அது ஒரு களவுக் காலம்!

சவராஜ் நிங்கப்பா! இவர் கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கே இவர் மிகப்பெரிய திருடர்குலத் திலகம். புரியலையா பாஸ்?  தன்னுடைய 100-வது திருட்டு விழாவைப் பல வருடங்களுக்கு முன்பே கொண்டாடியவர். 261-ம் திருட்டில் திருந்திவிட்டார். தன்னுடைய 30 வருட திருட்டுத் தொழிலில் பணம், நகை, எலெக்ட்ரானிக்ஸ் ஐட்டம்ஸ் என இவர் கை வைக்காத பொருட்களே இல்லை. இவர் மேல் 50 வழக்குகள் இருக்கின்றன. 20 வருடம் ஜெயிலில் வேறு இருந்திருக்கிறார்.

தற்போது திருந்தி விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பசவராஜ் ஏழைகளுக்கு இலவசக் கல்வி வேண்டும் என  பாதயாத்திரை போகும் அளவுக்கு பச்சை மண்ணாக மாறிவிட்டார். சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். ‘‘நான் 16 வயதில் பசிக்காகத் திருடினேன். ஊர் மக்கள் என்னைத் திருட்டுப்பயல்னு திட்ட, கடுப்பாகித் தீவிரமான திருடனாகி விட்டேன். இருந்தாலும் ஒரு கொள்கை வெச்சுருக்கேன். ஏழைகள் வீட்டில் கை வைக்க மாட்டேன். ஹை கிளாஸ் வீடுகள் மட்டும்தான். குறிப்பா கவர்ன்மென்ட் வேலையில் இருக்கிறவங்க வீடுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உடனே பாய்ஞ்சிடுவேன். அதிகபட்சமா ஐந்து லட்சம் பணமும், இரண்டு கிலோ தங்கமும் ஆட்டையைப் போட்டிருக்கேன். 2010-ல் ஒரு கொள்ளை சம்பவத்தில் மாட்டி சிறையில் இருந்தப்போ, எனக்கே மனசு உறுத்துச்சு. உடனே திருந்திட்டேன். வெளியில் வந்ததும் கொள்ளையடிச்ச வீடுகளுக்கு நேராகப் போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரு வீட்டில் மன்னிப்பு கேட்டப்போ, எதுக்கு மன்னிப்புனு கேட்டாங்க, நான் உங்க வீட்ல திருடியிருக்கேன்னு சொன்னேன். சும்மா விளையாடாதீங்கனு சொன்னாங்க. உடனே கொள்ளையடிச்ச தேதி, பணம், நகை, எல்லா விபரத்தையும் சொல்ல, அப்பறம்தான் நம்பினாங்க. இதுவரை 100 வீடுகளில் இப்படி மன்னிப்புக் கேட்டுட்டேன். மீதி வீடுகளுக்கும் விரைவில் விசிட் அடிக்கப்போறேன்’’ என்கிறார் பசவராஜ்.

பட், உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick