கண்ணே கேமராதான்!

ண்டனைச் சேர்ந்த ஸ்டீபன் வில்ஷிரே வித்தியாசமான மனிதர். இவருடைய கண்கள் கேமரா போன்றதாம். எந்த  ஒரு காட்சியையும் ஒரு முறை பார்த்தால் அதை அப்படியே வரைந்து அசத்திவிடுவாராம்.

ஐந்து வயதாகும்போது இவருக்குள் இருக்கும் ஓவியத்திறமையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஸ்டீபனின் பெற்றோர்கள். பள்ளியில் படிக்கும்போது முதன் முறையாக பிரஷைக் கையில் எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் விலங்குகள், கார்களை வரைந்து பழகியவர், ஏழு வயதாகும்போது புதிய முயற்சியாக லண்டனில் இருக்கும் முக்கியமான சில இடங்களை வரையத் திட்டமிட்டு ஒரே ஒரு முறை அந்த இடங்களைப் பார்த்துவிட்டு அப்படியே வரைந்திருக்கிறார். இதனால் சின்ன வயதிலேயே லண்டன் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இவருடைய அபூர்வமான திறமையைப் பார்த்து வியந்த பள்ளி ஆசிரியர் இவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.

குறிப்பிட்ட சில இடங்கள், கட்டடங்களை மட்டும் அதுவரை வரைந்து வந்தவர், திடீரென விஸ்வரூபம் எடுத்து பூமியின் நில அமைப்பையே வானில் இருந்து வரையத் தொடங்கிவிட்டார். இதற்காக ஹெலிகாப்டரில் பல கிலோமீட்டர்கள் பறந்து வரைய வேண்டிய இடங்களைப் பார்த்தபடியே செல்வாராம். தரை இறங்கியதும் அதை அப்படியே கேன்வாஸில் கொண்டுவந்து ஆச்சரியப்படுத்திவிடுவாராம்.

இது எப்படி சாத்தியம் எனக் கேட்பவர்களுக்கு, “எந்த ஓர் இடத்தையும் தெளிவாக ஒருமுறை பார்த்துவிடுவேன். என்னுடைய கண்கள் ஒரு கேமராவைப் போல  செயல்படும். இதனால் அந்த இடத்தின் ஒவ்வொரு அங்குலமும் மனதில் அப்படியே  பதிந்துவிடும்” என்கிறார். குறிப்பாக லண்டனின் சில பகுதிகளை வரையத் திட்டமிட்டபோது ஹெலிகாப்டரில் நான்கு சதுர மைல் தூரம் சுற்றி 19 அடி பேப்பரில் வெறும் இருபதே நிமிடங்களில் வரைந்திருக்கிறார். அதேபோல் ஜப்பான் நிலநடுக்கத்தின் போதும் ஹெலிகாப்டரில் பறந்தவர், அங்கே ஏற்பட்டுள்ள பாதிப்பை 32 அடி நீள கேன்வாஷில் ஏழு நாட்கள் வரைந்தார். இந்த ஓவியத்தை ஹாங்காக், துபாய், ஜெருசலம் ஆகிய நாடுகளில் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். இதில் ஹைலைட்டான விஷயம் இந்த ஓவியங்களில் இருக்கும் அனைத்து இடங்களும் இம்மி பிசகாமல் அந்தந்த இடத்திலேயே இருக்கின்றன.  பிறரிடம் பேச்சு மூலம் தொடர்பு கொள்வதைவிட ஓவியம் மூலம் தொடர்புகொள்வது எளிதான விஷயம் என்பது ஸ்டீபனின் தத்துவம்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick