செத்துச் செத்து விளையாடறாங்க!

மிருகக்காட்சி சாலையில் முதலை வாய்க்குள் எதையெல்லாம் விடுவாங்க? சிக்கனை விடுவாங்க, மட்டனை விடுவாங்க, ஆனால் தாய்லாந்தில் இருக்கும் சம்ப்ரான் என்ற மிருகக்காட்சி சாலையில் மனிதத் தலையை விடுறாங்க!   

அக்ரபால் வன்னாவாட், சாம்ரிட் மைபோரன் இந்த இரண்டு பேரின் தலைதான் இப்படி முதலை வாய்க்குள் டிராவல் பண்ணிட்டு வருது. தலையை மட்டுமல்ல, முதலையின் தொண்டைக்குள் கையை விடுவது, முதுகில் ஏறி சவாரி செய்வதுனு இன்னும் நிறையப் பண்றாங்க. இப்படி வாரத்துக்கு 24 முதலை ஷோக்கள் இங்கே நடக்கின்றன. இங்கே இருப்பவை நன்னீர் முதலைகள். எல்லாமே பதினைந்து வயதுக்கு மேலே உள்ளவை. முக்கியமான ஒரு விஷயம், ஷோ நடக்கும்போது ஒரு சின்னத் தப்புக்கூட நடக்கக் கூடாது.  அப்படி ஏதாவது நடந்தா, கழுத்துல தலை இருக்காது. இது நல்லாத் தெரிஞ்சும் இவங்க துணிச்சலா இந்த வேலை செய்றாங்க.    

முதலையின் முதன்மைப் பயிற்சியாளர் அக்ரபால் ஏழு வருடங்களாக இந்த வேலையில் இருக்கிறார். தினமும் காலையில் இவர் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது இவருடைய மனைவி கடவுளே காப்பாத்துப்பானு வேண்டியபடிதான் வேலைக்கு அனுப்புவாராம். அதுபோக இவருடைய அப்பாவும் அம்மாவும் எப்போதும் ஒருவித பீதியிலேயே இருப்பாங்களாம். அவங்க பயந்த மாதிரியே ஒருநாள் ஒரு முதலை இவரைக் கடிச்சு வெச்சிடுச்சு. எல்லோரும் பதறிட்டாங்க. பல தையல்கள் போட்டு ஹாஸ்பிட்டலில் ரெஸ்ட் எடுத்தவர், திரும்பப் பழைய பன்னீர் செல்வமா வந்திருக்கிறார். இப்போ இன்னும் ஆக்டிவா இருக்கிறாராம்.

அக்ரபாலுக்கு இந்த சாகசத்தில் கம்பெனி கொடுப்பவர் சாம்ரிட். முதலில் இவர் வாள்வீச்சு வீரராகத்தான் இங்கே வேலைக்குச் சேர்ந்தாராம். அந்த நேரத்தில் முதலை ஷோவுக்கு ஆள் தேவைப்பட இவராகவே விருப்பப்பட்டு இதில் குதித்திருக்கிறார். சாம்ரிட்டின் ஸ்பெஷல், முதலையின் தொண்டைக்குள் கையை விடுவது. அத்துடன் பத்தே நாட்களில் முதலையோடு பழகுவது எப்படி என்று பார்வையாளர்களுக்குச் சொல்லியும் தருகிறார். இவர் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ‘எந்த ஒரு சூழ்நிலையிலும் பயப்பட மட்டும் கூடாது’ என்கிறார் இந்த பாங்காக் வீரர்.

-ஜுல்ஃபி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick