ஆட்ட நாயகர்கள் சினிமா!

ந்த வருடம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்து காத்துகிட்டு இருக்கு. விருந்து வைக்கப்போவது கிரிக்கெட் உலகம் அல்ல, சினிமா உலகம். புரியலையா? மேட்டரைப் படிங்க...

அசார்: ஹைதராபாத் நகரில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற தன் கனவை உண்மையாக்க கடுமையாக உழைத்து, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, பின்னர், அணிக்கு கேப்டனாக உயர்ந்து, சூதாட்டப் பிரச்னையில் சிக்கி தன் கிரிக்கெட் வாழ்க்கையையே தொலைத்த நமது நாட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய விளையாட்டு வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம்தான் இந்த ‘அசார்’. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது அசாருதீனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு நிகராக, அவரது சொந்த வாழ்க்கை பற்றியும் இந்தப் படம் பேசும் என்பது தெரிகிறது. இந்த மாதம் ரிலீஸான இந்தப் படத்தில் அசாருதீனாக பிரபல நடிகர் இம்ரான் ஹாஸ்மி நடித்திருக்கிறார். நர்கிஸ் ஃபக்ரி, அசாருதீனின் இரண்டாவது மனைவியான சங்கீதாவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு லாரா தத்தா, ப்ரச்சி தேசாய், கௌதம் குலாதி, மஞ்சோத் சிங் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமால் மாலிக், ப்ரீதம் ஆகியோர் இசையமைக்க பிரபல அமெரிக்க எழுத்தாளர் டோனி டி சூஸா படத்தை இயக்கியிருக்கிறார்.

எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி: இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையின் சொல்லப்படாத பக்கங்களை சொல்லவிருக்கும் படம். ரயில்வே டிக்கெட் பரிசோதகராக வாழ்க்கையை ஆரம்பித்து இன்று உலக கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத அணித் தலைவனாக உயர்ந்திருக்கும் தோனியின் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தையும் பேசவிருக்கும் படம். நீரஜ் பான்டே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லரும் பெரும் வரவேற்பைப் பெற்று ட்ரெண்ட் ஆனது. இந்தப் படத்தில் ‘ரோஜா கூட்டம்’ பூமிகாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. லஷ்மி ராய் நடிக்கலையா?

சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ் : பத்தாம் வகுப்பில் ‘சச்சின்’ பற்றிய கட்டுரை படித்த எல்லோருக்கும் அவரது வாழ்க்கை வரலாறு ஓரளவாவது தெரிந்திருக்கும். இப்போது அவர் வாழ்க்கை படமாகவிருக்கிறது. ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கும் இந்தப் படத்தில் சச்சினாக நடிக்கவிருப்பது சச்சினேதான் (சந்தோஷத்துல கண் கலங்குது). சிறுவயது சச்சின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது அவரது மகன் அர்ஜீன். மற்றொரு கூடுதல் அம்சம், இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருப்பது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் (இதெல்லாம் கனவா? இல்ல நிஜமா?). சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸரை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட டீஸர் வைரலோ வைரலானது. படம் இந்த வருடமே ரிலீஸ் ஆகவும் இருக்கிறது. சச்சின்...சச்சின்...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick