இது தலைமுறைகளின் சந்திப்பு!

ங்கள் வாழ்க்கைத் துணையைத் தாண்டி வேறொருவர் மீது ஈர்ப்பு வருமா? வந்தால் அது காமமாக மட்டும்தான் இருக்க முடியுமா? இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும்? ஈர்ப்பு என்றால் அது உடல்ரீதியாக மட்டும்தான் பார்க்கப்பட வேண்டுமா? ஒரே அலைவரிசையில் ஒரே மனநிலையில் உள்ள ஒரு வயதான ஆணும் ஒரு பெண்ணும் எதேச்சையாக சந்தித்துக்கொண்டால்... அவர்களுக்குள் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டால் அந்த உறவுக்கு என்ன அர்த்தம்? மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை சொல்கிறது பெண் இயக்குநர் அனு மேனன் இயக்கத்தில் உலகத் திரைப்பட விழாக்களில் அதிக கவனம் ஈர்த்த ‘வெயிட்டிங்’ என்ற இந்தித் திரைப்படம்.

கதை? புரொபஸர் நஸ்ருதீன் ஷா கோமாவில் எட்டு மாதங்களாகக் கிடக்கும் தன் மனைவி சுஹாசினி (மணிரத்னம்) எழுவார் என்ற நம்பிக்கையில் மருத்துவமனையில் காத்திருக்கிறார். மனைவிக்குப் பிடித்த விஷயங்களை ஞாபகப்படுத்துவதற்காக பல விஷயங்களைச் செய்கிறார். அதே மருத்துவமனையில் கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து கிடக்கும் தன் கணவனுக்காக அழுதபடி காத்திருக்கிறார் கல்கி கோச்லின். மருத்துவமனை மீது கோபத்தில் இருக்கும் கல்கியிடம் வெயிட்டிங் ரூமில் அறிமுகம் ஆகிறார் நஸ்ருதீன். தன்னுடைய வயதின் பக்குவத்தாலும் ஓரளவு மருத்துவ அறிவாலும் கல்கிக்கு ஆறுதலும் யோசனைகளையும் வான்ட்டடாகச் சொல்கிறார். செம காமெடியான உரையாடல்களாய் அவர்களது ‘காத்திருப்பு’ நகர்கிறது. வாழ்க்கையை பாஸிட்டிவாக பார்க்கும் வயதான நஸ்ருதீனுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் என்ற இன்னொரு உலகம் பற்றி எதுவும் தெரியாது. ‘எனக்கு ட்விட்டரில் 5,800 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்கே இப்போ ஒருத்தர்கூட நேரில் இல்லை’ என்று கல்கி அலுத்துக்கொண்டு சொல்லும்போது, ‘ட்விட்டர்னா என்ன?’ என நஸ்ருதீன் இயல்பாய்க் கேட்கிறார். இருவருக்குள் நிகழும் அன்பும் பிணைப்பும் வாழ்க்கையைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வைக்கிறது.

பிராக்டிகல் என்று சொல்லி சிக்கலாக்கிக்கொள்ளும் இளைய தலைமுறையையும், வாழ்க்கையை முடிந்த அளவு அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ளப் போராடும் வயதானவர்களையும் இந்த இரண்டு கேரக்டர்கள் பேசுகின்றன. தத்தம் துணைகளின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் இவர்களின் நட்பு என்னவானது என்பதே க்ளைமாக்ஸ். ஒரு கவிதையைப் போன்ற இந்தப் படத்தின் காட்சிகள் எல்லாமே அசத்தல் ரகம். சர்வதேச கவனத்தை ஈர்த்த இர்ஃபான்கானின் ‘லஞ்ச் பாக்ஸ்’ போல இருவருக்குள்ளும் எந்த வித ரொமான்ஸ் கெமிஸ்ட்ரியையும் தவழவிடாமல் நட்பு கெமிஸ்ட்ரியைப் படம் முழுவதும் படரவிட்டு நெகிழ்த்தி விடுவது படத்தின் பெரிய ப்ளஸ். ‘ஜாலி எல்எல்பி’, ‘விக்கி டோனார்’ போன்ற சிம்பிளான கதை மற்றும் பட்ஜெட்டிலும்கூட அசத்தலான படங்களைத் தர முடியும் என ‘வெயிட்டிங்’ மூலம் பாலிவுட்டுக்கு வெயிட்டாக உணர்த்தி இருக்கிறார் அனு மேனன்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick