கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

வாழ்க்கையே பல பேருக்கு எரிச்சல்தான். சம்மர் எரிச்சல்கூடவே இன்னும் எரிச்சலைக் கிளப்புறதுக்குனே சில பேர் திரிவாங்க. இந்தக் கொசுத்தொல்லைகளின் இம்சைகளில் சில!

ஃபேஸ்புக்கில் புரட்சிப் பொங்கல் வைக்கும் போராளிகளைப் பார்த்து, நாமளும் அது மாதிரி ஆகணும்னு நினைக்கிறது நல்ல விஷயம். அதுக்காக, ‘ஈயாக மாறிப்போன தன் காதலனைக் காப்பாற்ற, வில்லனுக்குத் தெரியாமல் வீட்டில் இருக்கும் ஜன்னல் ஸ்குரூவைக் கழட்டும் சமந்தாவைப் பார்க்கும்போது கண்கள் குளமாகிவிட்டன’, ‘போண்டா சாப்பிடும்போது அதிலிருந்த எண்ணையைப் பிழிந்தேன். இந்த எண்ணையை வைத்து நாலு நாளைக்கு விளக்கேற்றி இருக்கலாம்!’னு எல்லாம் ஃபீல் பண்றது, தாங்க முடியலை பாஸ்!

பேங்குக்குப் போகும்போது பேனா கொண்டுபோகணும்னு கொடூரமான சட்டம் போட்டாதான் சரிப்பட்டு வரும். பாகவதர் காலத்துல இருந்தே ‘கொஞ்சம் பேனா கொடுங்களேன்’னு எத்தனை சம்பவங்கள்?

ஹோட்டலுக்குப் போனா, சைடு டிஷ்ஷை ஷேர் பண்ணிக்கிற பழக்கத்தை விட்டொழிக்கணும். பின்னே என்னங்க? கறி வேணும்னா எடுத்துக்க வேண்டியதுதானே... நம்ம இலையில இருந்து ‘ஆட்டுக்கறியா இது?’னு கேஷூவலாக் கேட்டுகிட்டே எடுக்கிறதெல்லாம் என்ன பழக்கம், ராஸ்கல்ஸ்!

பார்த்தா பேசுறதும் இல்லை. பேசும்போது கேட்கிறதும் இல்லை. திடீர்னு ஒருநாள் கிளம்பிவந்து ‘வரவர எங்ககூட எல்லாம் பேச மாட்டேங்கிறீங்க. ரொம்ப ஓவரா பண்ணாதீங்க!’னு முந்திக்கிட்டு கோடு கிழிக்கிற கலையெல்லாம் எங்கே இருந்துதான்டா கத்துக்கிறீங்க?

சென்னைக்கு வேலைக்கு வந்தவங்க எல்லோருமே இந்த நபர்களைக் கடக்காம ஊருக்குள்ள கால் வைக்க முடியாது. ‘சென்னையில எங்கே இருக்க? என்ன பண்ற?’ இந்த ஒரு கேள்வியை இன்னும் எத்தனை வருசத்துக்குத்தான்டா கேட்பீங்க, முடியலை!

மோசமானவங்கள்ல, முக்கியமானவங்க இவங்கதான். ‘வெல்வெட் கேக்னு ஒண்ணு இருக்கு, தெரியுமா?’ன்னா, ‘ஓ, சாப்பிட்டிருக்கேனே... ஆனா, செர்ரிப்பழத்தைக் கீறி விட்டிருப்பாங்க!’னு பதில் வரும். ‘ஜங்கிள் புக் படம் சென்னையில எங்கே ஓடுது’னு கேட்டுத்தான் பாருங்களேன்... ‘இன்னுமா ஜங்கிள் புக் பார்க்கலை?’னு மேலும் கீழும் பார்ப்பாங்க. அட ஏங்க, நீங்க என்ன சொன்னாலுமே, ‘இப்படித்தான் எனக்கு ஒருநாள்’னு சொல்ல அவங்ககிட்ட ஆயிரம் கதை இருக்கும். மீ பாவம் இல்லையா?

இதோ, இப்போகூட பாருங்களேன். ரொம்ப சீரியஸா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். சீட்டுக்கு வந்தவன், சட்டுபுட்டுனு சொல்ல வந்ததைச் சொல்லணுமா இல்லையா? ‘ஒரு நிமிஷம்’னு ஹஸ்கி வாய்ஸ்ல கூப்பிட்டவன், ‘சமோசா சாப்பிட்டு வருவோமா?’னு சொல்றான். ஏன்டா, சாதாரண விஷயத்தையும் குண்டு வைக்கிறதுக்கு பிளான் போடுற மாதிரியே பேசுறீங்க!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick