“விஜயகாந்த் குழந்தைமாதிரி!”

கேப்டன் மாதிரியே இருக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடாசலம். விஜயகாந்த் குமார் என்கிற  பெயரில் உள்ளூரில் இவர் பிரபலம்.

‘‘நாமக்கல்லில் என்னுடைய நண்பர்கள் ஒரு டான்ஸ் குரூப் வெச்சிருந்தாங்க. நான் பார்க்க கேப்டன் மாதிரியே இருந்ததால என்னையும் அவங்ககூட சேர்த்துக்கிட்டாங்க. இதுவரை ஆயிரம் மேடைகளைப் பார்த்துட்டேன். ‘கலக்கப்போவது யாரு’, ‘அசத்தப்போவது யாரு’ மேடைகளும் அதில் அடங்கும். குறிப்பாக ‘ஆதித்யா’ சேனலில் கேப்டன் ஸ்டைலில் நான் ஆடிய கங்ணம் ஸ்டைல் வீடியோ எனக்குப் பெயர் வாங்கித் தந்துச்சு. அந்த வீடியோவை ஒரே நாளில் ரெண்டு லட்சம் பேர் பார்த்திருந்தாங்க. இப்போ புது யுகம், ஜி தமிழ் சேனல்கள்ல நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டு  இருக்கேன். இது தவிர வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் போகிறேன்’’ என்றவர்...

‘‘ஓர் உண்மையைச் சொல்லட்டுமா... கேப்டன் அரசியலுக்கு வந்தது எனக்கு சுத்தமா பிடிக்கலை. நடிகரா இருக்கும்போது கெத்தா இருந்தவரை அரசியலுக்குள் வந்ததும் கண்டபடி கலாய்க்கிறாங்க. காமெடியாப் பார்க்கிறாங்க. அவர் குழந்தை மாதிரி. அரசியலுக்கு வராம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருப்பார்.  முன்னெல்லாம் ஸ்டேஜ் ஷோ நடிக்கும்போது கேப்டன் படத்தில் பேசின வசனங்களை மட்டும் நான் பேசுவேன். ஆனா இப்போ அவர் மீடியாவுக்கு எப்படி பேட்டி கொடுப்பார், எப்படி டென்ஷனாகுவார்னு ஆடியன்ஸ் பேசச் சொல்லி வம்பு பண்றாங்க. அதே மாதிரி யாராவது தப்பாப் பண்ணினா அவர் மாதிரியே எனக்கும் பயங்கரமா கோபம் வரும். அப்போ கையில எது கிடைக்குதோ அதைத் தூக்கி அடிச்சிருவேன். ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் நடிச்சிருக்கேன். ‘புதிய பூமி’ நாஞ்சில் மணிமாறன், மிமிக்ரி பாஸ்கர், இவங்க ரெண்டு பேரும் எனக்கு வாய்ப்புக் கொடுத்து வளர்த்துவிட்டவங்க’’ என்றவரிடம் ‘‘சரி, இந்தத் தேர்தலில் உங்க ஓட்டு யாருக்கு?’’ என்று கேட்க ‘‘அதில் என்ன சந்தேகம், கேப்டனுக்குத்தான்’’ என்று அடித்து சொல்கிறார் வெங்கடாசலம். நல்லவேளை, தூக்கி அடிக்கவில்லை!

-ஜுல்ஃபி, படங்கள்: சூ.நந்தினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick