ராஸ்கல் பாப்பா!

ஸ்போர்ட்ஸ், பெயின்டிங், டான்ஸர், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், யூ டியூப் ஸ்டார், இப்போ ‘இறைவி’ படத்தின் ஹீரோயின்களில் ஒருவர்... என இந்த ‘ராஸ்கல் பாப்பா’ பூஜா திவாரியாவின் லிஸ்ட் ரொம்பப் பெருசு. ‘ஆண்டவன் கட்டளை’, ‘குற்றமே தண்டனை’ பட வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் சிட் சாட்!

‘‘யாருங்க நீங்க?”

‘‘பிறந்தது பெங்களூர். சென்னையிலேயும், பெங்களூர்லேயும் மாறி மாறிப் படிச்சுக்கிட்டு இருந்த பொண்ணு. ‘போட் ரோயிங்’ விளையாட்டுனா எனக்கு உயிர். மாநில அளவுல சாம்பியன். சின்ன விபத்தினால, அடுத்து எதுவும் பண்ண முடியலை. ஒலிம்பிக்ல சாதிக்கலைனா என்ன? நடிப்புல ஆஸ்கர் வாங்குவோம்னு ரூட்டை மாத்தி, நாடக கம்பெனி ஆரம்பிச்சு, உலகம் பூரா சுத்தினோம். எங்க நாடக கம்பெனியோட ஒரு கிளைதான், ‘ராஸ்கல்களா’ யூ டியூப் சேனல். அதோட, என்னை ‘ராஸ்கல் பாப்பா’னே கூப்பிட்டாங்க. நல்லா இருக்குல்ல?’’

‘‘முதல் படம்?”

‘‘தனுஷ் நண்பியா ‘மயக்கம் என்ன’ படத்துல குட்டி கேரக்டர் பண்ணியிருப்பேன். அதுதான் முதல் படம். தொடர்ந்து பட வாய்ப்புக்காக எப்படி அப்ரோச் பண்ணணும்னு தெரியலை. என்னோட நாடகங்களைப் பார்த்துதான் கார்த்திக் சுப்புராஜ் சார் என்னை ‘இறைவி’க்காக செலக்ட் பண்ணியிருக்கார். இனி, பின்னிடலாம்.’’

‘‘ ‘இறைவி’ ஸ்பாட் எப்படி?”

‘‘இந்தப் படத்துல நடிக்க ஆடிஷன் போனது வேற ஒரு கேரக்டருக்கு. ஓகே ஆனது வேற கேரக்டர். ‘அது வேணாம், இது’னு ஷூட்டிங்ல நடிச்சது இன்னொரு கேரக்டர். இப்படி என்னைச் சுத்தல்ல விட்டதே ஆச்சரியமான அனுபவம்தான். ஆனா, நானே எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடந்தன. நான் நல்ல டான்ஸர்னு ஸ்பாட்ல இருந்த யாருக்கும் தெரியாது. எனக்கு இருந்த ஒரே பாட்டுல ஆடிக் கலக்கிட்டேன். நான் நல்லா ஓவியம் வரையவும் செய்வேன். ஒரு சீன்ல பெயின்டிங் தேவைப்பட்டுச்சு, நான் வரைஞ்ச பெயின்டிங்ஸை எடுத்து நீட்டினேன். என்னோட திறமையை வெளிப்படுத்த, என்னை நானே பரிசோதனை பண்ணிக்க ஒரு சான்ஸ் ‘இறைவி’யில் கிடைச்சுது.’’

‘‘அஞ்சலி, கமலினி முகர்ஜினு சீனியர் ஹீரோயின்களோட நடிச்சது?”


‘‘நாடகத்துல நடிச்சிருந்ததனால, நடிக்கிறது கஷ்டமா இல்லை. ஆனா, சினிமாவுல நமக்கு ஒரு ‘அசிஸ்டென்ட்’ வெச்சுக்கணும்னு எனக்குத் தெரியாம போச்சு. விஜய் சேதுபதிக்கு ஷாட் இல்லைனா, அவரோட அசிஸ்டென்ட் எனக்கு ஃபேன் பிடிப்பார். கமலினி முகர்ஜியோட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் எனக்கு மேக்கப் பண்ணுவார். நாடகத்துல நடிச்சிருந்தாலும், சினிமாவுக்கு நான் புதுசுதான். அட்வைஸ், டிப்ஸ் கொடுக்கிறதுக்கு கமலினி. டான்ஸ், மியூஸிக் பத்தி அஞ்சலினு ரொம்ப ஜாலியாவே பழகினாங்க. முக்கியமான விஷயம், நான் ஆடின பாடல்காட்சி முடிஞ்சதும், கமலினி என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாங்க.’’

‘‘பொழுதுபோக்கு?”

‘‘எல்லோருக்கும் உண்டியல்ல காசு சேர்த்து வைக்கப் பிடிக்கும்ல? எனக்கு விதவிதமான பாஸ்போர்ட்டை சேகரிச்சு வைக்கிறது ரொம்பப் பிடிக்கும். இதுக்காகவே நிறைய நாடுகளுக்குப் போவேன்.’’

‘‘எந்த ஹீரோகூட நடிக்கணும்னு ஆசை?”


‘‘நானே ஹீரோவா நடிக்கணும். ஆம்பளைங்கதான் ஹீரோவா நடிக்கணுமா என்ன?’’

‘‘லவ் லெட்டர்ஸ்?”

‘‘ஸ்கூல் படிக்கும்போதே நிறைய வரும். அதையெல்லாம் இன்னும் பொக்கிஷமா வெச்சிருக்கேன். நானும் நிறையப் பேரை லவ் பண்ணியிருக்கேன். எல்லாமே அறியாத வயசுல வந்ததனால, அப்படியே போயிடுச்சு. இப்போ யாராவது சொன்னா, ‘நான் ரொம்ப பிஸி பாஸ்’னு எஸ்கேப் ஆகிடுவேன்!’’

- பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick