டார்ச்சர் டாக்டர்!

ரு படத்தில் சில்லரை இல்லைனு எக்ஸ்ட்ரா ஒரு பல்லைப் புடுங்குவார் வடிவேலு. இது காமெடி சீன். நிஜமாகவே சும்மானாச்சுக்கும் பல் பிடுங்கி விடுவதையே பொழைப்பா வெச்சிருந்த ஒருவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்திருக்கிறார்கள்! ஆனா, இவரு கொஞ்சம் மோசமான ஆளு பாஸ்!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், 51 வயதான ஜேக்கப்ஸ் வான் நிரோப். பல் மருத்துவரான இவர், நெதர்லாந்தில் இருந்து பிரான்ஸுக்குக் குடியேறி, தனது மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். நல்லா இருக்கிற பல்லைப் பிடுங்குவதும், சரிசெய்ய வருபவர்களின் பல்லை வேண்டுமென்றே உடைத்துச் சிதைப்பதும் என நோயாளிகளின் வாயில் புகுந்து விளையாடி யிருக்கிறார். ‘மார்க்’ என்ற செல்லப்பெயரோடு அழைக்கப்பட்ட இவர், நோயாளிக்குப் போட்ட ‘மார்க்’ ஏராளம். பல்லை ஆராய்ச்சி பண்றேங்கிற பெயர்ல, வாயை அகல விரித்து தாடை வலிக்கு வழி செய்றதும், நாக்கைப் பிடித்து இழுத்து ‘ஸாரிங்க... தெரியாம இழுத்துட்டேன்’ என போக்குக்காட்டி சமாளிப்பதுமாய் இருந்திருக்கிறார். இவரது ஹைலைட் அட்ராசிட்டிகள் சிலவற்றைச் சொல்றேன். நேர்த்தியாகப் பல் முளைக்க, பல்லுக்குக் ‘கம்பி’ கட்டச்சென்ற பெண் ஒருவரின் எட்டு பற்களைப் பிடுங்கியிருக்கிறார். ஒரு பல் பிடுங்கப்போன ஒருவருக்கு ‘மதமதப்பு’ ஊசியை ஏத்தியவர், விறுவிறுவென ஏழெட்டு பற்களைக் கழட்டியிருக்கிறார். பாவம், பல் பிடுங்கப்பட்டவருக்குப் பலவாரங்கள் ரத்தம் கசிவது நிற்காமல் இருந்திருக்கிறது. மருத்துவமனைக்கு வந்த ஆசிரியர் ஒருவரிடம் ஒவ்வொரு நாளைக்கு ஒரு பல் வீதம் பிடுங்கியிருக்கிறார்.

2009 முதல் 2012 வரை மூன்று ஆண்டுகளாக நோயாளிகளுக்கு இவர் கொடுத்துக்கொண்டிருந்த விநோதமான டார்ச்சர்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த சிலர், போலீஸுக்குப் போனைப் போட்டிருக்கிறார்கள். நாளுக்கொரு பல் பிடுங்கப்பட்ட ஆசிரியரும் புகார் கொடுத்திருந்ததால், 2013ல் ‘டார்ச்சர் டாக்டர்’ ஜேக்கப்ஸைக் குண்டுக்கட்டாதத் தூக்கிப் போய் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். போலீஸுக்குப் பயந்து கனடாவுக்குத் தப்பிச்சென்றவர், அங்கே சிலகாலம் பல் புடுங்கியிருக்கிறார். ‘டார்ச்சர் டாக்டர்’ நம்மூரில்தான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொன்டு பதறிய கனடா மக்கள், ‘உடனடியாக அவரைக் கைது பண்ணி உங்க ஏரியாவுக்குக் கொண்டுபோயிடுங்க!’ என கோரிக்கை வைத்த சம்பவமும் நடந்திருக்கிறது. பிறகு, ஒருவழியாக 2014, டிசம்பர் மாதத்தின் ஒரு சுபயோக சுபதினத்தில் கைது செய்யப்பட்டு பிரான்ஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 120க்கும் அதிகமானோர் கொடுத்த புகார்களையும், அவர்கள் அனுபவித்த சித்திரவதைகளையும் விலாவரியாகக் கேட்ட நீதிபதிகள், சில வாரங்களுக்கு முன்பு ‘எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை. எட்டாயிரம் பவுண்டுகள் அபராதம். இனி, பல் மருத்துவம் பார்க்க நிரந்தரத் தடை!’ என உத்தரவிட்டு, உள்ளே தள்ளியிருக்கிறார்கள். சரி, ‘ஏம்ப்பா இப்படியெல்லாம் பண்ண?’ என நீதிபதிகள் கேட்டதற்கு டாக்டர் சொன்ன பதில், ‘அவங்கெல்லாம் வலியால துடிக்கிறதைப் பார்க்க சந்தோஷமா இருந்துச்சு. தவிர, பல்லு சிதைஞ்சவங்களோட மெடிக்கல் கிளைம்களை நான் எடுத்துக்கிட்டேன்’ என்றிருக்கிறார். ‘ஹாரர் மருத்துவர்’ என பிரான்ஸ் மக்களால் அழைக்கப்பட்ட இவருக்கு, இப்போது சைக்காலஜி மருத்துவர்கள் ஜெயிலுக்குள்ளேயே வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

-கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick