கடவுளோட அருள்வாக்கை ஃபார்வர்ட் பண்றேன்!

.தி.மு.க-வுக்காக மதுரை ஆதீனம் பிரசாரம்தான் செய்கிறார். ஆனால், ‘ஜெயலலிதாதான் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்பார்’ என்று அருள்வாக்கே சொல்லியிருக்கிறார், வடபழனி சாய்பாபா என்கிற வாழப்பாடி சாய்பாபா செல்வக்குமார். வாங்க, சுவாமிகளின் அருள்வாக்கைக் கேட்போம்!
‘‘பெயர்லேயே என் ஊர் தெரிஞ்சிருக்கும். வாழப்பாடி மற்றும் வடபழனியில நம்ம தியான மண்டபங்கள் இருக்கு. சின்ன வயசுல இருந்தே ஆன்மிக நாட்டம். தினமும் நான்கு ஆன்மிகப் புத்தகங்களைப் படிப்பேன். அதனாலேயே ஸ்கூல்ல முதல் ரேங்க் வாங்கினேன். மத்த பசங்க மாதிரி விழுந்து புரண்டு படிக்காம, நின்னு நிதானமா வாசிச்சாலே மனசுல தங்குற சக்தி எனக்குக் கடவுள் கிருபையால அப்பவே இருந்தது. நடிகர் சிவக்குமாரின் நண்பர், நன்னீர் அடிகள் என்பவர்தாங்க என்னுடைய முதல் குரு. அவர் வீட்டுலதான் வளர்ந்தேன். பிறகு கல்லூரியில டிப்ளமோ இன்ஜினீயரிங் படிச்சேன். அப்போதான் ஆன்மிக ஆர்வம் அதிகமாச்சு. குரு அங்கப்பன் என்பவர் எனக்கு வழிகாட்டியா இருந்தார். ஆனால், திடீர்னு ஒரு பிரச்னை வந்தது. என்னால எந்தச் சத்தத்தையும் தாங்கிக்க முடியலை. சின்னச் சத்தம் காதுக்குள்ள கேட்டாலும், மண்டையில சம்மட்டி எடுத்து அடிச்ச மாதிரி ஒரு வலி. மருத்துவர்கள், ஒரு பிரச்னையும் இல்லைனு சொல்லி சில மருந்துகள் கொடுத்தாங்க. ஆனா, நான் ஆராய்ச்சியில இறங்கினேன். எந்த ஒரு விஷயத்தையும் அளவுக்கு அதிகமா செஞ்சா இப்படித்தான் ஆகும். இந்த உண்மையைக் (?!) கண்டுபிடிச்சதும், ‘ஐஸ்வர்ய தியான யோகம்’னு ஒரு யோகா முறையை நானே உருவாக்கினேன். எனக்கு ஆன்மிகத்துல முக்தியும் கிடைச்சுது! இதை அடிப்படையா வெச்சு, ‘நிம்மதிக் கலை’னு ஒரு அமைப்பு ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு இருக்கேன். வீட்டையும், நாட்டையும், உலகத்தையும் ஒரே மாதிரி பார்த்துக்கிறதுதான் ஆன்மிகம். அதனால, கல்யாணம் செஞ்சுக்கிட்டு மூணு குழந்தைகளோடதான் ஆன்மிகத்துல இருக்கேன்!’’ அறிமுகம் கொடுத்துத் தொடர்ந்தார், வாழப்பாடி சாய்பாபா.

‘‘முக்தி அடைதல்ங்கிறது கடவுள் தன்மையை உணர்றது. நான் உணர்ந்துட்டேன். என்னால ஒரு மலை உச்சிக்குப் போனா, 360 டிகிரியில பார்க்க முடியும். இந்த இறைநிலையை எல்லோரும் அடையணும்னு ஆசைப்படுறேன்!’’ என  டாப்பிக் மாறிக்கொண்டிருந்தவரை, ‘அருள்வாக்கு’க்குக் கொண்டுவந்தேன்.

‘‘அடிக்கடி தியானம் பண்ணுவேன். அருள்வாக்கு சொல்றதுக்காகவே உட்காரலை. கேஷூவலா தியானம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு ஃப்ளாஷ் அடிச்சது. ஜெயலலிதா வெற்றி பெற்று கை அசைக்கும் காட்சிகள், பதவி ஏற்கும் காட்சிகள் எல்லாமே மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்தது. ஆனா, இது கனவு இல்லை. ஏன்னா, கனவுங்கிறது வேற. இது வேற. இது, என் மனசுக்குள்ள மின்னல் மாதிரி சட்டுனு சில நொடிகள் வந்துட்டுப் போயிடும். ஆக, அம்மாதான் அடுத்த முதல்வர்னு இறைவன் எனக்குச் சொல்லிட்டார். இதை நானும் மக்களுக்குச் சொல்லணும்னு சில பேருக்கு ஃபார்வர்ட் பண்ணினேன். ஆனா, நான் பி.ஜே.பி-யோட அடிப்படை உறுப்பினர்!’’ என ட்விஸ்ட் கொடுத்தார்.

‘‘ஆமா. உண்மையைச் சொல்றதுல எனக்குப் பாகுபாடு கிடையாது. இதுவே பி.ஜே.பி ஆட்சிக்கு வர்ற மாதிரியோ, தி.மு.க ஆட்சிக்கு வர்ற மாதிரியோ ‘காட்சிகள்’ மனசுக்குள்ள வந்திருந்துச்சுனா கட்டாயம் சொல்லியிருப்பேன். பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிலரே, ‘இது அவங்களுக்கு சாதகமா இருக்குமே?’னு கேட்டாங்க. இதுல எந்த உள்நோக்கமும் இல்லை. கடவுளோட அருள்வாக்கை அப்படியே சொல்றேன்னு சொல்லிட்டேன். எனக்கு பி.ஜே.பி பிடிச்ச கட்சி. ஆன்மிகத்தை மதிக்கிற கட்சி. அவங்க கட்சியில எனக்கு தேசிய அளவுல பொறுப்பு கொடுக்குறேன்னுகூட சொன்னாங்க. ஆனா, நான்தான் வேணாம்னு மறுத்துட்டேன்!’’ என்றவரிடம், ‘சாய்பாபா’ அடைமொழி பற்றிக் கேட்டேன்.

‘‘ஷீரடி சாய்பாபாவுக்கும் புட்டபர்த்தி சாய்பாபாவுக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்டுறேன். அதுக்குப் பூமி பூஜையும் போட்டுட்டேன். உலகத்துலேயே இந்த மாதிரி ஒரு கோயில் இல்லை. அவங்களோட ஆன்மிகச் சேவையை நான் தொடர்ந்து செய்றேன். அவங்களோட பெயரை எந்த விதத்துலேயும் களங்கப்படுத்தலை. நல்லதுதான் பண்றேன்’’ என்று விளக்கம் கொடுத்தவர், ‘‘இவங்களுக்கு மட்டுமில்லை. எதிர்காலத்துல விவேகானந்தர், சாக்ரடீஸ், புத்தர், இயேசு, நபிகள் நாயகம், வள்ளலார், திருவள்ளுவர்... இப்படி ஒருலட்சம் ஞானிகளுக்கும் சேர்த்து, ‘உலக மனித நேய நன்றிக் கோயில்’னு ஒண்ணு கட்டப்போறேன்!’’ என்று முடித்தார்.

எத்தனை?

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick