இதெல்லாம் எப்போ நிறுத்தப்போறீங்க?

ன்ன சொன்னாலும் ‘என்ன நீ ஃபேஸ்புக்ல இல்லையா?’னு ஷாக் ஆகிற காலம் பாஸ் இது.  ஃப்ரெண்டுக்குக் கல்யாணம்னு பொய் சொல்லிட்டு கோவாவுக்குப் போய் போட்டோ போட்டா, மேனேஜர் ஷேர் பண்ணுவாரு. ஆபீஸ்ல சம்பளத்தை ஏத்திட்டாங்கனு சந்தோச ஸ்டேட்டஸ் போட்டா, ஹவுஸ் ஓனர் லைக் போட்டு திகிலைக் கூட்டுவாரு. இப்படி தினுசு தினுசா பல தீவிரவாதிங்க புழங்குற இடம்தான் ஃபேஸ்புக். ஒரு ஓசி அக்கவுன்ட்டை வெச்சிக்கிட்டு இவங்க கொடுக்கிற லந்து இருக்கே... வாங்க, மெனு வாரியா பார்க்கலாம்!

முனுசாமி க்ளிக்ஸ்:  புண்ணாக்கு விற்கிறவன், குண்டூசி விற்கிறவன்லாம் தொழிலதிபர்ங்கிற மாதிரி, கேமரா வாங்கினவன்லாம் போட்டோகிராஃபரா ஃபார்ம் ஆகிடுறாங்க. திடீர் மழைக்கு வீட்டுக்குள்ள வர்ற புழு, பூச்சியைக் குச்சியில எடுத்து வெளியே போடச் சொன்னா, போட்டோ புடிச்சு ஃபேஸ்புக்ல போடுறாங்க. பூக்களைப் படம் எடுக்கிறேன்னு ஒருத்தன் வாழைப்பூவை க்ளோசப்ல எடுத்து அப்லோடுறான். இன்னொருத்தன் பெரிய வித்துவானா இருப்பான் போல. என்ன கேமரா, என்ன லென்ஸ், ஷட்டர் ஸ்பீடு என்னன்னு எல்லா டீட்டெயிலும் கொடுப்பான். மொத கமென்ட்ல அப்பாவி ஒருத்தன் ‘இது பூனையா, நாயா’னு கேட்டிருப்பான். ஃபோகஸ் அந்த லட்சணத்துல இருக்கும். முதல்ல கை நடுங்காம போட்டோ எடுத்துப் பழகுங்கப்பா. அப்புறமா முனுசாமி க்ளிக்ஸ்னு வாட்டர் மார்க் போடலாம்.

செல்ஃபி புள்ள: முனுசாமி பரவால்ல. செல்ஃபின்னு ஒண்ணு இருக்கே. அதைக் கண்டுபிடிச்சவன் இந்நேரம் வாஷ்பேசின்ல தலையை விட்டு அழுதுட்டு இருப்பான். ஃபேஸ்புக்கைத் திறந்தா, நாலு டொக்கு விழுந்த மூஞ்சிங்க முன்னாடி வந்துடுது. தினமும் குளிச்சு டிரெஸ் மாத்துறாங்களோ இல்லையோ ஒரு செல்ஃபி போட்டுடுறாங்க. எடுத்த போட்டோ நல்லா இல்லைன்னா வேற எடுக்க மாட்டானுங்க. இதுல என்ன ஃபிலிம் ரோலாடா வேஸ்ட் ஆகுது? பார்க்கிறவன் கண்ணுதானேன்னு கேர்லெஸ். இன்னும் கொஞ்சம் தைரியம் இருக்கிறவன் ‘இந்த இன்னொசென்ட் லுக்குக்கு எத்தனை லைக்ஸ்?’னு வேற கேட்பான். கவுண்டர் கண்ணுல மட்டும் இது பட்டா, ‘குல்ஃபி விற்கிறவன் மாதிரி இருந்துட்டு செல்ஃபியாடா நாயே நாயே’னு திட்டியிருப்பாரு. முத்தம் கொடுக்கிற டிஸ்டர்ன்ஸ்ல இருந்து முகரக்கட்டையை எடுக்கிறதால தான் வெள்ளைக்காரன் செல்ஃபி ஸ்டிக்னு ஒண்ணைக் கண்டுபிடிச்சான். மூணு அடிக்கு முன்னால இருந்து எடுத்தா போதும்னுட்டான். இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா மக்களே?

சாதி சனம்: மேனேஜர்கிட்ட வேலை ஒழுங்கா செய்யாததுக்கு கை கட்டி திட்டு வாங்கினவன் சீட்டுக்கு வந்ததும் ஸ்டேட்டஸ் போடுவான் ‘ஆண்ட பரம்பரைடா நாங்க’. கிட்டத்தட்ட தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா சாதிக்கும் தனித்தனி பேஜ் கிரியேட் பண்ணி வெச்சிருக்காங்க. இவங்க சொல்ற எண்ணிக்கையக் கூட்டிப் பாத்தா, தமிழ்நாட்டோட மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டும். ஒருத்தனுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கலாம். ரெண்டு சாதி எப்படிப்பா இருக்கும்? எல்லோருமே ஆண்டீங்கனா யார்தாண்டா குடிமக்கள்னு கமென்ட் போட்டவனை 100 பேர் சேர்ந்து திட்டிட்டு இருப்பாங்க. ‘வீரம் எங்கள் சொத்து... முடிஞ்சா மூஞ்ச பார்த்துக் குத்து’னு ரைமிங் பன்ச்சோடதான் காலை வணக்கமே வைப்பானுங்க அந்த குரூப்புல. பேருக்குப் பின்னாடி டிகிரி பட்டம் போட வேண்டிய சில்வண்டுங்க எல்லாம் சாதிப்பட்டத்தைப் போட்டு சுத்துற இடம்தான் ஃபேஸ்புக். ஆரம்பத்துல நேரிடையா சாதி கேட்காம ‘உங்க ஊர், குலதெய்வம்’ சொல்லுங்கனு கேட்ட நல்லவங்க இப்போ நேரிடையாவே சாதிப் பேரைக் கேட்கிறாங்க... இதுல உச்சக்கட்ட காமெடியே காமராஜரையும், பெரியாரையுமே அவர் எங்க சாதி தெரியுமாங்கிற அலப்பறைதான்!

ஆன்சைட் ஆண்டனி: உள்ளூர்க்காரங்க, இவங்களை மன்னிச்சு விட்டுடலாம். ஆன்சைட்டுக்குப் போனவன் பண்ற அலப்பறை இருக்கே. மூணு வருஷமா தோய்க்காத பெட்ஷீட்ல தூங்கினவன் ‘இந்தியா மாதிரி இல்லை. இங்கே எல்லாம் க்ளீன்’னு ஸ்டேட்டஸ் போடுவான். மச்சான் ஏதோ பீட்டர் ஃபிகரைப் பற்றிச் சொல்றான்னு அந்த பெட்ஷீட் பார்ட்னர் லைக் போட்டு வைப்பான். இந்தியாவுக்குத் திரும்பறப்போ ஷார்ட்ஸ் போட்டுட்டு நம்ம ஊர் ஏர்போர்ட்டைப் பாத்து ‘இப்படிலாம் இருந்தா எனக்கே குண்டு வைக்கணும்னு தோணுது. டெரரரிஸ்ட்டுக்குத் தோணாதா’னு ஸ்டேட்டஸ் போடுவான். அடேய்... உன் சொந்த ஊரு ‘மாலையிட்டான் குப்பம்’ தானே? ஏ ஃபார் ஆப்பிள்னு படிச்சவன் ஆட்டோக்காரன்கிட்ட ‘பார்டன் மீ’னு பாடம் எடுப்பான். என்னவோ இவன் அமெரிக்காவுக்குப் போனப்போ சென்னையில பனிமழை பேஞ்ச மாதிரி ‘இட்ஸ் டூ ஹாட் இன் சென்னை’னு துபாய் போன வடிவேல் கணக்கா சலம்புவான். உங்களுக்கெல்லாம் ஒரு பார்த்திபன் வராமலா போயிடுவாங்க?

ரூமர் ருத்ரய்யா: ‘சென்னை சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வாக்-இன் நடக்கிறது. உங்கள் ரெஸ்யூம்களை உடனே kavithahr@gmail.comக்கு அனுப்பவும்’னு ஒருத்தன் ஸ்டேட்டஸ் போடுவான். உடனே, இளைஞர்களைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவன்கள், அனாதை ரட்சகர்கள் பாய்ஞ்சு போய் ஷேர் பண்ணுவாங்க. சத்யம் கம்பெனியை மூடி எத்தனை வருமாச்சுனு யோசிக்க மாட்டாங்க. அவ்ளோ பெரிய கம்பெனிக்கு சொந்தமா டொமைன் இல்லாம ஜி மெயில்லயா இருக்கும்? ஷேர் பண்ணிட்டா, அவங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் பாருங்க. இப்படித்தான் ஒருநாள் ஏழு வயசுப் பையன் ஒருத்தன் காணாமப் போயிட்டானு செய்தி. அந்தப் பையன் முகத்தைக்கூட சரியாப் பார்க்காம லைக்கும், ஷேரும் பறந்துச்சு. அந்தப் பையனே இவங்க எதிர்ல வந்தாலும் இவங்களால கண்டுபிடிக்க முடியாதுங்கிறதுதான் ஹைலைட்டே. அதைவிடக் கொடுமை, அந்தப் பையன் கிடைச்ச அப்புறமும் அந்த போஸ்ட் ஷேர் ஆகிட்டே இருந்துச்சு. ரத்தம் வேணும்னு கேட்டாலும் இதே கதைதான். யாருக்கு ரத்தம் வேணுமோ அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தப்புறமும் அந்த போஸ்ட் ஷேர் ஆகி, அதுக்கு அவரே லைக் போட்ட கொடுமை எல்லாம் நடந்திருக்கு. கெஸ்ட் ஹவுஸ் கட்றோம். அதனால் கெஸ்ட்டுங்க எல்லாம் நன்கொடை கொடுங்கனு கேட்டாலும் சரிங்கிறவங்க இருக்கிறவரை ரூமர் ருத்ரய்யாக்களுக்கு லைக்ஸூம், ஷேரும் பஞ்சமே இல்லை!

கேம்ஸ் கேமரூன்:  ‘ஹே டியூட். நீ என்ன ப்ளான்ட் போட்டிருக்க?’

‘சன்ஃப்ளவர் அண்ட் பேடி மேன்’

என்னடா இது இயற்கை விவசாயம், இங்கிலீஷ் விவசாயம் ஆகிடுச்சுனு பார்த்தா, ஃபேஸ்புக்ல ஃபார்ம் வில் விளையாடுறதைப் பற்றிப் பேசிட்டு இருப்பாங்க. கிரிக்கெட்ல ஆரம்பிச்சு விவசாயம் வரைக்கும் கம்ப்யூட்டர்லையோ, மொபைல்லையோ விளையாடுறதுதான் இப்போதைய ட்ரெண்ட். எப்போ பார்த்தாலும் கேம்ஸ் ஆடுற புருஷனைப் பார்த்து ஒரு மனைவி கடுப்பாகி ‘கோ. கெட் எ லைஃப்’னு சொல்லிட்டுப் போனா, அந்தப் புருஷன் கூலா ‘அல்ரெடி நாலு லைஃப் இருக்கு. இந்த லெவலுக்குப் போதும்’னு சொல்ற காலம் இது. உலகம் முழுக்க கேண்டி கிரஷ்ல வாழ்ந்துட்டு வர்ற மனுசங்களோட எண்ணிக்கை இந்திய மக்கள் தொகைக்கு சமம்னு ஒரு குண்டை வேற தூக்கிப் போடுறாங்க. இப்படியே போனா இந்தியாவோட தேசிய விளையாட்டா கேண்டி கிரஷ்ஷை அறிவிக்கச் சொல்லிப் போராட்டம் நடந்தாலும் நடக்கலாம். லைஃபை விளையாட்டா எடுத்துக்கிறாங்க. விளையாட்டை லைஃபா எடுத்துக்கிறாங்க நம்ம ஃபேஸ்புக்கர்ஸ்!

- கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick