ஜாம்னா ஜம்!

ட்சத்திர கிரிக்கெட் நடக்கும் இடத்தைப் போல நடுரோடும் இருந்துவிட்டால் பிரச்னையில்லை. ஆனால் இப்போது ட்ராவல் செய்யும் நேரத்தைவிட ட்ராஃபிக்கில் நிற்கும் நேரமே அதிகமாய் இருக்கிறது. இந்த நிலையில் அந்த நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி?

பழைய துணி, பிரஷ், தண்ணீர் இவற்றை வாகனத்தில் தயாராய் வைத்திருந்து, நம் வாகனத்தை நாமே சுத்தம் செய்துகொள்ளலாம். தூய்மை இந்தியாவிற்கான க்ரீன் சிக்னலாய் இது இருக்கும்!

ஆபீஸுக்கு நேரமாகிவிட்டதே என்று அவசரமாய் தலை வாராமல் கிளம்பியிருப்பீர்கள். இந்த நேரத்தைப் பயன்படுத்தி தலை வாரலாம். சிக்னலில் நின்று கறுத்துப்போனவர்கள் சிவப்பழகு களிம்பு தடவலாம்!

மீசை, தாடி வளரும் அளவிற்கு நீண்ட நேரம் சிக்னலில் நிற்பவர்கள் பிளேடு, ஷேவிங் கிரீம் இவற்றை தயாராக வைத்திருப்பதன் மூலம் சவரம் செய்துகொள்ளலாம். ஷேவிங்கூடவே டைம் சேவிங்!

சாப்பிடாமல் அவசரமாய் கிளம்பியவர்கள் உணவை பார்சல் செய்து கொண்டு வரலாம்.பச்சைமுட்டைகூட எடுத்து வரலாம். அடிக்கும் வெயிலில் அது ஹாஃப் பாயிலாகியிருக்கும். வண்டிக்கு பிரேக் போட்டிருக்கும்போதே ப்ரேக் ஃபாஸ்ட்டை முடித்துக்கொள்ளலாம்!

அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வேட்டையை ஆரம்பிக்கலாம். அவர்களின் பொதுக்கூட்டத்தைவிட இங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். குறைந்தபட்சம் சிக்னல் விழும் வரையாவது மக்கள் சொல்வதைக் கேட்பார்கள்!

இன்சூரன்ஸ் முகவர்கள் பக்கத்தில் நிற்பவர்களிடம் பாலிசி எடுப்பது பற்றிப் பேசலாம்.கொரியர்காரர்கள் டெலிவரி செய்ய வேண்டிய‌ ஆள் அருகிலிருந்தால் ரோட் டெலிவரிகூட செய்யலாம்!  

தற்போதைய சீசனுக்கேற்றவாறு கூல்ட்ரிங்க்ஸ், வெள்ளரிக்காய் இவற்றை வாங்கி வைத்து வியாபாரத்தை ஆரம்பிக்கலாம். சைட் பிசினஸ் மாதிரி இது ரோட்சைட் பிசினஸ்!

சிக்னல் சிறுமி, எதிர்திசையில் கடந்து செல்லும் ஏழை விவசாயி, சுருங்கிய சட்டையணிந்த சலவைக்காரர் எனக் கவிதையோ, ஸ்டேட்டஸோ எழுதலாம்!

அலுவலகம் செல்ல நேரமாகி அவதிப்படுவர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் போல, வொர்க் ஃப்ரம் ட்ராஃபிக் ஜாம் செய்ய ஆரம்பிக்கலாம்!

-சித்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick