இவங்கல்லாம் யூத்!

ந்தத் தேர்தலில் இளம்பிஞ்சுகளாய்க் களம் காணும் சில யூத்ஃபுல் அரசியல்வாதிகள் இவர்கள்..!

சொல்லி வைத்ததுபோல் 30 வயதுகூட ஆகவில்லை. எல்லோருமே பாட்டாளி மக்கள் கட்சியும்கூட!

அகிலேஷ், அண்ணா நகர் தொகுதி:  ‘அகிலேஷ் ஃபார் அண்ணா நகர்’ என்று ஃபேஸ்புக்கில் கலக்கி எடுக்கும் பார்ட்டி. http://vote4akhilesh.net/ என்ற இணையத்தில் தொடர்புகொண்டால் உடனே கால் பண்ணி ஓட்டு வேட்டை ஆடுகிறார். ‘’நீங்க அண்ணா நகரா? என்ன பிரச்னை உங்களுக்கு?’ என ஒரு டாக்டர் போல கேட்கிறார். ‘‘ஒவ்வொரு தேர்தலிலும் படித்தவர்கள் அதிகம் வசிக்கும் அண்ணாநகர்‬ தொகுதியில்தான் குறைவான வாக்குகளே பதிவாகும். என்ன மாதிரியான மாற்றங்களை அண்ணாநகர் தொகுதியில் விரும்புகிறீர்கள் என்று ஒரு நிமிடம் ஓடக்கூடிய செல்ஃபி வீடியோ எடுத்து என் செல்போன் நம்பருக்கு அனுப்புங்கள்!’’ என்கிறார் பார்ட்டி.

சுரேஷ் குமார், மயிலாப்பூர் தொகுதி: அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.ஈ. முடித்த எம்.பி.ஏ பட்டதாரி. அமெரிக்காவில் மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தும் போகாதவர். ‘‘ஸ்கூல் பிள்ளைங்களுக்கு இலவசமா டியூஷன் எடுத்துட்டு ‘ஆயுத எழுத்து’ சூர்யா போலத் திரிஞ்சேன்.  அரசியலுக்கு இளைஞர்கள்தான் வரணும். அதனாலதான் அன்புமணி சார் கூப்பிட்டதும் வந்துட்டேன். சி.பி.எஸ்.இ கல்வியை இலவசமா கொடுக்கக்கூடிய கட்சி எங்க கட்சிதான்!’’ என்கிறார்.

வினோபா பூபதி, வேளச்சேரி தொகுதி: பொறியியல் மட்டும் அல்லாமல் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். ஒரு தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பொது நிர்வாகம் பற்றி வகுப்பெடுத்தவர். சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்டதால் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் அறிமுகம் முன்பே கிடைத்திருக்கிறது. ‘‘ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற அன்புமணியின் கொள்கை எனக்கு அவர் மேல் பிடிப்பைக் கொண்டு வந்தது. ஃபேஸ்புக், ட்விட்டரோடு மட்டும் அல்லாமல் நேரிலும் அலைஞ்சு கறுப்பாகிட்டேன் பாஸ். செம ரெஸ்பான்ஸ். வேளச்சேரில ஈஸியா ஜெயிப்பேன். பாருங்க!’’ என்கிறார்.

முரளி சங்கர், அரூர் தொகுதி: தேசிய அளவிலான கால்பந்தாட்ட வீரர். எம்.பி.ஏ பட்டதாரி. விளையாட்டு மீது கொண்ட காதலால் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆரம்பித்து சீரியஸாய் அதில் இயங்கி வருபவர். ‘‘பின் தங்கிய தர்மபுரி மாவட்டத்திலிருந்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நானே விரும்பி கட்சியில் சேர்ந்தேன்! இது தனித்தொகுதிதான். நிச்சயம் ஜெயித்து அன்புமணி சார் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்’’ என்கிறார்.

அசோக் ஜெயேந்தர், சிங்காநல்லூர் தொகுதி: இங்கிலாந்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து முடித்த கோவைவாசி. 2014-ல் இந்தியா திரும்பியவர் பிசினஸில் குதித்திருக்கிறார். ‘‘அச்சம் இல்லை என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு வந்தபோது அன்புமணி ராமதாஸின் அறிமுகம் கிடைத்தது. என்னை வேட்பாளராக அறிவித்தது நிஜமாகவே இன்ப அதிர்ச்சி தான்!’’ என்கிறார்.

பார்க்கலாம் பார்க்கலாம் என்ன பண்ணப்போறீங்கன்னு!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick