மறுபடி ஒரு தாதா சினிமா!

ராம் கோபால் வர்மாவின் பெங்களூரு ஃபீவர் இன்னும் தீர்ந்தபாடில்லை. அவரின் கன்னட சினிமா ‘கில்லிங் வீரப்பன்’ படம் சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பனின் கடைசி நாட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு சுடச்சுட ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அடுத்த ஆபரேஷனாய் பெங்களூருவைக் கலக்கிய முன்னாள் தாதாவான முத்தப்பா ராய் என்பவரின் வாழ்க்கையைப் படமாக இயக்கி வருகிறார்.

மே 1-ம் தேதி ‘கபாலி’ டீஸர் இணையத்தைக் கலக்கிய அதே நேரத்தில் ட்விட்டரில் சைலன்டாய் ட்ரெண்ட் ஆனார். அன்று மாலை 6 மணிக்கு லேசர் ஷோ, வாணவேடிக்கை என மும்பையைக் கலக்கிப் படத்தின் துவக்க விழாவை அட்டகாசப்படுத்திவிட்டார். அவர் இயக்கத்தில் வரப்போகும் காஸ்ட்லி சினிமாவாம் இது. (66 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிறார்கள்).

யார் இந்த முத்தப்பா ராய்? பெங்களூரு நகரின் முன்னாள் நிழல் உலக தாதா இவர்! தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் போன்ற பெரிய டான்களுக்கே குடைச்சல் கொடுத்த படா பெங்களூரு டான். அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலைகள் என அசால்ட்டாய் ஆட்கள் வைத்து ஏ.டி.எம் மெஷின் போல பணம் கொடுத்தால் ஆட்களை ஸ்கெட்ச் போட்டு ‘செய்யும்’ பலே தாதா. இதனாலேயே ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செல்லப்பிள்ளையாய்க் குறுகிய காலத்திலேயே ஆக்டோபஸாய் பெங்களூருவையே அசாதாரணமாய் வளைத்துவிட்டார் ‘அப்பா’ என செல்லமாக அழைக்கப்படும் முத்தப்பா ராய். 70 மற்றும் 80-களில் கிங் மேக்கராய் அறியப்பட்டவர். 1996-ல் தாதா வாழ்க்கையில் இருந்து விடுபடுவதாக அறிவித்து பரிதாபத்தை அள்ளிக்கொண்டார். காரணம் 1994-ல் இவரது எதிரிகள் சிலரால் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு வருடங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார். குணமாகி எழுந்ததும் துபாய்க்கு இடம் பெயர்ந்தவர் தன் சேட்டைகளை விட்டுவிட்டார். கர்நாடகா போலீஸ் இவரை விட்டுவைத்ததற்கு மிக முக்கியக் காரணம் இருக்கிறது. கொடூரமான தாதாக்களாக கர்நாடகாவையே அலறவைத்த எம்.பி.ஜெய்ராஜ் மற்றும் ‘ஆயில்’ குமார் என்ற இருவரையும் போட்டுத் தள்ளி பெங்களூரு நகரை அமைதியாக்கியவர் இவர். இவர்கள் இருவரின் மீதும் பல கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் உண்டு.

துபாய்க்குப் போனதும் தாதா தொழிலில் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் போட்டு ஒரு மருந்து கம்பெனி ஆரம்பித்தார். இன்றுவரை ஆப்பிரிக்காவின் மிக முக்கிய மருந்து பிசினஸ் இவரது கன்ட்ரோலில்தான்! நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை 2001-ல் யூ டர்ன் அடித்தது. பெங்களூரு ரியல் எஸ்டேட் ஜாம்பவான் சுப்பராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளி ஆனார். துபாயிலிருந்து அவரைக் கைதுசெய்ய கர்நாடகா போலீஸ் துபாய் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஒரு வழியாக ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு 2002 டிசம்பர் 1-ம் தேதி அவரை இந்தியாவுக்குப் பாதுகாப்பாய் அனுப்பிவைத்துக் கைது செய்ய வழிசெய்தது. 2008 வரை வழக்குகளை இழுத்து சாதுர்யமாக நீர்த்துப்போகச் செய்து வெளியே வந்தார். 2008-ல் ‘ஜெய கர்நாடகா’ என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட நாம் தமிழர் கட்சியைப் போலவே படு தீவிரமாய் அந்த இயக்கத்தை கர்நாடகா எங்கும் விரிவுபடுத்தினார். ‘ஸ்தாவரகே அல்லிவுண்டு-ஜங்கமகே அல்லிவில்லா’ (நகராதது அழியும். நகர்ந்துகொண்டே இருப்பது வாழும்) என்ற புகழ்பெற்ற பசவண்ணா என்ற கவிஞரின் கோஷத்தை இயக்கத்தின் கொள்கையாக அறிவித்து பரபரவென இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாய் வளர்ந்தார்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் இன்றைய தேதியில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான். மனைவி ரேகா இறந்தபிறகு இன்னும் சாதுவாகி மகன்கள் ராக்கி மற்றும் ரிக்கியை இயக்கத்தில் வளர்த்துவிட்டு அந்திமக் காலத்தில் வள்ளல் அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த அக்டோபர் 24-ம் தேதி ‘யுவ சம்மேளனா’ என்ற இளைஞர் பாசறையை ஆரம்பித்து ‘ஊழலுக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்’ என கோஷம் போட்டிருக்கிறார். மோடி ஆதரவாளராய்த் தன்னைக் காட்டிக் கொள்வதால் மத்தியில் வரை இவர் செல்வாக்கு நீள்கிறது. ராம் கோபால் வர்மா இவரது வாழ்க்கையைக் கேள்விப்பட்டு நேரில் சந்தித்துப் பேசியதும் முத்தப்பாவே படமெடுக்க முழு மனதோடு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

‘‘என் வாழ்க்கையை சினிமாவாகப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் அளவுக்கு கொடூரமானவன் இல்லை. அதனால் என்னைக் கெட்டவனாக மட்டும் சித்தரித்து விடாதீர்கள்!’’- இதுதான் ராம்கோபால் வர்மாவிடம் முத்தப்பா ராய் விடுத்த வேண்டுகோளாம். ‘‘நான் எடுத்த டான் படங்களில் ரசித்து எடுக்கப்போகும் நிஜமான டான் படம் இதுதான்!’’ என்கிறார் வர்மா.

பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய், முத்தப்பா பாத்திரத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் பரபரப்பாக பெங்களூரு-மங்களூரு என மாறிமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ராய் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டே ஷூட்டிங் போய் ராய் பற்றி படம் எடுத்துக்கொண்டிருக்கும் ராம் கோபால் வர்மாவைப் பற்றி நெகட்டிவ் கமென்ட்ஸ்களும் இணையத்தில் தூள் பறக்கின்றன. ஆனால், பரபர டீஸர் வெளியிட்டுத் தெறிக்க விடுகிறார் மனுஷன்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick