மாற்றம்...ஏமாற்றம்!

ரிசையில் நிற்க யாருக்கும் பிடிக்காமல் ஆன்லைனிலேயே பொருட்கள் வாங்கும் அவசர காலமிது. இத்தகைய மாற்றங்களால் நாம் இழந்தது என்னென்ன என்பதை அலசும் வெறுப்புப் பார்வை!

கால்கடுக்க நின்று ஷாப்பிங் செய்வது எதற்கு? கடைசியில் ஒரு கம்புப்பை கிடைக்கும் என்ற தெம்பில்தானே! அதைக் கிடைக்காமல் செய்வதுதான் இந்த ஆன்லைன் ஆப்பு. ஆன்லைனில் கேஷ் பேக் கிடைக்கலாம், ஆனால் ஒரு கேரிபேக்கூட கிடைக்காது!

கடைக்குப் போறப்ப ‘ஷாப்பிங் அட்...’னு ஸ்டேட்டஸ் போடலாம். செல்ஃபி எடுக்கலாம். நாலு சுவத்துல நடக்கிற ஆன்லைன் ஷாப்பிங்ல இதெல்லாம் அவ்ளோ சுவாரஸ்யமா இருக்காது!

ஷாப்பிங்குக்கு வர்றப்போ ஹோட்டல்ல சாப்பிடுறதுதான் உலக வழக்கம். ஆன்லைன்லயே எல்லாத்தையும் முடிச்சுடறதால சாப்பாடும் வீட்டுல எப்பவும் போல அதே உப்புமா. அதனால்தான் சொல்றேன். ஆன்லைன் ஷாப்பிங் ஆல்வேஸ் தப்புமா!

அவுட் ஆஃப் ஸ்டாக்ல இருக்கிற பொருள்தான் ஆன்லைன்ல நம்மை அட்ராக்ட் பண்ணும். நேரடியா கடைக்குப்போனா, இருக்கிற‌ ட்ரெஸ்ஸை வாங்கலாம். இல்லாத ட்ரெஸ்ஸுக்கு ஏங்க வேண்டியதில்லை!

வாடிக்கையாளராய் இல்லாத போதும் ஒரு வேடிக்கையாளராய் கையால் தொட்டுப்பார்த்து விண்டோஸ் ஷாப்பிங் செய்வதொரு சுகம். விண்டோஸ்லேயே ஷாப்பிங் பண்றதுல அதெல்லாம் கிடைக்குமா?

ட்ரெஸ் எடுக்கிறோமோ இல்லையோ, ட்ரையல் ரூம்ல கொஞ்சநேரம் அதைப் போட்டுப் பார்க்கிறப்போ அந்த சந்தோஷம் ஆன்லைன்ல கிடையாது. ட்ரெஸ் போட்டோவைப் பெரிசாக்கி பார்க்கிறதைத் தவிர பெரிசா ஒண்ணும் பண்ண முடியாது!

ஆர்டர் பண்றப்போ ஃபேஸ்புக் ப்ரொஃபைல் போட்டோ மாதிரி இருக்கிற பொருள், வீட்டுக்கு வந்து சேர்றப்போ ஆதார் கார்டு போட்டோ மாதிரி ஆகிற அபாயம்லாம் ஆன்லைன்லதான் நடக்கும்!

பிடிச்ச ட்ரெஸ்ஸை எடுத்துப் போட்டுப் பார்க்கிறப்போ உள்ள சந்தோசம் விலையைப் பார்த்துட்டு ஏற்படுகிற அதிர்ச்சி இல்லை. இந்த ட்ரெஸ் ரொம்பப் பிடிக்குதுனு ரிட்டன் பண்றப்போ (இது வேற பிடிக்குது) வர்ற‌ ஏமாற்றம்லாம் ஆன்லைன்ல அறவே கிடையாது பாஸ்!

ஷாப்பிங் முடிஞ்சதும் குல்ஃபி ஐஸ், கரும்பு ஜூஸ்னு குழந்தையா மாறி குஜாலா இருக்கிறதெல்லாம் ஆன்லைன்ல சாத்தியம் இல்லை. டவுனுக்குப் போயி சாப்பிடலாம், டவுன்லோட் பண்ணிச் சாப்பிட முடியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்