ஃப்ரீயா படம் பார்க்கலாம்!

சென்னையில் ஏரியாவுக்கு நான்கு, ஐந்து தியேட்டர்கள் பார்க்கலாம். இந்தப் பெருநகரைத் தாண்டினால், ஊருக்கு ஒன்றிரண்டு தியேட்டர்கள் கண்ணில்படும். கிராமங்களில் சொல்லவே வேண்டாம். ரிலீஸான புதுப்படத்தை ஆறேழு மாதங்கள் கழித்து டூரிங் டாக்கீஸில் திரையிடுவார்கள். பெரும்பாலான கிராமங்களில், ஊர்த் திருவிழாவுக்கு சினிமா காட்டுவதற்காகக் கட்டப்படும் திரைகள்தான் திரையரங்குகள். இந்த நிலையைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருக்கிறது ‘கேரவன் டாக்கீஸ்’. டிஜிட்டல் சினிமா டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனமான ‘யூஎஃப்ஓ’வின் ஓர் அங்கம் இது. அப்படி என்ன செய்கிறார்கள்?

இந்தியா முழுக்க பத்தாயிரத்திற்கும் குறைவான திரையரங்குகளே இருக்கின்றன என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. ஆனால், இந்தியாவின் மக்கள் தொகை நூறு கோடிக்கும் அதிகமாச்சே? அத்தனை மக்களும் சினிமா பார்ப்பது சாத்தியமா என்றால், சத்தியமாக இல்லை. தவிர, இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில்தான் இருக்கிறார்கள். திரையரங்குகளே இல்லாத கிராமங்களில் மக்கள் சினிமா பார்க்க நினைப்பது, பெருங்கனவு. ஆக, ஒரு சினிமா பார்க்க இத்தனை சிரமங்கள் இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும். கிராமப்புற மக்களும் புதுப்படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கேரவன் டாக்கீஸை’ உருவாக்கியிருக்கிறது யூஎஃப்ஓ நிறுவனம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்தத் திட்டம் இன்று அதிரிபுதிரி ஹிட்!

நடந்து முடிந்த தேர்தலில் பிரசார வண்டிகளில் தலைவர்கள் பேசும் வீடியோக்களையும், பிரசாரப் படங்களையும் திரையிட்டுக் காட்டுவதற்காக வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்திருப்பார்கள் அரசியல்வாதிகள். அதேதான். ஒரு வேன். அதில் திரையிடத் தேவையான புரொஜெக்டர், திரை உள்ளிட்ட பொருட்கள் என சிம்பிளாகக் கிளம்பும் ‘கேரவன் டாக்கீஸ்’ மாலை நேரத்தில் ஏதாவது ஒரு கிராமத்திற்குள் புகுந்துகொள்ளும். வண்டி ஊருக்குள் வருவதற்கு முன்பு, இன்று திரைப்படம் காட்டப்படுகிறது என்ற அறிவிப்பைச் செய்துவிடுவார்கள். பகல் நேரங்களில் சூரிய ஒளியை மீறிப் படம் பார்க்க முடியாது என்பதால், இரவு நேரத்தில் மட்டுமே திரையிடல் நடைபெறும். ‘கபாலி’யாகவே இருந்தாலும், இந்தத் திரையிடல் இலவசம்தான். ஆம், இதற்காக மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. வண்டியைச் சுற்றி நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் ஒட்டப்படுகின்றன. விளம்பரம் கொடுத்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் என நான்கு மாநிலங்களில் 24 கேரவன் வண்டிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. வாரத்திற்கு 150-க்கும் அதிகமான கிராமங்களில் திரையிடலை நடத்துகிறார்கள். மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை என கிராமங்களில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து திரையிடல் திட்டமிடப்படுகிறது. இந்தத் திட்டத்தைக் கூடிய விரைவில் இந்தியா முழுக்கக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறது ‘யூஎஃப்ஓ’ நிறுவனம்.

எட்றா வண்டியை!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick