இவருக்குப் பதில் அவர்!

ம்மில் எத்தனைப் பேர் ‘பாசமலர்’ படத்தைப் பார்த்திருக்கிறோம்? அந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பதில் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருந்தால்...?

எம்.ஜி.ஆரும் அவரின் தங்கை சாவித்ரியும் குட்டிப்பிள்ளைகளாக தாய் தந்தை இல்லாமல் ஒரே பாட்டில் வளர்கிறார்கள். தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் எம்.ஜி.ஆர் தங்கையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வம்புதும்புக்குப் போகாதவர். ஆனால், உழைப்புக்கு ஏற்ற கூலி கொடுக்காததால், ஃபேக்டரி முதலாளி அசோகனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் மோதல் வலுக்கிறது. ஃபாக்டரியில் வைத்து முதலாளியைப் புரட்டி எடுக்கிறார் எம்.ஜி.ஆர். இதனால்  வேலை போய்விடுகிறது. கடுமையான சோகத்தில் வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் சொகிறார் சாவித்ரி. ‘அண்ணா நீங்க தாய்க்குலத்துக்கு ஒண்ணுனா, பொங்கி எழுவீங்கனு எனக்குதான் தெரியும். என்னிக்காச்சும் ஒருநாள் உங்க முதலாளியை வெளுப்பீங்கனு தெரிஞ்சு உங்களுக்கே தெரியாமல் உங்க சட்டை பாக்கெட்ல கையை விட்டு தினமும் பத்து ரூபாய் எடுத்து உண்டியல்ல போட்டு வெச்சிருக்கேன். இந்தாண்ணா அந்தப் பணம்!’ என ஆறுதல் சொல்லி 1,000 ரூபாயைக் கொடுக்கிறார். ‘தங்கச்சி’ என அழுது கட்டிப்பிடித்து ‘இந்தக் காசை வெச்சு உலகிலேயே மிகப்பெரிய வியாபாரியாய் மாறிக் காட்டுறேன்’ என சபதமெடுக்கிறார். ரயில் இன்ஜினில் கரி எடுப்பதில் ஆரம்பித்து, வீடுவீடாய் பேப்பர் போடுவது, பேரீச்சம்பழம் விற்பது, இளநீர் வியாபாரம் என ஒரே பாடலில் பெரிய பணக்காரராக மாறுகிறார். இந்த நேரத்தில் முன்னாள் ஃபேக்டரி நண்பன் ஜெமினி கணேசன் வேலை கேட்டு அங்கு வருகிறார். தன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுக்கிறார். அவர்தான் காதல் மன்னனாச்சே! அண்ணனுக்கு குழாப்புட்டு கொண்டு வரும் சாவித்ரியை காதல் வலையில் வீழ்த்தி விடுகிறார். ஜெமினி கணேசனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி இரண்டு மனைவிகள் இருப்பதும் நான்கு குழந்தைகள் இருப்பதும் யாருக்குமே தெரியாது. தங்கையின் காதல் விஷயம் கேள்விப்பட்டு ஆரம்பத்தில் கொதிக்கும் எம்.ஜி.ஆர் ஓடிப்போய் ஜெமினியை ஃபேக்டரியில் வைத்து வெளுவெளுவென வெளுக்கிறார். ஒருகட்டத்தில் சாவித்ரி வந்து தடுக்கவும், ‘இந்த அண்ணனை மன்னிச்சிடுமா’ எனக் கெஞ்சுகிறார். ஜெமினி மன்னிப்பாரா என்ன? எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இவரிடம் அடி வாங்கிய அசோகனிடம் போய் சேர்கிறார்.

அசோகனும் அதே எதிரிக்கு எதிரி நண்பன் பாலிசியில் தன்னுடன் உதவியாளராக வைத்துக் கொள்கிறார். இருவரும் சேர்ந்து எம்.ஜி.ஆரை ஒழிக்க பல திட்டங்களை இருண்ட அறையில் ஒரு சிவப்பு குண்டு பல்ப் வெளிச்சத்தில் போடுகிறார்கள். (ப்ளாக் அண்ட் ஒயிட் படமென்பதால் அது தெரியவில்லை) ஓ.ஏ.கே தேவர், ஆர்.எஸ்.மனோகர் போன்றோரை வைத்துக் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இரண்டு அடி வாங்கிவிட்டு மூன்றாவது அடியில் ஆரம்பித்து நாற்பதாவது அடியில் இருவரையும் வீழ்த்துகிறார் எம்.ஜி.ஆர். சாப்பாட்டில் விஷம் வைக்க தங்கவேலுவைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் உடம்பு தங்க பஷ்பம் சாப்பிட்ட உடம்பு என்பதால் விஷம் வேலை செய்யாமல் போய்விடுகிறது. இந்நிலையில் சாவித்ரி கர்ப்பமாகிறார். இதனால் மனம் இறங்கிய எம்.ஜி.ஆர் நேராக ஜெமினியிடம் மன்னிப்புக் கேட்கிறார். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார் ஜெமினி. ‘அண்ணாவைத் தவிர என் தலை யாரிடமும் குனியாது’ என பன்ச் பேசிவிட்டு வருகிறார். பின்னாடியே வரும் அசோகன் கத்தியால் குத்த வர... அண்ணனைத் தேடி அங்கு வரும் தங்கை சாவித்ரி குறுக்கே பாய்ந்து அண்ணன் மீது பாயப்போகும் கத்தியை நெஞ்சில் வாங்கி அண்ணன் மடியில் உயிரை விடுகிறார். இதனால் கோபமாகும் எம்.ஜி.ஆர், அசோகனையும் ஜெமினியையும் அங்கிருக்கும் புதை குழியில் தள்ளி உயிரோடு மூடிவிடுகிறார். தங்கையைக் கைகளால் தூக்கிக்கொண்டு அந்த ஃபேக்டரிக்கு வெளியே வரும்போது அவர் பின்னால் அவரை ஒருதலையாக காதலித்த தன் உதவியாளர் எம்.என்ராஜமும், எதிரி அசோகனின் மகள் பத்மினியும் பின்னே வருகிறார்கள். அவர்கள் இருவரையும் பார்த்து, ‘எனக்கு இனிமே என் தங்கையோட நினைப்புதான் உலகம். தயவுசெஞ்சு என் பின்னால் வராதீங்க. என் தங்கை பெயர்ல ஒரு ஆசிரமம் உருவாக்கி உலகத்துல அண்ணன் இல்லாம இருக்கிற எல்லாத் தங்கைகளையும் அங்கே வெச்சு பராமரிக்கப் போறேன். நான் ஒரு பாசமலர்னு வாழ்ந்து காட்டப்போறேன்!’ எனக் கண்ணில் வடியும் கண்ணீரை சுண்டிவிட்டபடி தனி ஆளாய் தங்கையின் உடலை அடக்கம் செய்ய நடந்து செல்கிறார் மக்கள் திலகம். சுபம்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick