பாவம்யா பப்ளிக்!

ரோட்ல போகும்போது என்னென்ன இடையூறுகளைப் பொதுமக்களாகிய நாம் ஓட்டுநர்களுக்குக் கொடுக்கிறோம்னு தெரியுமா? சிந்தியுங்க...

ரோட்டோர ஃபாஸ்ட்புட் கடைகளில் கடாயோடு கத்திச்சண்டை போடுவோம், கையில் மிளகாய்ப்பொடியை அள்ளி கடாயோடு சேர்த்து சாலையில் செல்பவர் கண்களிலும் தூவி விடுவோம். இப்படிச் சிலர் கண் கலங்கிக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறார்கள். தெரியுமா?

ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் நாம், இறங்கப்போகும் ஸ்டாப்பிற்கு 500 மீட்டர் முன்பாகவே ஆர்வக்கோளாறில் கதவைத் திறந்து பின்னால் வண்டியில் வந்துகொண்டிருப்பவர்களை கவிழ்ந்து விழச் செய்வோம். இப்படி அரக்கப் பறக்கப் போய் என்னத்தை செய்யப் போறோம்ங்கிறேன்?

லாரிகளிலும், லோடு ஆட்டோக்களிலும் முறுக்குக் கம்பிகளைச் சுமந்து சென்று ஓட்டுநர்களின் மூளையை சூடாக்குவோம். அதைப் பார்க்கும்போதெல்லாம் ‘தேவர் மகன்’ படத்தில் வரும் காட்சி அவங்க கண் முன்னால் வந்து போகுமா இல்லையா... இனி மறக்காமல் சிவப்புத் துணி கட்டுவோம்.

ஏழு கழுதை வயசில், நடுரோட்டில் பந்து விளையாடுவோம். பின்னர், ஏதாவது வண்டி சக்கரத்திற்குள் பந்தை எட்டிவிடுவோம். வண்டியில் வந்தவன் பந்தோடு சேர்ந்து பஸ்ட் ஆக வேண்டியதுதான். இனிமேலாவது கிரவுண்டில் விளையாடுவோம் பாஸ்!

அதேபோல் பஸ் படியில் நின்று பயணம் செய்வோம், திடீரென ரோட்டில் குரங்கு போல் குதித்து பின்னால் வருபவனை ஜெர்க் ஆக்குவோம். இல்லையேல் வெற்றிலை, பாக்கைக் குதப்பி சாலையில் செல்பவனின் சட்டையில் சிவப்பு பெயின்ட் அடித்து நடுரோட்டில் அவனை நடுங்க வைப்போம்.

அரசுப் பேருந்துகளிலிருந்து மழை மேகங்கள் போல் வெளிவரும் கருப்பு நிறப் புகை, சாலையில் செல்பவர்களுக்கு சாவைக் கண் முன்னால் கொண்டுவரும். கிட்டத்தட்ட ‘ப்ளாக் ஹோல்’ போல செயல்படும் அதற்குள் புகுந்து வருவது எவ்வளவு கஷ்டம்னு அவங்களுக்குதான் தெரியும்.

வீடு கட்டுகிறேன் என சாலையில் மணலைக் கொட்டி வைப்போம். அதில் சிலர் வண்டியை விட்டுச் சறுக்கி ஓசியில் தெருவுக்கே சர்க்கஸ் காட்டிவிட்டுப் போவார்கள். இன்னும் நிறைய இருக்கு மக்களே... கவனமா செயல்படுங்க, அடுத்தவங்க உசுரும் முக்கியம்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick