அர்ச்சி... அர்ச்சி!

ராத்தி சினிமா ‘ஃபான்டரி’ பட இயக்குநர் நாகராஜ் மஞ்சுலேவின் இரண்டாவது படம் ‘சாய்ரத்’தின் பாடல்கள் சென்னை வரை செம ரீச். ‘காதல்’ படத்தில் பார்த்த சந்தியா போலவே இருக்கும் அவர் யார் என ஸ்கேன் செய்து பார்த்தபோது... ரிங்கு ராஜ்குரு கிடைத்தார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி இவர். அக்லுஜ் என்ற மராத்தி கிராமத்தில் பிறந்த இவரின் பள்ளி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க நாகராஜ் மஞ்சுலே வந்தபோது அவர் கண்ணில் பட்டிருக்கிறார்.  மிக ஷார்ப்பான கண்கள்தான் நாகராஜ் மஞ்சுலேக்கு. தன் கதைக்கு இந்தப் பெண் சரியாக இருப்பார் எனத் தோன்ற வைத்ததாம்.

‘‘சார் நடிக்கக் கூப்பிட்டப்போ அவ்ளோ தயக்கமா நம்பவே முடியாம இருந்துச்சு. நான் அவ்ளோ அழகும் இல்லை. அப்புறம் ஏன் என்னைக் கூப்பிடுறார்னு குழப்பமா இருந்துச்சு. ஆனா, அப்பா, அம்மாவுக்கு ‘ஃபான்டரி’ படம் ரொம்பப் பிடிக்கும். எனக்கும்தான். அவங்க ஓகே சொன்னதும் நானும் ஓகே சொன்னேன். ஆனால், ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். ஒருநாளும் திட்டியதில்லை. நடிப்பு இவ்ளோ ஈஸினு எனக்குத் தெரியலை. ஹீரோ ஆகாஷும் ஒரு நண்பனா நல்லா ஹெல்ப் பண்ணினார். படத்தில் மிக தைரியமான பெண்ணாக புல்லட் ஓட்டும் நபராக நடிக்க வைத்திருந்தார். இப்போ படத்தை ஸ்க்ரீன்ல பார்க்கிறப்போ நடிச்சது நானானு என்னாலயே நம்ப முடியலை. சினிமா நிஜமாவே மேஜிக்தான்!’’ என்கிறார்.

‘‘63-வது தேசிய விருதுகள் பட்டியலில் ரிங்குவுக்கு இடம் கிடைக்குமானு குழப்பத்தோடு இருந்தேன். ஆனால், ‘சிறப்பு விருது’ கொடுத்திருக்காங்க. விருதுகளுக்காக இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. ‘ஃபான்டரி’ படத்தின் நாயகனான ஜப்யாவும் அதில் அவனது சொல்லப்படாத காதலும் ஒருவேளை நிறைவேறி இருந்தால் இந்த சமூகம் என்ன முடிவினைக் கொடுத்திருக்கும்? என்பதைச் சொல்ல நினைத்தேன். நல்ல டீம் அமைந்தது. ரிங்கு ராஜ்குரு அவ்வளவு அழகாக நடித்து அந்த அர்ச்சனா கேரக்டரை பிரமாதப்படுத்திவிட்டாள்!’’ என்கிறார் நாகராஜ்.

நம் ஊரில் எப்படி மலர் டீச்சர், மலர் டீச்சர் என இளசுகள் ரொமான்ஸ் பண்ணினார்களோ... அதுபோல் இளசுகள் ‘அர்ச்சி அர்ச்சி!’ என அர்ச்சனை செய்கிறார்கள். ரிங்கு என்பது செல்லப்பெயராம். பிரேர்னா தான் ஒரிஜினல் பெயராம்.

கலக்கல் ரிங்கு!

-சரண்ஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick