படிச்சாப் பசிக்குமே!

மிழ் சினிமா காமெடிக் காட்சிகளில் சோற்றுக்கு முக்கியமான இடம் இருக்கு. சோறு திங்கிற காட்சியில் நம்ம காமெடியன்கள் ஆடியன்ஸுக்கு வெரைட்டியா விருந்து வெச்சிருக்காங்க. அப்படியான படங்களை ஒரு ரவுண்டு பார்க்கலாமா பாஸ்...

ராமராஜனும் கவுண்டரும் சேர்ந்து காமெடியில் கலக்கிய படம் ‘பாட்டுக்கு நான் அடிமை’. பேசாம இந்தப் படத்துக்கு சோத்துக்கு நான் அடிமைனு வெச்சிருக்கலாம். அந்த அளவுக்கு சாப்பாட்டு ராமனாக இருப்பார் ராமராஜன். எவனோ சொந்தக்காரன் சோத்துக்கு வந்துட்டான்டோய்னு கவுண்டர் கஞ்சப் பிசினாரியா நடிச்சிருப்பார். ஆள் உயரத்துக்கு வாழை இலை விரிச்சு சாப்பிடுவார் ராமராஜன். சாப்பிடும்போது இடையிடையே ‘பிரியாணி அரிசி செம ருசியா இருக்கு, அத்தை சுட்ட வடை அட்டகாசமா இருக்கு, அக்கா சுட்ட அப்பளம் கலர் கலரா இருக்கு’னு, ஒவ்வொரு ஐட்டத்தையும் பாராட்டி அதை சமைச்சவங்களுக்கு கவுண்டரிடம் மிதி வாங்கிக் கொடுப்பார். ‘டேய்... இனிமே உன் வாழ்கையில் சோறே திங்க மாட்டியா? வேட்டியை ஏன் லூஸ் பண்றே, அவுத்தே வெச்சிடு’னு கவுண்டர் சரமாரியா கவுன்ட்டர் கொடுத்துக்கிட்டே இருப்பார். கடைசியா ‘எல்லோரும் வாங்க ஒண்ணா சேர்ந்து இலையை எடுப்போம்’னு ராமராஜன் கூப்பிட ‘ஏன் இலையைக் கொண்டுபோய் அடக்கம் பண்ணப்போறியா’னு கவுண்டர் கேட்கிறது காமெடியின் உச்சம்.  

ராஜ்கிரண்னு சொன்னாலே டக்குனு நல்லி எலும்புதான் ஞாபகத்துக்கு வரும். மாறாக ‘எல்லாமே என் ராசாதான்’ படத்தில் ‘ஆத்தா... மீனை நல்லா பெரியப் பெரிய துண்டாப் போட்டு செக்கச்செவேல்னு பொறிச்சுக் குடுப்பேனு பார்த்தா, இது வெள்ளை கலர்ல பல்லை இளிச்சுக்கிட்டு இருக்கு. எவன் திம்பா இதை’னு கடுப்பாவார். ‘ஒரே ஒரு வாய் தின்னுப் பாருடா’னு கே.ஆர். விஜயா அட்வைஸ் பண்ண டேஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, வெள்ளை கலர் மீனை காலி பண்ண ஆரம்பிச்சுடுவார். தமிழ் சினிமா வரலாற்றில் தன்னைக் கடத்திவந்த ஹீரோவுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப்போட்ட முதல் ஹீரோயின் சங்கீதாதான்!

‘வெற்றிவேல் சக்திவேல்’ படத்தில் வைகை ஆற்றில் விரால் மீன் பிடிச்சுக் கொண்டு வந்திருகேன்னு வைகைப் புயல் மீனும் கையுமா செம இன்ட்ரோ கொடுப்பார். அதை எப்படி சமைக்கணும்னு அவரே ரெஸிப்பி டிப்ஸும் கொடுப்பார். ‘மீனை நோகாம துண்டு துண்டா நறுக்கி, அம்மியில அரைச்ச மசாலாவை அது மேலே அப்பி, எண்ணெயில போட்டுப் பொறிச்சு, கமகமனு சமைச்சு, மண்டையை என் மாமனுக்கும். வாலை என் மருமகனுக்கும், நடுத்துண்டை உன் ஆசைத்தம்பி எனக்கும் கொண்டு வாக்கா’னு குஷ்புவிடம் ஆர்டர் போடுவார். டைனிங் டேபிளில் வடிவேலு எதிர்பார்த்த அந்த நடுத்துண்டெல்லாம் சத்தியராஜ் ஆட்டையைப் போட செம கடுப்பாவார். சமைச்சது மருமகள்னு தெரிஞ்சதும் கோபம் வந்து எல்லாரும் பட்டினி கிடப்பாங்க.  நடுச்சாமத்துல ஒவ்வொருத்தரா திரும்ப வந்து திருடித் தின்னு எல்லாத்தையும் காலி பண்ணிடுவாங்க. கடைசியா வர்ற வடிவேலு ஹாட் பாக்ஸைத் திறந்து பார்த்தா, அதில் ஒரே ஒரு பருக்கை சோறும், ஒரு சொட்டுக் குழம்பும் இருப்பதைப் பார்த்து அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் இருக்கே... அது அடுத்த லெவல்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick