சென்னையில் ஒரு பனிக்காலம்!

மீபத்தில் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலாவி சென்னை மக்களை ஜில்லிட வைத்தது. ஆரம்பத்தில் அது டுபாக்கூர் நியூஸ் என்றுதான் பலர் நினைத்தனர். காரணம் செய்தி அப்படிப்பட்டது. 200 வருடங்களுக்கு முன் அதாவது சரியாக 1815-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி சென்னையின் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ்ஸாகவும் அப்படியே நான்கு நாட்கள் வரை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மைனஸ் மூன்று டிகிரி செல்சியஸ்ஸாகக் குறைந்து சென்னையே பனிக்காடாக உறைந்து போய்க் கிடந்தது என்ற செய்திதான் அது!

ஆச்சரியமாக இருக்கிறதா? கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தகவல் போல் இருந்தாலும்  அது உண்மைதான். இந்தோனேஷியா தீவில் இருக்கும் தம்போரா மலையில் ஏற்பட்ட எரிமலைச் சீற்றத்தால் நிலப்பரப்பு 4300 மீட்டர் அளவுக்கு உயர்ந்ததாம். லாவா எனப்படும் நெருப்புக் குழம்பானது அதிக அளவில் 1815-ம் ஆண்டு ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதி வெளியேறியது. கிட்டத்தட்ட 12,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 2,000 கிலோமீட்டருக்கு அப்பாலும் சீற்றம் உணரப்பட்டதாம். அதனால் ஏற்பட்ட தூசுத்துகள்களை ‘தம்போரா துகள்’ என அறிஞர்கள் அழைக்கிறார்கள். அது வடக்கு நோக்கி நகர்ந்து காலநிலையையும் தட்ப வெப்பத்தையும் மாற்றிவிட்டது. வியாபாரக்காற்று எனப்படும் கிழக்கிலிருந்து உருவான ஈரப்பதமானது இந்தியப் பெருங்கடலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிலமணி நேரங்களில் அதன் தாக்கம் வங்காள விரிகுடா வரை பரவியது. ‘ஏரோசால்’ எனப்படும் சாரல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் உருவாகி சென்னையைத் தாக்கியது. காற்றிலிருக்கும் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை வாய்ந்த அந்த ஏரோசால்களால்தான் சென்னை, வரலாறு காணாத குளிரில் மூழ்கியது. மைனஸ் குளிரில் எல்லாமே உறைந்தும் போனது. ஆரம்பத்தில் அந்தத் தட்பவெப்ப நிலையால் குஷியான மக்கள் அடுத்த சில நாட்களில் கதறி அழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம். ஒரு வருடத்திற்கு மழைப்பொழிவு இல்லாமல் போனதும் பயிர்கள் விளையவில்லை என்பதும் அதன் தாக்கமாம். இதனால் பஞ்சம் தலைவிரித்தாடியது. காலரா பரவியது. 70,000 பேர் பாதிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

ஆகஸ்ட் 1815-ல் ஜாவா தீவில் இருந்து கப்பலில் வந்து ஆய்வு செய்து திரும்பியதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ‘தி மெட்ராஸ் கொரியர்’ என்ற பத்திரிகை செய்திக்குறிப்பில் இருக்கிறதாம்.

‘200 வருஷத்துக்கு முன்னாடி இப்படினா அடுத்த 200 வருஷத்துக்கு அப்புறம் சென்னை இருக்குமா?’ என்ற கேள்வியை இணையவாசிகள்  உருவாக்கி பீதியைக் கிளப்புகிறார்கள்.

எது எப்படியோ சென்னையில் ஒரு கடும் பனிக்காலம் நிகழ்ந்ததை இந்தக் கொடும் வெயில்காலத்தில் நினைக்கும்போது ஜில்லென்று இருக்கிறது!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick