தெருப்பயிற்சிக் கூடம்!

பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பல வருடங்களாக சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது பாலஸ்தீனர்கள்தான். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தார்கள், இறந்தார்கள். கட்டடங்களும், வீடுகளும் உருக்குலைந்து போயின. அவற்றில் சிமென்ட் சுவர்கள் பெயர்ந்து முறுக்குக் கம்பிகள் வெளியே நீட்டியபடி இருக்கின்றன.

காஸா நகரத்தில் இருக்கும் சில இளைஞர்கள் கான்கிரீட் சுடுகாடாக மாறியிருக்கும் தங்களுடைய நகரத்தின் நிலைமையை உலகிற்குப் புரியவைக்க ‘ஸ்ட்ரீட் வொர்க் அவுட்’ என்ற உடற்பயிற்சிக் குழுவைத் தொடங்கியிருக்கிறார்கள். ஸ்ட்ரீட் வொர்க் அவுட் என்பது பெயர்ந்து நிற்கும் கட்டடங்களின் கம்பிகளில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்வது. இந்தக் குழுவைப் பற்றி ஒசாமா என்ற சிறுவன் அவருடைய அப்பா முஹம்மது அபெட் என்பவரிடம் கூறியிருக்கிறான். அபெட் ஒரு புகைப்படக் கலைஞர். உடனே கேமராவைக் கையில் எடுத்தவர். இந்தக் குழுவைச் சந்தித்து விதவிதமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அதை சமூக வலைதளங்களில் வெளியிட எக்கச்சக்க ஆதரவு கிடைத்திருக்கிறது. உடனே ‘பார் பாலஸ்தீன்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி இதற்கு ஆதரவு திரட்டியிருக்கிறார்கள். எயாட் அயாத் என்பவர் இந்த ஸ்ட்ரீட் வொர்க் அவுட்டில் எக்ஸ்பர்ட். அந்தரத்திலேயே நீண்ட நேரம் பேலன்ஸ் செய்வது, தலைகீழாகத்  தொங்குவது, தாவுவது, குதிப்பது என்று உடைந்த கட்டடங்களை மேலும் உடைக்கிறார். இவை வழக்கமான ஜிம் பயிற்சிகள்தான் என்றாலும் இந்தச் சூழல் அதை வேறுவிதமாகக் காட்டுகிறது.

புகைப்படக் கலைஞர் அபெட் கூறும்போது பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை உலக மக்களுக்கு இந்தப் படங்கள் விளக்கும். இந்த மாதிரி ஒரு சூழலில் பயிற்சி செய்வதற்கு அபாரமான உடல் வலிமையும் கொஞ்சம் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் போதும். இவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தனியாக எந்த ஒரு பயிற்சியாளரும் கிடையாது. யூ டியூபில் இருக்கும் உடற்பயிற்சி வீடியோக்களைப் பார்த்து மட்டுமே இவர்கள் பயிற்சி செய்கிறார்கள். சண்டை, வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணத்தால் நொந்துபோய்க் கிடந்தவர்கள் இதன் மூலம் கவலைகளை மறந்து கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறார்கள். உலகின் முதல் ஸ்ட்ரீட் வொர்க் அவுட் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தற்போது பாலஸ்தீனத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick