‘கேக்’கிறீங்களா?

ரண்டு வாரங்களுக்கு முன்பு இணையத்தில் கேக்தான் ஹாட் டாபிக். (ஏன்? எப்படி? எனத் தெரியாதவர்கள் உங்களுக்குத் தெரிந்த நெட்டிசன்களைப் பிடித்து உலுக்கவும்). நமக்குத் தெரிந்து காஸ்ட்லியான கேக் என்றால் ‘பிளாக் ஃபாரெஸ்ட், ரெட் வெல்வெட், சாகோ டஃபுல்’  தான். ஆனால், நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மில்லியன் டாலர்களிலும் கேக்குகள் இருக்கின்றன, அவற்றில் ‘நச்’னு நாலு கேக்குகள் பற்றி...

லக்ஸுரி ஃப்ரைடல் ஷோ கேக்: 2006-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கலிஃபோர்னியா வில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் வைக்கப்பட்டது இந்த கேக். மேல்புறம் அடர் ஃப்ராஸ்டி க்ரீமாலும், கீழ்ப்பகுதி அடர் ஐவரி ஃபான்டன்டாலும் பூசி மூடப்பட்டிருந்தது. இந்த சாதாரண கேக் 20 மில்லியன் டாலர் காஸ்ட்லி கேக் ஆகக் காரணம், கேக் முழுக்க பதித்து வைத்திருந்த வைரங்களும், மழைச் சாரல் மாதிரி தூவப்பட்டிருந்த தங்கத்துகள்களும்தான். ஆனால், இந்த கேக்கை வந்திருந்த விருந்தினருக்கு சாப்பிடக் கொடுக்காமல் ஆயுதம் தாங்கிய ஆறு பேர் பாதுகாப்பில் பத்திரமாக வைத்திருந்தனர். அடப் போங்கய்யா...

லஸ்டர் டஸ்ட் கேக்: பார்க்க சுமாராக இருக்கும் இந்த கேக்கின் விலை 1.3 மில்லியன் டாலர்கள்.  இந்த கேக் ஒரு திருமண விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டது. 160 பவுண்டுகள் எடை கொண்ட இந்த கேக் முழுவதும் காஸ்ட்லியான வைரக்கற்களும், நீல நிறக்கற்களும் பதித்து வைக்கப்பட்டு வெள்ளித் துகள்களும் தூவப்பட்டிருந்தன. இந்த கேக்கில் 1,200 வைரங்கள் பதிக்கப்பட்டிருந்ததாம். மொத்தம் 320 பேர் சாப்பிட்ட இந்த கேக்கின் சின்ன பீஸின் விலை 3,125 டாலர்கள். அம்மாடியோவ்...

 

நேஷனல் வெட்டிங் ஷோ கேக்: இதுதான் இதுவரை உலகில் தயாரிக்கப்பட்டதிலேயே காஸ்ட்லியான கேக். இந்த கேக் 2013-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘செஸ்டர்’ எனும் பேக்கரியில் ஆபரணக் கலைஞர்கள் ரசல் மற்றும் கேஸ் உதவியோடு தயாரிக்கப்பட்டு, லிவர்ஃபூலில் நடந்த  ‘நேஷனல் கே வெட்டிங் ஷோவில்’ மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் உயரம் கொண்ட இந்த எட்டு அடுக்கு கேக்கில் அலங்கார நோக்கத்திற்காக 4,000 வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. இதன் விலை 52.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள். எல்லா கேக்லேயும் கொஞ்சம் சாம்பிள் கிடைக்குமா?

ராயல் வெட்டிங் கேக்: சமீபத்தில் நடந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் திருமணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட கேக். உலகமே உற்றுப் பார்த்து வியந்துகொண்டிருந்த இந்த கேக்கை உருவாக்கியவர் டிசைனர் ஃபியோனா கெய்ம்ஸ். எட்டு அடுக்குகள் கொண்ட இந்த கேக்கில், ஃபியோனா புகுந்து விளையாடியிருக்கிறார். கேக்கின் ஒவ்வொரு பகுதியும் அத்தனை கலைநயத்தோடு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த கேக்கானது 17 வகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு நாட்டைக் குறிப்பதாம். இந்த கேக்கின் விலை 80,000 டாலர்கள். மன்னர் பரம்பரைனா இப்படித்தான்...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick