“ஜப்பானில் அப்பளத்துக்கு அடிச்சுக்கிட்டாங்க!”

‘கலக்கப்போவது யாரு’, ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சிகளின் மூலம் கவனம் பெற்றவர், கோகுல்நாத். ‘அம்புலி’ படத்தில் இவர்தான் அம்புலி. இப்போது ‘ஜம்புலிங்கம்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரம்.
‘‘ஹரி-ஹரீஷ் இருவரும் சேர்ந்து இயக்கிய ‘அம்புலி’, ‘ஆ’, ‘ஜம்புலிங்கம்’ படங்கள்ல நடிச்சிருக்கேன். இவங்கதான் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறாங்க. சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவங்கவங்க படத்துல நடிக்கக் கேட்டிருந்தாங்க. அதெல்லாம் பத்தோடு பதினொன்னா இருந்த கதைகள். அதனால, தவிர்த்திட்டேன். கோகுல்நாத்னு கூகுள்ல தட்டுனா, வெரைட்டி ஆக்டர்னு சர்டிஃபிகேட் கொடுக்கணும். அதான் பாஸ் நம்ம கனவு!’’ என்கிறார் பெருமூச்சுடன்.

‘‘வழக்கம்போல நீங்களும் சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டீங்களா?”

‘‘சத்தியமா இல்லைங்க. காலேஜ் படிக்கும்போது கல்ச்சுரல் புரோகிராமுக்காக சீனியர்ஸ் எங்களை நச்சரிச்சு நடிக்க வைப்பாங்க. கிடைக்கிற கைத்தட்டல் உற்சாகமா இருக்கும். அப்புறமென்ன? காலேஜ்ல நிறைய மேடைகள்ல நம்ம பெர்ஃபார்மென்ஸைக் காட்டினேன். படிச்சு முடிச்சதும் 2டி அனிமேட்டரா மூணு வருடங்கள் வேலை பார்த்தேன். அப்போதான், ‘கலக்கப்போவது யாரு’ல கலந்துக்கிற சான்ஸ் கிடைச்சுது. அப்புறம் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி. ‘நாளைய இயக்குநர்’ல கலந்துக்கிட்டதுனு நம்ம திறமையை அப்பப்போ வெளிப்படுத்தினேன். ‘மைம்’ல அனிமல்ஸ் ஆக்டிவிட்டி நல்லா பண்ணுவேன். அதனாலதான், ‘அம்புலி’யில சான்ஸ் கிடைச்சது. சீக்கிரமா நல்ல நடிகர்னு எல்லோரும் என்னைச் சொல்லணும்.’’

‘‘ஒரே படத்துல இரண்டு இயக்குநர்களைச் சமாளிக்கிறது எப்படினு சொல்லலாமே?”

‘‘அவங்களை நான் இயக்குநராவே பார்க்க மாட்டேன். அவங்க சொல்ற சீனை ‘அப்படி இப்படி’னு கொஞ்சம் மாற்றி, இன்னும் அழகாக்கி நடிச்சாலும் சந்தோஷமா பாராட்டுற நண்பர்கள். அப்படித்தான் அவங்களும் பழகுவாங்க.’’

‘‘ஜம்புலிங்கத்துக்கும் ஜப்பானுக்கும் என்ன தொடர்பு?”

‘‘ ‘ஆ’ படத்துல ஒரு சீன் ஜப்பான்ல ஷூட் பண்ணோம். அப்போ, எங்களுக்கு உதவியா இருந்தவர்தான் ‘ஜம்புலிங்கம்’ படத்தோட தயாரிப்பாளர். தவிர, கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகள்ல என்னைத் தவறாம கூப்பிடுவாங்க. டோக்கியோவுல இருக்கிற ஜப்பான் தமிழ்ச்சங்கத்துல வருடா வருடம் நான் பண்ற நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளமே இருக்கு. தயாரிப்பாளரோட ஊர்தானே... அதுதான், இங்கேயே ஷூட்டிங்கை வெச்சுட்டோம். ரொம்ப நல்ல மனுஷன் அவர். ஜப்பான்ல தேங்காய் சாதமோ, சாம்பார் சாதமோ கிடைக்குமா? ஆனா, எங்களுக்காகவே தனியா ஒரு சமையல்காரரை ரெடி பண்ணி, சமைச்சுக் கொடுத்தார். ஆனா, எங்களைவிட ஜப்பான்காரங்க அதை ரசிச்சுச் சாப்பிட்டாங்க. அப்பளத்துக்கு அவங்க அடிச்சுக்கிட்ட சம்பவத்தை நினைச்சா, இப்பவும் சிரிப்பா வருது.’’

‘‘அப்போ, ரஜினிக்கு அடுத்து ஜப்பான்ல உங்களுக்கு ரசிகர்கள் அதிகம்னு சொல்றீங்க?”

‘‘ஏங்க? அது வேற, இது வேற. வேணும்னா, எனக்கு ஆதரவாளர்கள் இருக்காங்கனு சொல்லலாம். முதல் தடவை அங்கே மைம் புரோகிராம் பண்ணும்போது நல்ல ரெஸ்பான்ஸ். ‘அடிக்கடி இந்தப் பையனைக் கூப்பிடுங்க’னு அவங்களே சொல்வாங்க. இதோ, ‘ஜம்புலிங்கம்’ படத்துக்கு ஷூட்டிங் போனப்போகூட, 50, 60 பேர் ஏர்போர்ட்ல என்னைப் பார்க்க காத்திருந்தாங்க. ‘வரவேற்கிறோம்’னு ஃப்ளெக்ஸும் அடிச்சிருந்தாங்க. தமிழ்நாட்டு மக்கள் மேல ஜப்பான்காரங்களுக்கு தனி பாசம் இருக்கு பாஸ்.’’

‘‘குழந்தைகளையே டார்கெட் பண்ணி நடிக்கிறீங்களே, ஏன்?”

‘‘அவங்கதான் பாஸ் நமக்கான நாளைய ரசிகர்கள். இப்பவே குழந்தைகளைக் கவர்ந்து வெச்சுக்கிட்டா, குடும்பத்துல இருக்கிற எல்லோரும் என் படத்தைப் பார்ப்பாங்கள்ல.’’

‘‘அடுத்து?”

‘‘ ‘குற்றம் கடிதல்’ பிரம்மா அடுத்து இயக்குற படத்துக்காக, இணை-இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். வாய்ப்புகளைப் பொறுத்து, கூடிய சீக்கிரம் என்னை இயக்குநராகவும் பார்க்கலாம்!’’

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick