ஏன் இந்த கொலவெறி?

ப்ராங்க்ஸ் எனப்படும் வேடிக்கை வம்பு நிகழ்ச்சிகளை பக்காவாக ப்ளான் பண்ணி யூ டியூபில் வெளியிட்டு வைரலாக்கி ஹிட்டடிக்கும் ‘நெகட்டிவ்’ குரூப்தான் ‘ஜலால் பிரதர்ஸ்’.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் மேக்ஸ் ஜலால், அர்மான் ஜலால் மற்றும் ரெபீன் ஜலால் என்ற  மூவர் அணிதான் ஜலால் பிரதர்ஸ். இவர்களுடைய வேலையே பொது இடங்களில் பாம் வைப்பது, துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற டெரரிஸ ப்ராங்க்ஸ்களை செய்து பார்த்துப் பொதுமக்களை மிரள வைப்பதுதான். 18, 19, 20 வயது ஆகும் இந்தச் சகோதரர்கள் சமீபத்தில் போலீஸால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பே ஆஸ்திரேலியாவில் பலமுறை தீவிரவாதத் தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தாலும் சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோக்களில் எல்லை மீறி இருக்கிறார்கள். குழந்தைகளையும் வீடியோக்களில் நடிக்கவைத்து பயமுறுத்தி இருக்கிறார்கள். சாலையோரம் டெலிபோன் பூத்தில் பேசிக்கொண்டிருக்கும் தந்தையோடு நிற்கும் சிறுமி மீதும் தந்தை மீதும் காரில் போகும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது போல ஒரு லைவ் ப்ராங்க் செய்து மெல்பர்ன்வாசிகளிடம் கிலி ஏற்படுத்தியிருக்கிறார்கள். குழந்தையின் உடலில் பாம் கட்டி மாலுக்குள் நடமாட விடுவது, லைவ்வாக துப்பாக்கிச் சண்டை ஒன்றை பொது இடத்தில் நடத்திக் காட்டுவது என எல்லாமே நினைத்துப் பார்க்கவே குலை நடுங்க வைப்பவை. ஆனால், கூலாகப் பொது இடத்தில் நடித்த சூட்டோடு அதை அழகாக எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளி அல்லு கிளப்புகிறார்கள். கடைசியாக ப்ராங்கில் நடித்த தங்கள் குடும்ப உறுப்பினர்களான அந்தச் சுட்டிகளோடு செல்ஃபி எடுத்துப் போட்டு ‘பெப்பே’ காட்டுவார்கள். இந்த முறை போலீஸ் உள்ளே தூக்கி வைத்து கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

‘‘விளையாட்டாகத்தான் இதைச் செய்தோம். இப்போது இணையத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். தத்ரூபமாக ஒரு தாக்குதலைச் செய்து காட்டுவது என்பது லேசுபட்டக் காரியமில்லை. போலீஸார் விழிப்பு உணர்வுடன் இருக்கிறார்களா என்பதை டெஸ்ட் செய்வதே எங்கள் நோக்கம்!’’ எனத் தெனாவெட்டாகச் சொல்லி இருக்கிறார்கள் இந்த ஜலால் பிரதர்ஸ்.

விடுவார்களா ஆஸ்திரேலிய போலீஸ்? இவர்களை வளரவிட்டால் நிஜத் தீவிரவாதத் தாக்குதலையும் நடத்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick