டெரர் தீவுகள்!

‘தீவு’ன்னாலே குஷி எக்கச்சக் கத்துக்கு எகிறும்! சுற்றுலா, ஹனிமூன், ஜாலி டிரிப்... இவையெல்லாம் தாண்டி, மோசமான சில தீவுகளைப் பற்றியும் தெரிஞ்சுக்கலாமே!

சின்ன முட்டை சைஸில் இருக்கும் ‘க்ருனார்ட் தீவு’  ஸ்காட்லாந்தில் இருக்கிறது. உலகின் மோசமான, ஆபத்தான தீவுகளில் ஒன்றான இதற்கு, ‘ஆந்த்ராக்ஸ் தீவு’ என்றும் பெயர். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் அரசு  ‘உயிரியல் போர்’ பரிசோதனைகளுக்காகவும், ஆந்த்ராக்ஸ் கிருமிகளைக் கொண்டு குண்டுகளைத் தயாரிக்கவும் க்ருனார்ட் தீவைப் பயன்படுத்தினார்கள். பிறகு பல்வேறு முயற்சிகள் மூலமாக போர் தடயங்களை அழித்து, தீவைக் காப்பாற்றும் முயற்சியைத் தொடர்ந்தார்கள். 1986-ல் ஃபார்மால்டிஹைடு மற்றும் கடல் நீரைக் கொட்டி, தீவைச் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. 1990-ல் ‘பாதுகாப்பான தீவு’ என்று அறிவித்தார்கள். 2007-ல் தீவில் இருக்கும் ஆடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் பரிசோதனை நடத்தி, ‘ஆந்த்ராக்ஸ் பாதிப்பு இல்லை’ என்றும் அறிவித்தார்கள். ஆனாலும், மக்களுக்கு இருக்கும் ‘கிருமி பயம்’ இந்தத் தீவை, மோசமான தீவாகவே முன்னிறுத்தி வைத்திருக்கிறது.

‘சுறா’ தாக்குலில் அதிக மரணம் நடக்கும் தீவுகளில் ஒன்று, ‘ரீ-யூனியன் தீவு’. இந்தியப் பெருங்கடலின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தத் தீவு, பிரான்ஸில் இருக்கிறது. தீவு சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த இடமாக, கொள்ளை அழகோடு காட்சி தரும் இந்தத் தீவில் 2011-க்குப் பிறகு கடலில் குளிப்பவர்களை சுறாக்கள் தாக்கும் சம்பவங்கள் தொடங்கின. சுறாக்களிடம் இருந்து தப்பிக்க, கடலில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ கூடாது என 2013-ல் ஸ்ரிக்ட்டாகச் சொன்னது அரசு.

துரதிர்ஷ்டவசமான தீவு என்கிறார்கள், நெதர்லாந்தில் இருக்கும் ‘சபா’ தீவை! பொசுக் பொசுக்கென சூறாவளியால் பாதிக்கப்படும் தீவுகளில் முக்கியமான தீவு இது மட்டும்தான். கடந்த 100 ஆண்டுகளில் அடிக்கடி சூறாவளியால் பாதிக்கப்படும் ஒரே தீவு இதுதானாம். இதன் காரணமாகவே இந்தத் தீவுக்கு யாரும் அடியெடுத்து வைப்பது இல்லை. தவிர முக்கியமான இன்னொரு காரணம், கடல்கொள்ளையர்களின் கூடாரமாகத் திகழ்கிறதாம் இந்தத் தீவு. இதனாலேயே நமக்கு எதுக்கு வம்பு? என முகத்தைத் திருப்புகிறார்கள் சுற்றுலா விரும்பிகள்.

காற்று முழுக்க கந்தகம் கலந்திருந்தால் என்ன செய்ய முடியும்? முகமூடி போட்டுக்கொண்டுதான் உயிர் வாழமுடியும். அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், ‘இஜூ’ தீவில் இருப்பவர்கள். ஜப்பானில் இருக்கும் எரிமலைத் தீவான இது, இரண்டு நகரங்களையும், ஆறு கிராமங்களையும் உள்ளடக்கியது. எரிமலைகள் சூழ்ந்திருப்பதால், இங்கு இருக்கும் காற்றில் உயிரைப் பறிக்கும் அளவுக்குக் கந்தகம் கலந்திருக்கிறது. அணுகுண்டு சோதனை, சுனாமி, பூகம்பம் என எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், ஜப்பான் கொஞ்சமும் வீழ்ந்ததில்லை. இந்த விஷயத்திலும் அப்படியே! காற்றில் கந்தகம் கலந்திருப்பதால், இங்கு இருக்கும் மக்களுக்கு ‘கியாஸ் முகமூடி’களை வழங்கியிருக்கிறது அரசு.

இதுதவிர, மெக்ஸிகோவில் இருக்கும் பொம்மைகள் நிறைந்த தீவு, வெளியுலகத்தோடு தொடர்பு இல்லாத பழங்குடியினர் வாழும் அந்தமான் ‘நார்த் சென்டினல் தீவு’, அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த இத்தாலியின் ‘பொவிக்லியா தீவு’ என எக்கச்சக்கமான ஆபத்தான தீவுகள் இருக்கின்றன.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick