எப்போ மாமா ட்ரீட்?

டெட்டால் போட்டாலும் அழியாத சில கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள் நம்ம முன்னாடி உலாவிக்கிட்டு இருக்கு. எதுக்கெடுத்தாலும் ‘ட்ரீட்’னு அந்தக் கிருமிகள்@ஃப்ரெண்ட்ஸ் கொடுக்கிற அட்ராசிட்டீஸ் இருக்கே...பயங்கரம்!

புதுசா ஒரு பேனா வாங்கி சட்டைப்பையில வெச்சுட்டுப் போனாப்போதுமே. ‘அட செமையா இருக்கே பாஸ். ட்ரீட் எப்போ?’ என ஆரம்பிப்பார்கள்.

‘மேட்ரிமோனியல் வெப்சைட்ல உன் பேரைப் பதிஞ்சிருக்கியாமே..? செமைடா. பாதி கல்யாணம் முடிஞ்சிருச்சு. கண்டிப்பா இன்னிக்கு ட்ரீட் கொடுத்தே ஆகணும்!’

ஊருக்குத் தங்கச்சி கல்யாணத்துக்குப் பணம் அனுப்ப பத்து வட்டிக்கு கந்துவட்டி வாங்கிட்டு வந்தாலும் ‘எப்போ மச்சி ட்ரீட்?’ எனக் கேட்கிறதெல்லாம் கொடுமைடா பக்கி!

புதுசா பைக் வாங்கினா ட்ரீட் கொடுக்கிறதுல நியாயம் இருக்கு. கடன் வாங்கி பைக்குக்கு அட்வான்ஸ் புக் பண்ணிட்டு வந்தாக்கூட ட்ரீட் கேட்குறதெல்லாம் ரொம்ப ஓவர்.

உன்னை தி.நகர் கூட்டிட்டுப்போய் ரோட்டோரம் டி-ஷர்ட் எடுத்தது குத்தமாய்யா? அதுக்குக்கூட ‘புது சட்டை வாங்கினதுக்கு ட்ரீட் தா!’ என அழிச்சாட்டியமாக் கேட்கிறதெல்லாம் அக்கிரமம்.

செருப்பு பிய்ஞ்சு போனதால புதுசா 200 ரூபாய்க்கு செருப்பு வாங்கினா, ‘எப்படியும் 3,000 ருப்பீஸ் இருக்கும்போல உன் செப்பல். எப்போ நண்பா ட்ரீட்?’னு கேட்பானுங்க. சான்ஸ்லெஸ்.

ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன். க்ரீன் டீ குடிக்க ஆரம்பிச்சதுக்கும் பஜ்ஜி சாப்பிடுறதை நிறுத்துனதுக்கும் நான் உங்களுக்கு ட்ரீட் கொடுத்தே ஆகணுமா? பின்னே அதுக்கெல்லாம் ட்ரீட் கேட்டா?

சால்ட் அண்ட் பெப்பர் தாடியா மாறினதுக்கும் மண்டையில முடி கொட்டினதுக்கும் நார்மலா நான் வருத்தப்படணும்டா. அதுக்கும் ட்ரீட் கேட்கிற ஒருத்தனை என்ன பண்ணலாம் ஃப்ரெண்ச்?

இன்னும் ஃபேஸ்புக்ல 5000 லைக்ஸ் வாங்கினதுக்கு, ஹெல்மெட் தொலைஞ்சு போனதுக்கு, வைகோ வாபஸ் வாங்கினதுக்கு, கேப்டன்  விசிறி விட்டதுக்கு, செல்போன் ஸ்க்ராச் ஆனதுக்கு, ஃபேஸ்புக்ல மீம்ஸ் ஃப்ளாப் ஆனதுக்குனு எதுக்கெடுத்தாலும் ட்ரீட் கேட்டா, நான் நாட்டை விட்டே போறதைத் தவிற வேற வழியில்லை பாஸ்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick