ஆண்களுக்கு சம்மர் கேம்ப் நடத்துவது எப்படி?

ம்மர் சீசன் வந்து பசங்களுக்கு லீவ் விட்டாலே அவங்களை சமாளிக்கிறது கஷ்டம். இதுக்காகவே வந்ததுதான் சம்மர் கேம்ப்! நீச்சல், செஸ், கிரிக்கெட், பெயின்ட்டிங், இங்கிலீஷ்னு சின்னப் பசங்களுக்கு இரண்டு மாதங்களில் கத்துக் கொடுக்க நிறைய சென்டர்கள் வந்தாச்சு.பசங்களுக்கு வைக்கிற மாதிரி வீட்டுல இருக்கிற ஆண்களுக்கு  கேம்ப் வெச்சா நல்லா இருக்குமேனு சென்டர்களுக்கு பெண்களின் சார்பில் இந்த யோசனைகள்!

(குறிப்பு: ஒவ்வொரு கேம்பிலும் அதிகபட்சம் ஐந்து நபர்களுக்கு மேல் சேர்த்துக்கொள்ள வேண்டாம். இல்லை என்றால் சிரமம் உங்களுக்குதான்.)

ஐஸ் கியூப் டிரேக்களை நிரப்புவது, மில்க் குக்கரில் பால் காய்ச்சுவது எப்படி? - செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி.

துணி டப்புக்கும், தரை, சோபாவுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி? – தொடர் பயிற்சி.

மனைவி / காதலி கார் பார்க் செய்யும்போது பொறுமை காப்பது எப்படி? – டெமோ மாற்றும் பயிற்சி (யோகாவுடன் கூடிய பயிற்சி என்றால் கூடுதல் கட்டணம்)

குக்கர் விசில் தப்பாமல் எண்ணுவது எப்படி? – கணக்குப் பயிற்சி மற்றும் கவனக் கட்டுப்பாடு பயிற்சி.

தொலைந்து போன பொருட்களை வீட்டை புரட்டிப்போடாமல்  அதன் இடத்தில் மட்டும் தேடுவது எப்படி? மற்றும் தன்னுடைய துவைக்காத சாக்ஸ் காணாமல் போனால் மனைவியைத் திட்டாமல் தேடுவது எப்படி? – டூ இன் ஒன் புரோகிராம் வீடியோ கிராஃபிக்ஸ் பயிற்சியுடன்.

மனைவியுடன் / காதலியுடன் சலிக்காமல் ஷாப்பிங் போவது எப்படி? – மூச்சுப் பயிற்சி, மெடிடேஷன் மற்றும் பொழுதுபோக்க கேம்ஸ்களும் கற்றுத்தரப்படும்.

குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவது, டயப்பர் மாற்றுவது, குளிக்க வைப்பது எப்படி? – ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இலவச சி.டி-யும் வழங்கப்படும். (இவை சற்று கடினம் என்று நினைத்தால் குறைந்தபட்சம் அழவிடாமல் இருப்பது எப்படி என்றாவது பயிற்சி கொடுக்கலாம்).

பால் பூத், ரேஷன், மளிகைக் கடை, காய்கறிக் கடைகளுக்குச் செல்வது எப்படி? சாமான்களைப் பார்த்து வாங்குவது எப்படி? – லைவ் டெமோ மற்றும் எக்ஸ்பர்ட்கள் கொடுக்கும் டிப்ஸ் புத்தகம் இலவசம்.

அம்மா மற்றும் மனைவிக்கு வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி? அம்மா என்று நினைத்து மனைவியிடம் கெத்து காட்டி பூரிக்கட்டையால் அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி? – ஏற்கெனவே அடி வாங்கியவர்களின் அனுபவத்தொகுப்பு மற்றும் மனைவிமார்களின் டிப்ஸ்.

இது மிக முக்கியமான பயிற்சி. பிறந்தநாள், திருமண நாள், குழந்தைகளுக்கு ஸ்கூல் மீட் நாள், மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டு விசேஷம் போன்ற முக்கிய நாட்களை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி? – ப்ரெயின் ட்ரெயினிங் மற்றும் ஞாபகசக்திப் பயிற்சிகள். (ஞாபகம் அதிகரிக்க சத்தான உணவுகள் கை தேர்ந்த மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும்.)

- தா.நந்திதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick