியில் நீல நிற ஆடை அணிந்த சிலர் கபாலியின் பின்னால் நடந்து செல்கின்றனர். வானமும் நீலம், கடலும் நீலம். ஆக, இயற்கையான பஞ்சபூதங்களின் சக்தி கபாலிக்கு இருக்கின்றன என்பதை இதன் மூலம் குறியீடாக உணர்த்தியிருக்கிறார்கள்.

‘நெருப்புடா...’ என தீம் மியூஸிக் அலறத் தலையை ஒருமுறை ஆட்டிவிட்டு கூலிங்கிளாஸோடு நடந்து வருகிறார் ரஜினி. அதாவது, வெயில் நெருப்பாய்க் கொதிக்கிறது என்பதைக் குறியீடாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த வெயிலிலும் கோட், சூட் போட்டுக்கொண்டு நடந்துவருவது கேங்ஸ்டர்களுக்கே உரிய திமிரைக் குறியீடாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் அவுட் ஆஃப் ஃபோகஸில் மக்கள் மீது சிலர் தடியடி நடத்திக் கொண்டிருப்பார்கள். ஃபோகஸில் ‘பென்ஸ்’ காரின் லோகோ தெரியும். அதாவது, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அத்துமீறல்கள் பெரும்பாலும் இந்த சமூதாயத்தால் ‘அவுட் ஆஃப் போகஸில்’ தான் வைத்து பார்க்கப்படுகிறது என்பதை இங்கே குறியீடாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ராதிகா ஆப்தே ஜன்னலுக்கு வெளியே நடந்து சென்றுகொண்டிருப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. அதாவது, ஜன்னலுக்கு வெளியே கபாலிக்கு இன்னொரு உலகமும் இருக்கிறது என்பதை இங்கே உணர்த்தியிருக்கிறார்கள்.

முருகன் கோயிலின் முன் புறாக்கள் பறக்கும் காட்சி, மத சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வலிமையான காட்சி.

சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு, ரஜினி மீண்டும் தன் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என்பதைக் குறிக்கிறது. லோ ஆங்கிளில் அவர் பேசும் ‘கபாலிடா’ வசனம் லோ கிளாஸ் மக்களின் வாழ்க்கையும் முன்னேற வேண்டும் என்பதைத்தான் குறியீடாக குறுக்குலேயே குத்துகிறது.

இதே மாதிரி யாராவது ட்ரெய்லருக்குக் குறியீடுகள் கண்டுபிடிச்சுருக்கேன்னு கிளம்பினீங்க, இதைவிட மரணக் கொடூரமாக இன்னொரு ஆர்டிக்கிள் எழுத வேண்டிவரும்...மகிழ்ச்சி...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick