“கோட் ஷூட் போட ஆசை!”

‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றைவரி வசனம் மூலம் ஓகோ என்று புகழ் பெற்றவர் நடிகர் தவசி. அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவரிடம் அடித்த அரட்டை இது.

“நான் ஒரு விவசாயி தம்பி. தேனி மாவட்ட வயல்காடுகளில் சுற்றித் திரிஞ்சவன். நாட்டுபுறப்பாட்டுனா எனக்கு உசுரு. சினிமா ஆசையில் பாரதிராஜாவுடன் சேர்ந்து ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் வேலை பார்த்தேன். என்னோட பெரிய மீசையைப் பார்த்த பாரதிராஜா நீங்க நடிங்கனு சொல்லிட்டார். தொடர்ந்து வாய்ப்புகள் சரியா அமையாததால திரும்ப கிராமத்துக்கே வந்துட்டேன். மறுபடியும் 2007-ல் பாலா சார் ‘நான் கடவுள்’ வாய்ப்புக் கொடுத்தார். இந்தப் படம் முடியும் வரை வேற எந்தப் படத்திலும் நடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார். எனக்கு பாலா சார் மேல நம்பிக்கை இருந்துச்சு. நினைச்ச மாதிரி படமும் ஹிட். என் சினிமா ரூட்டும் க்ளியர். ‘களவாணி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜில்லா’, ‘வீரம்’னு நிறைய வாய்ப்புகள் வரிசையா வர ஆரம்பிச்சுது. குறிப்பா ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பெருசா தூக்கிவிட இப்போ நல்லபடியாப் போய்க்கிட்டிருக்கு!”

“உங்க மீசையைப் பத்திச் சொல்லுங்க?”

”சின்ன வயசுல சலூனுக்கு முடிவெட்டப் போயிருந்தேன். உங்களுக்கு கிடா மீசை வெச்சா சூப்பரா இருக்கும்னு கடைக்காரர் சொன்னார். சரின்னு வெச்சுக்கிட்டேன். எனக்கு சிலம்பம் தெரியும். கம்பு சுத்தும்போது பெரிய மீசை இருந்தா பார்க்க கெத்தாவும் இருக்கும்ல. அதுதான் தொடர்ந்து வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைக்க இதுவும் ஒரு  காரணம். இந்த மீசையால ஒரு பெரிய பிரச்னையையும் சந்திச்சேன். கல்யாணம் பண்ணிக்க பொண்ணு தேடினப்போ மீசையைப் பார்த்துட்டு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன பண்றது... காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்!”

‘‘கோட் சூட் போட்டெல்லாம் நடிக்க மாட்டீங்களா?”

“நானா நடிக்க மாட்டேன்னு சொல்றேன், அந்த மாதிரி கேரக்டர் கொடுக்க மாட்டேங்கிறாங்களேப்பா. எப்போ பார்த்தாலும் பஞ்சாயத்து பண்ற கேரக்டராகவே கொடுத்து மரத்தடியிலேயே உட்கார வெச்சுடுறாங்க. நான் என்ன பண்ண முடியும், சொல்லுங்க?

அதுமட்டுமா, தமிழ் சினிமாவில் பூசாரியாவும், கோடாங்கியாவும் அதிகமா நடிச்சது நானாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். நெசமா சொல்றேன். எனக்குள்ளே கருப்பு அப்பப்போ இறங்கி அருள்வாக்கு சொல்வார். பல தடவை அது பலிக்கவும் செஞ்சிருக்கு, இது மட்டுமா ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எல்லாத்திலும் ‘கருப்பன் குசும்புக்காரன் லைக்ஸ் கேட்கிறான்’னு நம்ம போட்டோவைப் போட்டுத்தானே எல்லாரையும் கலாய்ச்சிக்கிட்டு  இருக்காங்க, இப்படி ஒரு பெயர் கிடைச்சதே பெரிய சந்தோஷம்!” என மீசையை முறுக்கிச் சிரிக்கிறார் தவசி.

அடுத்த பஞ்சாயத்துக்கு நேரமானதால் விட்டேன் ஜூட்!

-ஜுல்ஃபி, படங்கள்: சக்தி வி.அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick