இவரும் இன்னொரு பிரபுதேவா!

டெல்லியைச் சேர்ந்த ஷிரேய் கண்ணா என்ற 25 வயதே ஆனவர் பாட்டு, டான்ஸ், எனப் பல திறமைகளைக் கையில் வைத்திருக்கிறார். இதிலென்ன விஷேசம் என்கிறீர்களா? இந்திப் பாடல்களை விட தமிழ்ப் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் இந்த இந்தி சாக்லேட் பாய். ஏராளமான நடன நிகழ்ச்சிகளுக்கு நடன அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். 2013-ல் ஸ்டார் ப்ளஸ் சேனல் நடத்திய ‘இண்டியாஸ் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்’ என்ற போட்டியில் டைட்டிலை ஜெயித்து 50 லட்சம் பரிசு வாங்கியிருக்கிறார். தற்போது தொழில்முறை நடனக் கலைஞராக கலக்கிக்கொண்டிருக்கும் இவருக்கு பல்லேட், கான்டெம்ப்ரவரி, ஜாஸ், ஹிப்ஹாப் வகை நடனங்கள் அத்துபடி.

ஷிரேய் ஐந்து வயது இருக்கும்போதே இவருடைய பெற்றோர்கள் இவருக்குள் இருக்கும் நடனத்திறமையைக் கவனித்திருக்கிறார்கள். பள்ளி நாட்களில் பள்ளிகளுக்கு இடையிலான டான்ஸ் போட்டிகளில் ஆர்வமாக கலந்துகொண்டிருக்கிறார். பஞ்சாப்பின் பிரபல சேனல் ஒன்றில் ஆஜா நச்சிலே (நம் ஊர் ஜோடி நம்பர் ஒன்  மாதிரி) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கால் இறுதிவரை வந்திருக்கிறார். அடுத்து ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் படித்தவருக்கு பாலிவுட்டில் பிரபல டான்ஸ் மாஸ்டரும் இயக்குநருமான ரெமோ டிசோஸா மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய ‘ஏ.பி.சி.டி’ படத்தில் ஹீரோவின் அறிமுகப் பாடலுக்கு ஷிரேய் நடனம் அமைத்தார். அதுவரை ‘எம்.ஜே.5’ என்ற ஹிப்ஹாப் நடனக்குழுவில் ஆடிவந்தவர். தனியாக சிந்தமா டான்ஸிங் என்றொரு டான்ஸ் கம்பெனி தொடங்கித் திறமையான கலைஞர்களைக் கண்டுபிடித்து பயிற்சி கொடுக்கிறார். டி சீரீஸுக்காக இவர் பாடிய ‘நக்ரா வக்ரா’ பாடல் தெறி ஹிட். அதோடு ‘பியார் டியூன் கியா கியா’ என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரிலும் நடித்திருக்கிறார். யோ யோ ஹனி சிங்கின் ‘சிபிதான்’ என்ற ஆல்பத்தில் நடனம் அமைத்து ஆடியிருக்கிறார். இவர் ஆடும்போது மைக்கேல் ஜாக்சனை இமிடேட் செய்கிறார். இவருடைய லைவ் பெர்ஃபார்மன்ஸுக்கு எக்கச்சக்க வரவேற்பு இருக்கிறது. இவருடைய நிகழ்ச்சிகளில் இந்திப் பாடல்களுக்கு இடையில் தமிழ்ப் பாடல்கள் இடம்பெறும் போதெல்லாம் அதிர்கிறது அரங்கம்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick